அடுத்து அரசியல் கட்சி என்கிற முறையில், திராவிட முன்னேற்றக் கழகம், அதன் தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் பல மேடைகளில் பரப்புரை செய்து, தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீதிமன்றமும் சென்றனர்.
இப்போது ‘நீட்‘ தேர்வின் ஊழல் முடைநாற்றம் நாடு முழுவதிலும் மாணவர் – பெற்றோர்களை கொதித்தெழச் செய்துள்ளது.
தென்னாடு முதல் வடபுலம் வரை எங்கும் நீட் தேர்வு ஒழிப்புக் கிளர்ச்சிகள் பொறியாய்க் கிளம்பி, பெருநெருப்பாய்ப் பற்றி எரிகிறது!
சில வாரங்களாக உச்சநீதிமன்றமே கேள்விக்குமேல் கேள்வி எழுப்பிய பின், இப்போதுதான் ஒன்றிய அரசு, ‘‘ஒரே ஒரு இடத்தில்தான் தேர்வுத் தாள் கசிந்திருக்கிறது‘‘ என்று ‘‘ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை”ச் சொல்லுகிறது!
வட மாநிலங்களிலும் கொடிகட்டிப் பறக்கும் எதிர்ப்பு :

குஜராத் மாநிலத்திலும், பீகாரிலும், மகாராட்டிராவிலும் மற்ற மற்ற வடபுல மாநிலங்களிலும் இந்த ஊழல் அங்கிங்கெனாதபடி எங்கும் கொடி பறக்கும் நிலையில்,
தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சிகளும் (பா.ஜ.க. ஒரு கட்சியைத் தவிர) நீட் தேர்வை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஓங்கி ஒலிக்கின்றன –ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடின்றி!
இதுவரை நீட் தேர்வுபற்றி வாய்த் திறக்காத பிரதமர் மோடி, கடந்த 2.7.2024 அன்று, ‘‘நீட் தேர்வு கேள்வித் தாள் கசிந்த விவகாரத்தில், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்‘‘ என்று கூறினார். ஊழல் இல்லாதது அல்ல – நீட் தேர்வே ஊழல் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை. :
தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்‘ ஆட்சி தொடர்ந்து இரண்டு முறை மசோதா நிறைவேற்றம், வழக்கு மன்றம் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தினார்; எதற்கும் அசையவில்லை – ”ஊழலை ஒழிப்போம் என்று ஒருபுறம் வெற்று ஆரவாரப் பேச்சு – மறுபுறத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணான நீட் தேர்வு முறையை ரத்து செய்ய மறுப்பு” என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்துவரும் விநோத வித்தையைக் காட்டி வருகிறது –ஒன்றிய பா.ஜ.க. அரசு!
5 முனைகளிலிருந்து தி.க. இளைஞரணி, மாணவர் கழகத்தின்
இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம்– சேலத்தில் சங்கமம்!
வருகிற ஜூலை 11 முதல் 15 ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதிலும் ஊழலின் மறுஉருவமாக உள்ள நீட் தேர்வை ஒழிக்கும் அடைமழைப் பிரச்சாரத்தின் மற்றொரு கட்டமாக, மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து 5 அணிகளாக கன்னியாகுமரி, இராமநாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை ஆகிய நகரங்களில் தொடங்கி சேலத்தில் தங்களது இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தினை நிறைவு செய்ய எல்லா ஏற்பாடுகளையும் குன்றா ஆர்வத்துடனும், கொதிக்கும் உணர்வுடனும் மேற்கொள்ளவிருக்கின்ற தோழர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
ஒவ்வொரு ஊரிலும் வழிநெடுக திராவிடர் கழகத்தினர், பகுத்தறிவாளர்கள் மட்டுமின்றி, அனைத்து நீட் தேர்வு ஒழிப்பு உணர்வாளர்களும் இணைந்து, இந்த சூறாவளி சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக்கவேண்டிய – பொதுநலம் – இனநலம் – ஊழல் ஒழிப்பு – அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு ஆகிய கண்ணோட்டங்களில் தங்களது பேராதரவினைத் தந்து ஊக்குவிக்க அன்புடன் வேண்டுகிறோம்!
இது திராவிடர் கழகத்தின் நலனுக்காக அல்ல – எதிர்கால சந்ததியின் மருத்துவக் கல்வி வாய்ப்புக்கான, எதிரிப் படைகளை தோற்கடிப்பதற்கான அறப்போர்! ஓயாத போராட்டம்!!
வெற்றி நமதே!
- நீட் தேர்வு ஒழிப்புப் போராட்டம் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை எதிர்த்துவரும் கட்சி, அணிகளுக்குக் குறிப்பாக திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி – இந்தியா முழுவதிலும் பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகள் நீட் தேர்வு ஊழல் நிைறந்ததால் ரத்து செய்யப்படவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டதுதான்.
- இரண்டாவது, உச்சநீதிமன்றமே ஊழல் நடந்துள்ளது என்பதை பகிரங்க கேள்விமூலம் ஏற்றுள்ளது.
- மாநிலங்களவையில் (2.7.2024) மோடி பேசியபொழுது ஊழல் நடந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததுபோல
நீட் ஒழிப்பிலும் வெற்றி பெறுவோம்!
அறிவு ஆசான் குலக்கல்வி ஒழிப்புத் திட்டத்தில் பெற்ற வெற்றி போல், இந்த வெற்றி நிச்சயம் கிட்டுவது உறுதி!
இப்படை தோற்கின் – எப்படை வெல்லும்?

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம் (9.7.2024) - சென்னை
Leave a Reply