யார் இந்த தேவர்? தேவரா தோழரா?

1 min read

இந்துத்துவ ஆர் எஸ் எஸ் சங்கிகள் தேவரை எப்படியாவது மதவாத வட்டத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டுமென்று தவியாய் தவிக்கின்றனர். அதற்கு வாய்ப்பு கொடுப்பதை போல் தேவர் சமூக லெட்டர் பேடு அமைப்புகளும் ஆர் எஸ் எஸ் இன் கைக்கூலியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தேவரின் இடதுசாரி சோசலிச அரசியலை ஏற்க மறுத்து காவி பாசிச சக்திகளின் காலை நக்கிப் பிழைக்கும் சாதியவாதிகளின் பிழைப்புவாதத்திற்கு தேவரை பயன்படுத்துகின்றனர். இது கடுமையான கண்டனத்திற்கு உரியது தேவர் சமூக ஜனநாயக சக்திகள் இதற்கு கடும் எதிர் வினையைத் தெரிவிக்க வேண்டும். வரலாற்று அறிவு துளி கூட இல்லாத 20 ஆயிரம் நூல்களை படித்துள்ளதாக கதை விடும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அவர்கள் உளறிக் கொட்டி இருக்கிறார். குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்த்து வீரமாக போராடிய முன்னணி தலைவர்களில் முக்கியமானவர் முதன்மையானவர் தேவர். ஆனால் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இந்த சட்டத்திற்கு எதிராகப் பல தலைவர்களும் சமூகப் பெரியவர்களும் போராடி இருக்கிறார்கள்; பாடுபட்டு இருக்கிறார்கள். தேவர் இந்த சட்டத்திற்கு எதிராக போராடிய முதல் தலைவர் அல்ல. இந்த வரலாறு அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காங்கிரசு பேரியக்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் என்ற தலைவர் தேவருக்கு முன்பே போராடியவர். இவர் பிறப்பால் கிறித்தவர்- மலையாளி. அந்தக் காலகட்டத்தில் எந்த ஆர்எஸ்எஸ் தலைவராவது குற்றப் பழங்குடிச் சட்டத்துக்கு எதிராக போராடியதாக வரலாறு உண்டா? ஆனால் ஒரு கிறிஸ்தவர் போராடினார். இன்றும் அந்த மக்கள் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ரோசாப்பூத்துரை என்று அந்த மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஜோசப் நினைவாக இன்றும் கூட ரோசாப்பூ தேவர், ரோசாப்பூ என்ற பெயர் சூட்டும் வழக்கம் உண்டு. இந்த வரலாறு எல்லாம் சங்கிகளின் தலைவன் அண்ணாமலைக்குத் தெரியாது. அண்ணாமலையே! பசும்பொன் தேவர் அவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? மதத்தை வைத்து மக்களைப் பிளவுபடுத்துவதை எப்போதும் தேவர் ஏற்பதில்லை. தேவர் வாழ்ந்த காலத்திலேயே இந்து மகா சபையும், RSS ம் இருந்தனவே. என்றாவது அந்த இயக்கங்களிலே அவர் இணைந்திருந்தாரா? ஒரு போதும் அந்த இயக்கங்களில் இணைந்து தேவர் பணியாற்றியதில்லையே. இந்துத்துவவாதியாக இருந்திருந்தால் இடதுசாரி சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு பார்வர்ட் பிளாக் கட்சியை தொடங்குவானேன்? 1930 களில் இருந்து 1963 மரணத்தைத் தழுவும் வரை RSS லோ, இந்து மகா சபையுடனோ இணைந்து பணியாற்றியதும் கிடையாது. அரசியல் உறவு வைத்துக் கொண்டதும் கிடையாது. தோழர்கள் ஜீவா, பி.இராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி, கல்யாண சுந்தரம், ஈ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன், சீனிவாசராவ், ஐமாபா போன்ற தோழர்களுடன் தான் அவருடைய உறவு இருந்தது. இவர்களோடு தான் தேவருடைய பயணம் இருந்தது.இறுதி வரை அவர் இடதுசாரிகளோடு மட்டும் தான் அரசியல் உறவு கொண்டிருந்தார். தேவரின் ஆன்மீகம் தமிழ் மரபு சார்ந்தது. திருவள்ளுவர், திருமூலர், சித்தர்கள், வள்ளலார் வழிப்பட்டது. தன்னளவில் அவர் ஆன்மீகவாதியாக இருந்தாரே தவிர, யாரையும் ஆன்மீக அடிப்படையில் அணி சேர்க்கவில்லை. என்றாவது பழனி பாதயாத்திரைக்கோ வேறு தலங்களுக்கோ ஆன்மீக கூடல் என்று ஏதாவது ஒரு நிகழ்வாவது நடத்தியிருக்காரா? அல்லது ஆன்மீகம் / மதம் சார்ந்த மாநாடு நடத்தியிருக்காரா? இல்லவே இல்லை. ஆனால் பல்வேறு இடங்களில் நடைபெறும் விழாக்களில் தேவரைப் பேச அழைத்ததுண்டு. அங்கு கலந்து கொண்டு தமிழர் ஆன்மீக மரபு பற்றி, தமிழர் மெய்யியல் பற்றி பேசியிருக்காரே தவிர, இந்துத்துவ அரசியலைப் பற்றியோ, மதவெறி சிந்தனையோடோ என்றுமே பேசியதில்லை. மதத்தைப் பற்றி தேவரின் பார்வை என்ன? 1949 ஜூன் 12 ம் நாள் காலை மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சன்மார்க்கத் தொண்டர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி தேவர் பேசுகிறார், “இந்துக் கோயிலில் காட்டுகின்ற சூட தீப வெளிச்சமும், கிறிஸ்துவர் வணக்கத்தில் வைக்கின்ற மெழுகுவர்த்தியின் ஒளியும், முகமதியர் ஊதுபத்தியில் காண்கின்ற சுடரும், தன் சரீரத்தின் இருட்டைப் போக்கி, எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் சொரூபம் ” “மதங்கள் பலவானாலும் ஆண்டவன் ஒருவனே! விவரமில்லாதவர்கள், கிறிஸ்துவனும், முசல்மானும், இந்துவும் வெவ்வேறு என்றும், ஒவ்வொருவரும் தம் மதத்தின் பெயரால் உலகை ஆளவேண்டும் என்றும் ஆசை கொள்கிறார்கள். சிறியோர்கள், மதவெறி கொள்கிறார்கள். உண்மையான அர்த்தத்தை உணராததால் ஏற்பட்ட வினை இது. பல நதிகள், பல இடங்களில் உற்பத்தியாகி, பல பாதைகளில் சென்று, முடிவில் ஒரே சமுத்திரத்தில் சங்கமமாவதைப் போல, பல மதப்பிரிவுகளும் ஒரே ஆண்டவனை அடையும் மார்க்கமே!” என்று பேசுகிறார். இந்துத்துவ கும்பலின் மதவாத வெறிப் பேச்சுக்கும், அவர்களுடைய சித்தாந்தத்திற்கும் தேவருடைய மதம் பற்றிய பார்வைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இந்த வரலாறெல்லாம் அண்ணாமலைக்கும் தெரியாது. அண்ணாமலையை அழைத்து கூட்டம் நடத்திய தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கும் தெரியாது. நண்பர்களே! இந்துத்துவம் இங்கே மதவாத அரசியலின் மூலம் ஒரு கலாச்சார தேசியத்தைக் கட்ட முனைகிறது. சனாதன தர்மத்தை வலியுறுத்துகிறது. ஆரிய பார்ப்பன சமக்கிருத மேட்டிமையை வலியுறுத்துகிறது. தேவர் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர். முதலாளிய சமூகத்திற்கு மாற்றாக சோசலிச மாற்றை முன்வைத்தவர். காவி – பாசிச பாசக கும்பலின் இந்துத்துவ அரசியலுக்கு வால் பிடிக்கும் தேவர் சமூக நண்பர்களே! பசும்பொன் தேவரின் ஆன்மீக சிந்தனைகளையும், அவருடைய அரசியலையும் அறிந்து கொள்ள முயலுங்கள்.

♦பசும்பொன் தேவர் அவர்கள் அமெரிக்க பிரித்தானிய வல்லாதிக்க எதிா்ப்புக் கொள்கையில் மிக உறுதியாக இருந்தவர்.

♦ முதலாளித்துவ பொருளியல் கோட்பாட்டுக்கு மாறாக சோசலிச சமூக பொருளியல் அமைப்பிற்கான செயல் திட்டங்களின் அடிப்படையில் இயக்கம் நடத்தியவர்.

♦ சாதி ஏற்றத்தாழ்வை எதிர்த்தார். அனைத்து சமூக மக்களுக்காக உழைத்தார். ♦அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் தேசத்தின் விடுதலைக்குப் பாடுபட்டார். RSSகாரன் போல் வெள்ளையனிடம் மண்டியிட்டும், எழுதிக் கொடுத்தும், காட்டிக் கொடுத்தும் அரசியல் செய்யவில்லை. இராணுவச் சிறையில் அடைபட்டாலும் தேச விடுதலைக்காய் 9 ஆண்டுகள் சிறைப்பட்டவர்.

♦”அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே ” என்ற உயரிய இலட்சிய நோக்குடன் இயக்கம் நடத்தியவர்..

♦ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு எதிராக எத்துணை இன்னல்கள் வந்தாலும் இடையறாது போராடியவர்.

♦ஊழல் பெருச்சாளிகளோடும் மக்கள் சொத்தை சுரண்டிக் கொழுப்பவர்களோடும் எந்த காலத்திலும் அரசியல் உறவு கொண்டதில்லை.

♦மதவாத அரசியலை அடியோடு நிராகரித்தார். அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்ற தெளிந்த சிந்தையோடு இருந்தார்.

♦தமிழ் மொழியை மிகவும் நேசித்தார். தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாகத் திகழ்ந்தார்.

♦ தமிழ் வழிக் கல்வி, தமிழ்நாடு பெயர் மாற்றம், எல்லைப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளில் மிகச் சரியான நிலைப்பாடு எடுத்தார். தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தார். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விரிவாக எடுத்துரைத்தார். இப்படிப்பட்ட மிகச்சிறந்த இடதுசாரித் தலைவரான தேவரைப் பற்றிப் பேச அண்ணாமலையே உனக்கு என்ன தகுதி இருக்கிறது? தேவர் சமூக நண்பர்களே! வரலாற்றைத் தேடிப் படியுங்கள். வரலாற்றை உங்கள் வசதிக்காக திரிக்க முயலாதீர்கள்.

-தோழர் மருது பாண்டியன் அவர்களின் பதிவு

You May Also Like

+ There are no comments

Add yours