எப்ஸ்டீன் ஃபைல்கள் கடுமையான உன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான மன உளைச்சல்கள் வரும்போது இரண்டு விசயங்களில் கவனம் செலுத்துவேன். ஒன்று தியானத்தில் இறங்குவது. மற்றையது பாடல்களைக் கேட்பது. இன்று பாடல்களைக் கேட்கத் தொடங்கினேன். எனது பிளேலிஸ்டில் உள்ள ஜென்சியில் பாடல்கள் அவை. எனக்கு எப்போதும் மனதின் அடியாளம் வரை பயணிக்கும் குரலாக அது இன்றுவரை இருக்கிறது. அப்போதுதான் தோன்றியது அது குறித்து எழுதினால் என்ன? அதுவே இந்தப் பத்திக் கட்டுரை.
தமிழ் சினிமா இசை வரலாற்றை ஒரு பிரம்மாண்டமான, நிசப்தம் நிலவும் நூலகமாகக் கற்பனை செய்து கொள்வோம். அதில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எஸ்.பி.சைலஜா, செர்யா கோஸல் என இன்னும் ஏகப்பட்டோர் உள்ளனர். அவர்கள், தோல் அட்டை போட்ட, தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட, இலக்கணச் சுத்தமான பெரும் காவியங்கள். அவற்றைத் தொடும்போதே நமக்குள் ஒரு பயபக்தி எழும். ஆனால், ஜென்சி? அவர் அந்த நூலகத்தின் ஜன்னலோரத்தில், யாரோ அவசரமாகக் கிறுக்கி வைத்துவிட்டுப் போன ஒரு துண்டுச் சீட்டு. அதில் கவிதை இருக்கிறதா, கிறுக்கல் இருக்கிறதா என யோசிக்கும் முன்பே, அது காற்றிலே பறந்து வந்து நம் முகத்தில் ஒட்டிக்கொள்கிறது. அதை எடுத்துப் படிக்கும்போது நம் உதட்டில் ஒட்டிக்கொள்ளும் அந்தப் புன்னகைதான் ஜென்சி! சுருதி சுத்தத்தையும், உச்சரிப்பையும் மைக்ராஸ்கோப் வைத்து பார்க்கும் விமர்சகர்களெல்லாம் ஜென்சியின் குரலைக் கேட்டால் திடுக்கிடக்கூடும். நல்லவேளை, இசைஞானி இளையராஜாவுக்கு அந்த ‘லட்சியவாதி’ நோய் இல்லை. அவருக்கு விசித்திரமான குரல் கேட்கும் அபூர்வ சக்தி இருந்திருக்க வேண்டும்.
ஜென்சியின் குரலை விவரிப்பது ஒரு சுவாரஸ்யமான அவஸ்தை. மற்ற பாடகிகள் “இதோ நான் பாடுகிறேன், உலகம் கேட்கட்டும்!” என்கிற தோரணையில் பாடுவார்கள். ஆனால் ஜென்சி, தன் வீட்டு குளியலறையிலோ அல்லது சமையலறையில் ரசம் வைக்கும்போதோ தனக்குத்தானே பாடிக்கொண்டிருப்பதைப் போலவும், நாம் அவருக்குத் தெரியாமல் அதை ஒட்டுக்கேட்பது போலவும் ஒரு நெருக்கமான உணர்வைத் தருகிறார். கம்ப்யூட்டர் துல்லியத்தைத் தாண்டியதொரு குரல் அது. சற்று கரகரப்பு, நிறைய இனிமை, கொஞ்சம் நடுக்கம் என ஒரு கலவை. ஒரு டியூன் செய்யப்படாத கிட்டாரை, மீட்டும் போது வரும் இசை. பிறிபாடகிகளின் துல்லியமான டியூனிங்கை விட நமக்கு நெருக்கமாகிறது. ஏனெனில், அதில் ஒரு “அக்கறையின்மை” இருக்கிறது. ரிக்கார்டிங் தியேட்டரைத் தாண்டி, அது ஒரு ‘வாழ்க்கையின்’ குரலாக ஒலிக்கிறது.
இங்குதான் விஷயமே இருக்கிறது. ஜென்சி ஒரு மலையாளி. அவர் தமிழை உச்சரிக்கும் விதம் தமிழுக்கே ஒரு புது அழகியலைக் கற்றுக் கொடுத்தது. “ழ”கரத்தை “ல”கரமாக மாற்றினால் தமிழ் வாத்தியார்கள் பிரம்பை எடுப்பார்கள். ஆனால் ஜென்சி ‘முள்ளும் மலரும்’ படத்தில் “அடி பெண்ணே… பொன்னூஞ்சல் ஆடும் இளமை…” என்று பாடும்போது, அந்த உச்சரிப்புப் பிழைகள் மழலையின் கொஞ்சல் போல நமக்கு இனிக்கிறது. அவர் “மயக்கம்” என்பதை “மய்க்கம்” என்று பாடினாலும், “வாலிபம்” என்பதை இன்னும் கொஞ்சம் கொஞ்சிக் கொலை செய்தாலும், நாம் அதை ரசிக்கிறோம். அந்தப் பிழைகளில் ஒரு “அப்பாவித்தனம்” இருக்கிறது. எஸ்.ஜானகி பாடினால் அது ஒரு முதிர்ந்த பெண்ணின் குரல். ஜென்சி பாடினால், அது அப்போதுதான் காதலில் விழுந்த, தமிழை விட காதலை அதிகம் நேசிக்கிற ஒரு டீன்-ஏஜ் பெண்ணின் குரலாகவே ஒலிக்கிறது.
இன்றும் பலரால் தேடிக் கேட்கப்படும் அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு உணர்வுக் குவியல். ‘ஜானி’ படத்தின் “என் வானிலே” பாடல் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். பாடலைக் கடந்து அது ஒரு காதல் மனதின் கிசுகிசுப்பான முனகல். “ஒரே… வெண்ணிலா…” என்று அவர் இழுக்கும்போது, அந்த ‘லா’ வில் ஒலிக்கும் நடுக்கம் தனிமையின் வலியைக் கடத்துகிறது. ஸ்ரீதேவி குழைந்து குழைந்து எத்தனை பாவனை காட்டினாலும், ஜென்சியின் குரலில்தான் ஈரம் அதிகம். அதில் அவர் மூச்சு விடும் சத்தம் கூட இசையாகவே மாறிவிடுகிறது.
இதே வரிசையில், “இதயம் போகுதே… எனையே பிரிந்து” (புதிய வார்ப்புகள்) பாடலை உற்றுக்கேட்டால், ஒரு பெண் தன் காதலைப் பிரிந்து செல்லும் அந்தத் தவிப்பை இவ்வளவு நேர்மையாகப் பதிவு செய்ய முடியுமா என வியக்கத் தோன்றும். “போகுதே…” என்று அவர் பாடும்போது, நெஞ்சுக்கூட்டிலிருந்து இதயம் தனியாகப் பிய்த்துக்கொண்டு போவதை உணர முடியும். அழுதுகொண்டே பாடுவது போலத் தொண்டை அடைக்க, வார்த்தைகள் உடைந்து சிதறும் அந்த பாவம், நடிப்புக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு யதார்த்தம். அதேபோல, சங்கர் கணேஷ் இசையில் “பனியும் நானே மழையும் நானே” (பனிமலர்) (ராஜா தவிர பிற இசையமைப்பாளர்களில் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் மாத்திரமே பாடியிருப்பார்) பாடலில், ஜென்சி இயற்கையாகவே மாறிவிடுகிறார். பனி படர்ந்த மலைப்பாதையில் தனித்து நடக்கும் ஒரு பெண்ணின் குளிரையும், தனிமையின் சிலிர்ப்பையும் அந்தக் குரல் நமக்குள் இறக்குகிறது. “நானே…” என்று அவர் முடிக்கும்போது, அந்தப் பனிப்புகை நம்மைச் சூழ்ந்துகொள்வது போன்றதொரு மாயை உருவாகிறது.

‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் வரும் “இரு பறவைகள் மலை முழுவதும்” பாடலைக் கேட்டால், “மலர்ந்தன, பறந்தன…” என்று அவர் ஆரம்பிக்கும்போதே, அவர் குரலில் ஒரு மெல்லிய சிரிப்பு ஒலிப்பதை உணரலாம். வரிகளில் இல்லாத அந்தச் சிரிப்பு, குரலில் இழையோடுகிறது. நிஜமாகவே மலை உச்சியில் நின்று கூவுவது போன்ற ஒரு ‘எக்கோ’ எஃபெக்ட் இயற்கையாகவே அவர் குரலில் உண்டு. ர,ற வரிசைச் சொற்களை உச்சரிக்கும்போது நமக்கு மனதிற்குள் ஒருவகைச் சிரிப்பும், சிலிர்ப்பும் ஏற்படுகின்றன. வேகமான பாடல்களிலும் ஜென்சி ஒரு தனி ரகம். ‘கரும்பு வில்’ படத்தின் “மீன்கொடி தேரில்” பாடலில் குதிரையில் போவது போன்ற ரிதம் இருக்கும். இதில் ஜென்சி, வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே ஓடுவார். மூச்சு வாங்காமல் பாடுகிறாரா அல்லது மூச்சு வாங்குவதையே ஒரு ஸ்டைலாக மாற்றுகிறாரா என்று நமக்கே குழப்பம் வரும்.

ஜென்சியின் குரல் தனித்துப் பாடும்போது மட்டுமல்ல, மற்ற பாடகர்களின் குரலோடு சேரும்போதும் ஒரு விசித்திரமான ரசவாதத்தை நிகழ்த்தும். அது பால் மற்றும் தேன் கலவையைத் தாண்டி, பால் மற்றும் வைன் கலந்த போதையைத் தரவல்லது. ‘பிரியா’ படத்தில் ஜேசுதாஸுடன் பாடிய “என்னுயிர் நீதானே” பாடலில், ஜேசுதாஸ் ஒவ்வொரு வார்த்தையையும் சிலையாகச் செதுக்குவார். ஜென்சியோ வார்த்தைகளைத் தூக்கிப் போடுவார். “நீயாரோ… இங்கு நான் யாரோ…” என்று ஜென்சி கேட்கும்போது, அந்த முரண்பாடுதான் இந்தப் பாடலை கிளாசிக் ஆக்கியது. அதேபோல, ‘கடவுள் அமைத்த மேடை’யில் எஸ்.பி.பி.யுடன் பாடிய “மயிலே மயிலே” பாடலில், எஸ்.பி.பி “மயிலே…” என்று அழைக்கும்போது கம்பீரம் இருக்கும். ஜென்சி பதில் பாடும்போது, ஒரு நாணமும் நளினமும் இருக்கும்.
ஜென்சி நீண்ட காலம் பாடவில்லை. கல்யாணம், குடும்பம் என்று செட்டில் ஆகிவிட்டார். ஒருவேளை அவர் இன்னும் ஆயிரம் பாடல்களைப் பாடியிருந்தால், இந்த ஈர்ப்பு இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அவர் குறைவான பாடல்களைப் பாடிவிட்டு, சட்டென்று மறைந்துவிட்டதால்தான், இன்றும் அவர் குரல் நமக்கு ஒரு தீராத தாகமாக இருக்கிறது. ஜென்சி, தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த “விபத்து”. அவர் முறையாக சங்கீதம் கற்று, பிழையில்லாமல் தமிழ் பேசி, கச்சேரிகளில் பாடியிருந்தால், நாம் அவரை என்றோ மறந்திருப்போம். அவர் செய்த அந்தச் சின்னச் சின்ன தவறுகளும், அந்த ‘மூச்சு வாங்கும்’ அழகியலும்தான் அவரை 40 வருடங்களாக நம் பிளேலிஸ்ட்டில் வைத்திருக்கிறது. ஒரு மழை நாளில், கையில் சூடான டீயுடன் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும்போது, எஸ்.ஜானகியை விட, சுசீலாவை விட, ஜென்சியின் அந்த “பிழையான”, “கள்ளங்கபடமற்ற” குரல்தான் நம் மனதிற்கு நெருக்கமாக வந்து ஒட்டிக்கொள்ளும். அந்தப் பிழைகளை ரசிக்க வைத்ததில்தான் ஜென்சியின் வெற்றியே இருக்கிறது!
ஜென்சி, திரையிசையில் 40ற்குட்பட்ட பாடல்களையே இதுவரைப் பாடியுளளார். 78 தொடங்கி 82ம் ஆண்டுகளுக்குள். அவர் ஆல்பத்தில் பாடிய, இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட ‘ நீலக்கடல் ஓரத்திலே’ உட்பட அனைத்துப் பாடல்களையும் இங்கே பதிவிடுகிறேன். கேட்டிருப்பவர்கள், கேட்காதவர்கள் அனைவரும் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. #வானத்துப்பூங்கிளி-திரிபுரசுந்தரி
2. #அடிபெண்ணே-முள்ளும்மலரும்
3. #ஆடச்சொன்னாரே-வட்டத்துக்குள்சதுரம்
4. #அலங்காரபொன்ஊஞ்சலே-சொன்னது நீதானா
5. #௭ன்உயிர்நீதானே-ப்ரியா
6. #தம்தனநம்தன-புதியவார்ப்புகள்
7. #இதயம்போகுதே-புதியவார்ப்புகள்
8. #ஆயிரம்மலர்களே-நிறம் மாறாதபூக்கள்
9. #இருபறவைகள்-நிறம்மாறாதபூக்கள்
10. #கீதாசங்கீதா-அன்பேசங்கீதா
11. #மயிலேமயிலே-கடவுள்அமைத்தமேடை
12. #தோட்டம்கொண்டராசாவே-பகலில்ஒருஇரவு
13. #ஹேய்மஸ்தானா-அழகேஉன்னைஆராதிக்கிறேன்
14. #அக்காஒருராஜாத்தி-முகத்தில்முகம்பார்க்கலாம்
15. #ஞான்ஞான்பாடணும்-பூந்தளிர்
16. #நான்உன்னைத்திரும்பத்திரும்ப“-எல்லாம்உன்கைராசி
17. #என்வானிலே-ஜானி
18. #மீன்கொடிதேரில்-கரும்புவில்
19. #தீர்த்தக்கரைதனிலே“-தைப்பொங்கல்
20. #தெய்வீகராகம்-உல்லாசப்பறவைகள்
21. #பூ மலர்ந்திடநடமிடும்”-டிக்டிக்டிக்
22. #காதல்ஓவியம்-அலைகள்ஓய்வதில்லை
23. #வாடிஎன்கப்பக்கிழங்கே-அலைகள்ஓய்வதில்லை
24. #பனியும்நானேமலரும்நீயே-பனிமலர்
25. #என்கானம்இன்றுஅரங்கேறும்-ஈரவிழிக்காவியங்கள்
26. #ஆத்தோரம்காத்தாட-எங்கேயோகேட்டகுரல்
27. #கல்யாணம்என்னைமுடிக்க-மெட்டி
28. #பூத்துநிக்குதுகாடு-எச்சில்இரவுகள்
29. #பூச்சூடிப்பொட்டும்வெச்சு-பொன்னி
30. #அழகியகண்ணே-உதிரிப்பூக்கள்
31. #காத்தாடுது ஆசை பூத்தாடுது – கரடி
32. #பார்த்தாலும் ஆசை இது – கரடி
33. #மாலைச் செவ்வானம் – இளையராஜாவின் ரசிகை
34. #கரலின்டே காரலே – பாப்பாத்தி
35. #நீலக்கடல் ஓரத்திலே – நீலக்கடல் ஓரத்திலே ஆல்பம்
Leave a Reply