அறியாதவை உளறேல், ஆளுநரே!

“அரைகுறை அறிவு ஆபத்தானது” எனும் முதுமொழியை நிரூபிப்பது போல, ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவர், வள்ளலார் பற்றியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி, வாங்கிக் கட்டிக்கொண்டதை நாமறிவோம்.

அய்யா வைகுண்டர் பிறந்த நாளில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர், சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக அய்யா வைகுண்டர் தோன்றினார் என்று உளறிக் கொட்டினார். மேலும் அய்யா அருளிய “அகிலத்திரட்டு அம்மானை” என்கிற புனித நூல் ஞானம் மற்றும் ஆன்மிகத்தின் ஊற்றாகவும், சனாதன தர்மத்தின் நியதியாகவும் விளங்குகிறது என்றும் முழுக்க முழுக்க தவறாகப் பேசினார்.

‘குங்குமம் என்பதை நானறிவேன், அது மஞ்சள் போல வெள்ளையாய் இருக்கும்” என்று சொல்லும் ஒரு முட்டாள் அல்லது பொய்யன், இவை மூன்றையுமே அறிய மாட்டான் என்பதுதான் உண்மை.

சனாதனம் போற்றி நின்ற “பண்டார வகை” திருவிதாங்கூர்–கொச்சி சமஸ்தான ஆட்சியாளர்கள் சூத்திர மக்களுக்கு இழைத்தக் கொடுமைகளை “அகிலத்திரட்டு அம்மானை” எப்படி விவரிக்கிறது என்று பாருங்கள் (பக்.117):

பாழிலேச் சான்றோர்க்குப் படுனீசன் கொள்ளுகின்ற
ஊழியங்களெல்லாம் உரைக்கக் கேௗன்போரே
பனை கேட்டடிப்பான் பதனீர் கேட்டேயடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டி கேட்டிடிப்பான்
நாருவட்டியோலை நாள்தோறுங் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டை கேள்ப்பான் நெட்டோலைதான் கேள்ப்பான்
கொடு வாவெனவே கூழ்ப்பதனி கேட்டடிப்பான்
சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே ஊற்றி
கொல்லைதனில்ச் சான்றோரை கொண்டு வாவென்றடிப்பான்
மீச்சுக் கருப்புக்கட்டி மிளகு பலகாரமிட்டு
வீச்சுடனே கொண்டு வீட்டில் வாவென்றடிப்பான்
வட்டிக் கருப்புக்கட்டி மணற் கருப்புக்கட்டியோடு
வெட்டக் கருப்பக்கட்டி வெண் கருப்புக்கட்டியோடு
தோண்டிக்கும் பாய்க்கும் சுமடு அதுக்கும் ஓலை
வேண்டியதெல்லாமெடுத்து விரைவில் வாவென்றடிப்பான்
காலைப் பதனீர் கண்முத்தா நொங்குகளும்
மாலைப் பதனீர் வற்றக்காயும் பதனீர்
கொதிக்கும் பதனீர் கொண்டு வாவென்றடிப்பான்
விதிக்குகந்த சான்றோர் விரைவாய்க் கொடுத்திடவே
இத்தனையும் வேண்டி இவன் கொண்டுபோனாலும்
பத்தியுள்ள சான்றோர்க்குப் படுந்துயரமாறாதே
பனையிலுள்ள வஸ்து பலநாளுமிப்படியே
வினை கொண்ட பாவி வேண்டியவன் போனாலும்
சான்றோர்க்கு நன்மை சற்றுசெய்ய வேணுமென்று
மாண்டோர் கணீசன் மனதில் வைக்க மாட்டானே
உய்கொண்ட சான்றோர் உடம்புருகுந் தேட்டையெல்லாம்
நொய் கொண்ட நீசன் நோகப் பறித்தானே

இப்படியாக சனாதன நீசன் மக்களைக் கொடுமைப்படுத்தினான். பல்வேறு வரிகளை விதித்து, மக்களைக் கசக்கிப் பிழிந்தான். அவர்களின் உழைப்பைத் திருடி, உபத்திரவங்கள் பல செய்த போது, மக்கள் வெகுண்டெழுந்தார்கள். முழுநீச வம்சத்தையேக் கொன்றொழிக்க முனைந்தார்கள். அப்போது அய்யா வைகுண்டர் தம் மக்களுக்கு அறவழியை போதித்தார் (பக். 277):

“…கோபமதைப் புத்திதனிலடக்கி
பொறுத்திருந்தவரே பெரியோரே ஆகுமக்கா
அறுத்திட என்றால் அபூருவமோ எந்தனக்கு
வம்புசெய்வதைப் பார்த்து வதைக்க வந்தேன் அக்குலத்தை
அன்பு குடிகொண்ட அதிக மக்கா நீங்களெல்லாம்
பொறுத்துயிருங்கோ பூலோகமாள வைப்பேன்.”

மக்கள் அய்யா போதித்த அகிம்சை வழியை ஏற்றுக்கொண்டு வழிவிட்டு நின்றார்கள் (பக். 277):
“மறுத்துரையாடாமல் மக்களென்ற சான்றோர்கள் என்னசெய்வோமென்றிவர் கையைத்தான் கடித்து
பின்னே விலகிப் பெரியவனே என்று நின்றார்.”

ஆனால் சனாதன நீசன் அந்த மென்முறையை தவறாகப் புரிந்துகொண்டான் (பக். 277):
“நீசன் மகிழ்ந்து எதிர்ப்பாரைக் காணோமென்று
பாசக்கயிறு கொண்டு பரமன் வைகுண்டரையும்
கட்டியிறுக்கிக் கைவெடியாலிடித்து கெட்டியிருக்கி கீழேபோட்டே மிதித்து
தலைமுடியைத்தான் பிடித்துத் தாறுமாறாயிழுத்து
குலையைக் குலைத்ததுபோல் குண்டரைத் தானலைத்து
குண்டியிலே குத்திக் குனியவிடுவான் ஒருத்தன்
நொண்டியோ என்று நெழியிலே குத்திடுவான்
வெடிப்புடங்கால் சுவாமி மேலெல்லாம் தானிடித்து
அடிப்புடங்கு கொண்டு அடித்தடித்துத் தானிழுப்பான்
சாணாருக்காகச் சமைந்தாயே சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப் பதனிக்காறா
பனையேறிச் சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி
அனைவோரையும் வருத்தி ஆபரணந் தேடவென்றோ
சமைந்தாய் சுவாமியென்று சாணாப் பனையேறி
பனைச்சிரங்கின்னம் பற்றித் தெளியலையே
உனைச் சுவாமியென்றால் ஒருவருக்குமேராதே”
என்றெல்லாம் பகடி செய்தான். மேலும் மக்களைக் கொடுமைப்படுத்தினான் சனாதன நீசன்.

வரலாறு இப்படியிருக்க, சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக அய்யா வைகுண்டர் தோன்றினார் என்று ஆர்.எஸ்.எஸ். ரவி நேர் எதிராகப் பேசுகிறார். அறிவும் கிடையாது, அறமும் தெரியாது, அடக்கமும் புரியாது — இவர்களெல்லாம் எப்படித்தான் உயர்கிறார்களோ?

சுப. உதயகுமாரன்,
நாகர்கோவில்,
மார்ச் 5, 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *