பொதுவாக வழக்குரைஞர்கள் என்றாலே எதற்கெடுத்தாலும் போராடுவார்கள் ; அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பிலே ஈடுபடுவார்கள் ; போலீசை எதிர்த்து சண்டை கட்டுவார்கள் என்பது பொது மக்களின் எண்ண ஓட்டம். ஆனால் புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுக்க நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்ற போராட்டங்களை விட இந்த நாட்டின் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்கானது.
மோடி 2.0 ஆட்சியாகட்டும் 1.0 ஆட்சியாகட்டும் இந்த இரண்டுமே மக்களின சிவில் உரிமைகளைப் பறிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தது.
முன்னர் மக்களின் உரிமைகளுக்காக பேசிய மாந்த உரிமைச் செயற்பாட்டளர்களை மட்டும் குறிவைத்து அவர்களை பொது நீரோட்டத்தில் இருந்து விலக்கி விடலாம் என்று கருதிய ஒன்றிய பாஜக அரசு , தற்போது நாட்டினுடைய குடிமக்கள் அனைவரையும் குற்றவாளிகளாக , சிறைச்சாலைகளுக்கும் காவல்நிலையங்களுக்கும் அலைய வேண்டியவர்களாக மாற்றும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்கள் காவல்துறைக்கு வானாளவிய அதிகாரங்களை கொடுத்து மாற்றியிருக்கிறது.
// புதிய சட்டத் திருத்தப்படி 3 -7 ஆண்டுகள் குற்றச்சாட்டுடைய குற்றங்களுக்கு உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத் தேவையில்லை என வரையறுக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு இனி காவல்துறையினர் மனம் வைத்தால் தான் முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
// சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டிய வழக்குகளில் வழக்கு விசாரணை நிலையிலேயே சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும். அவையும் நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே செய்ய முடியும்.
// குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படும் போதே அவருடைய உறுப்பு அடையாளங்கள் போன்றவை எடுக்கப்படும் புதிய சட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டாலே உங்களைப் பற்றிய தனி விவரங்களை கவல்துறை திரட்டிக் கொள்ள முடியும்.
// முன்விடுதலை தொடர்பாக குற்றவியல் சட்டத்தில் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இனி கிடையாது. நாடு முழுக்க பாஜக அல்லாத மாநிலங்களில் சிறைவாசிகள் முன்விடுதலையில் மத அடிப்படையிலான பாகுபாடு தொடரும் வகையில் அதனை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டுள்ளது.
// நீதித்துறை நடுவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறையடைப்பு அதிகாரம் செயல் நடுவருக்கும் வழங்கப்படுவதன் மூலம் ஆள்வோருக்கு இணக்கமாக செயல்படும் வருவாய்த்துறை அதிகார வர்க்கத்தை வைத்து வெகுமக்களை சாதரண குற்றங்களில் கூட சிறையடைப்பு செய்ய முடியும்.
// 90 நாட்கள் வரை போலீசுக்கு காவல் எடுப்பிக்கு அனுமதி வழங்கியுள்ளதன் மூலம் காவல்துறை குற்றஞ்சாட்டப்பட்டவரை ப்லவேறு பொய் வழக்கில் சேர்த்து அவருடைய பிணை உரிமையை நிலையாகத் தடுக்க முடியும்.
இவை எல்லாம் அன்றாடம் பொதுமக்களுக்கு காவல்துறையினரால் பாதிப்புகளை உருவாக்கக் கூடிய உறுப்புகளை புதிய குற்றவியல் சட்டத் திருத்தம் கொண்டிருக்கிறது.
மோடி – அமித்சா கூட்டம் கோடான கோடி உழைக்கும் மக்களை குற்றவாளிகளாக்கி நாட்டையே ஒரு முழுச் சிறைச்சாலை ஆக்குவதற்கான வலிமையை புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் வழங்கியிருக்கின்றன.
முடியாட்சி காலத்தில் நிலவிய வர்ண சாதி தண்டனை முறையை இந்தப் புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் பெற்றிருப்பதன் மூலம் ஏழை – எளிய , ஒடுக்கப்பட்ட், விளிம்பு நிலை மக்கள் அன்றாடம் சித்திரவதைகளை எதிர்கொள்ள புதிய சட்டத் திருத்தங்கள் வழிகோலுகின்றன.
இவை வழக்குரைஞர்களின் தனி உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் அல்ல என்பதை வெகுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். வழக்குரைஞர் போராட்டம் எளியோர் உரிமைக்கான சனநாயகத்தினக காப்பதற்கான போராட்டம் . அதற்குத் துணைநிற்போம்!
புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துவோம் !
எழுத்தாளர் :
குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours