அய்யா வைகுண்டர், திருநாராயண குரு, தந்தை பெரியார் போன்ற ஆளுமைகள் பார்ப்பனீய அடிமைத்தனத்துக்கு எதிராக நடத்தியப் போராட்டங்களை சிறு வயது முதலேக் கேட்டு வளர்ந்தவன் நான்.
சமத்துவச் சிந்தனை இல்லாத, வெறுப்பை வளர்த்தெடுக்கும் பார்ப்பனீய பாசிசம் இந்த நாட்டின் முதல் எதிரி. இந்தியத் தேசியப் போர்வையில் ஒளிந்துகொண்டிருக்கும் இவர்களின் கைகளில் அணுவாயுதங்களும், அவற்றை தயாரிக்க உதவும் அணுமின் நிலையங்களும் இருத்தலாகாது என்று நினைக்கிறவன் நான்.
பாசிசமும், அணுத்துவமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். பாசிசத்தின் உச்சபட்ச வெளிப்பாடு அணுத்துவம்; அணுத்துவத்தின் பின்னால் இருக்கும் சித்தாந்தம் பாசிசம். இதனடிப்படையில்தான் நான் அணுத்துவத்தையும், பாசிசத்தையும் ஒருங்கே எதிர்க்கிறேன்.
இன்றைய நிலையில் இந்தியா எதிர்கொள்ளும் மாபெரும் ஆபத்து என்பது பார்ப்பனீய பாசிசம்தான். இவர்கள் இன்னுமொருமுறை ஆட்சிக்கு வந்தால், அடிப்படை உரிமைகளை, மனித மாண்புகளை, கண்ணியத்தை, பாதுகாப்பை, அனைத்தையும் இழந்துவிடுவோம் நாம். நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பனீய பாசிஸ்டுகளைத் தோற்கடிக்கவில்லை என்றால் முதலுக்கே மோசமாகிப் போகும்.
கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகள் மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தொடங்கப்படும். நியூட்ரினோ திட்டம் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டின் கடலும், கடற்கரையும் அதானி கைகளுக்குப் போகும். அதானிக் குழுமம் தாதுமணற் கொள்ளையில் ஈடுபடும்.
குமரி முனைக்குத் தெற்கே அமைந்திருக்கும் 27,154 சதுர கி.மீ. கடற்பரப்பில் திட்டமிட்டபடி ஹைட்ரோகார்பன் எடுப்பார்கள். இந்த பெரும் கடற்பரப்பின் நடுவே அமைந்திருக்கும் “வாட்ஜ் பேங்க்” (Wadge Bank) எனும் “படுகைக் கரை”யைத் தகர்த்தழிப்பார்கள். இந்தியாவின் மாபெரும் மீன்வளச் சுரங்கமாகத் திகழும் 10,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த படுகைக் கரையைச் சூறையாடுவார்கள்.
வளர்ச்சி என்கிற பெயரில் நம் மண்ணும், மலையும், ஆறும், நீரும், கடலும், காற்றும், அனைத்தும் அழித்தொழிக்கப்படும். வாழ்க்கையும், வளங்களும், வாழ்வாதாரங்களும், வருங்காலமும் ஒட்டுமொத்தமாக காணாமற் போகும்போது, நாம் எங்கேப் போவது, என்ன செய்வது?
நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைவிட, யார் தோல்வி அடைகிறார்கள் என்பதுதான் என்னைப் போன்றோருக்கு முக்கியமானதாக இருக்கிறது. அவர்கள் தோல்வியைத் தழுவிட என்ன செய்வது என்றுதான் நாங்கள் சிந்திக்கிறோம், செயல்படுகிறோம்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் திரு. ராகுல் காந்தி அவர்களுடன் நேரடியாக நீண்ட நெடிய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நடத்தியதன் அடிப்படையிலும், நாடு முழுக்க கிளைப்பரப்பி இயங்கிக் கொண்டிருக்கும் காங்கிரசுக் கட்சியை விட்டால் பாசிஸ்டுகளைத் திறம்பட எதிர்க்க முடியாது என்கிற அடிப்படையிலும், நான் இந்தியா கூட்டணியை இப்போது தற்காலிகமாக ஆதரிக்கிறேன்.
நான் இந்தியா கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அவர்களிடமிருந்து பணமோ, பதவியோக் கேட்கவுமில்லை, அவர்கள் தருகிறோம் என்று சொல்லவுமில்லை, அவை எனக்குத் தேவையுமில்லை. வாழ்நாள் முழுவதும் காங்கிரசு, திமுக போன்ற கட்சிகளை, அவர்களின் திட்டங்களை எதிர்க்க மாட்டேன் என்று அடிமை சாசனம் எதுவும் எழுதிக் கொடுக்கவுமில்லை.
பாஜகவோடு கள்ளக்காதல் வைத்துக்கொண்டு நாடகமாடும் அதிமுக கட்சியை நான் நம்பவில்லை. “நீ அடிப்பது போல அடி, நான் அழுவது போல அழுகிறேன்” என்று நடிக்கிறார்கள் அவர்கள். அவர்கள் நடத்துவது “பாம்பும் சாகக் கூடாது, கோலும் முறியக் கூடாது” எனும் அப்பட்டமான அரசியல் நாடகம்.
ஈழ இனப்படுகொலையையும், இங்குள்ள தமிழரின் வேற்றுப்படுத்தலையும் கண்டு வெகுண்டெழுந்த தமிழ்நாட்டு இளைஞர்களின் அறச்சீற்றத்தை மடைமாற்றி, மலினப்படுத்தி, ‘அடியாள் அரசியல்’ செய்து கொண்டிருக்கும் நாதகவையும் நான் நம்பவில்லை. பார்ப்பனீய புரோக்கர்களோடும், இந்திய உளவுத்துறைகளோடும் திரைமறைவில் உறவாடி, தமிழ் இளைஞர்களின் அபார அரசியல் ஆற்றலை வீணடிப்பவர்களை நான் நம்பவில்லை.
கொடும் தீவிரவாதி என்று கொள்ளப்பட்டு, காஷ்மீரில் சிறையில் இப்போது அடைக்கப்பட்டிருக்கும் யாசின் மாலிக் அவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதியும், ஆசீர்வாதமும் அளித்தவர்கள் யார்? “இராஜீவ் காந்தி அவர்களை நாங்கள்தான் கொன்றோம்” என்று பொதுவெளியில் உரக்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும், எந்தவிதமான விசாரணைகளோ, வழக்குகளோ எதுவுமின்றி சொகுசு வாழ்க்கையை சுகமாக வாழ்ந்து கொண்டிருப்பது எப்படி சாத்தியமாகிறது?
தமிழ் இளைஞர்களை தனக்காகவும், தான் அதிகாரம் பெறுவதற்காகவும் மட்டும் பயன்படுத்தும் உண்மையற்ற, நேர்மையற்ற, ஒழுக்கமற்ற சர்வாதிகாரிகளை, அவர்களின் கண்மூடித்தனமான ரசிகர்களை நான் நம்பவில்லை. “இலை மலர்ந்தால், ஈழம் மலரும்” என்று நான் வசனம் பேசவில்லை. “திமுகவும், நானும் பங்காளிகள்” என்று நான் சொந்தம் கொண்டாடவில்லை. உதயநிதி அவர்களை மிரட்டிய வட இந்தியச் சாமியார் தலைக்கு விலை அறிவித்து, நான் பாசத்தைப் பொழியவில்லை. முதல்வர் தொலைபேசியில் அழைத்துப் பேசியது “பெருமையாக இருந்தது” என்று நான் புளகாங்கிதம் அடையவில்லை.
எனவே நாதக தம்பிகள் யாரும் எனக்கு அரசியல் கற்புநெறி பற்றியோ, களவொழுக்கம் பற்றியோ வகுப்பெடுக்கத் தேவையில்லை. பிறர் கண்களில் கிடக்கும் தூசியைத் தேடி அலைகிற தம்பிகள், தங்கள் கண்களில் கிடக்கும் உத்திரங்களை முதலில் நீக்க முயலுங்கள்.
மகாத்மா காந்தி சொன்னது போல, “I have sacrificed no principle to gain a political advantage.” அவரே எடுத்துரைப்பது போல, “My aim is not to be consistent with my previous statements on a given question, but to be consistent with truth as it may present itself to me at a given moment. The result has been that I have grown from truth to truth.” வாயைத் திறந்தால் பொய் பேசுகிறவர்களுக்கு, வாய்களை மூடி பொய்களை ரசிக்கிறவர்களுக்கு இவையெல்லாம் புரியாமற் போகலாம். என் செய்வது?
எழுத்தாளர்:
சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்,
மார்ச் 31, 2024.