2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் மற்ற எல்லா தேர்தல்களைப் போலொரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்கான தேர்தல் அல்ல. மாறாக பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்திய ஒன்றியம் விடுதலை பெற்ற பிறகு மக்கள் போராட்டங்களின் விளைவாக விளைந்த சனநாயகம் , சமத்துவம் , மதச்சார்பின்மை , கூட்டாட்சி , பன்மைத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய குடியாட்சி விழுமியங்களுக்கும், இந்திய ஒன்றியத்தை சநாதனத்தின் சாதியப் பாகுபாடுகளும் , கொடுங்கோன்மையும் நிறைந்து வழிந்த பழைய மன்னராட்சி காலத்திற்கு பின்னோக்கி இழுத்துச் செல்வதற்கும் இடையே நடைபெறுகிற போராட்டத்திற்கான தேர்தலாக இந்தத் தேர்தலைக் கருத வேண்டும்.
காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானவுடன் அதிலுள்ள சனநாயக விழுமியங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத நரேந்திர மோடி அவர்கள் அதனை முஸ்லீம் லீக் ,பொதுவுடைமைக் கட்சிகளின் கொள்கைகளைச் சார்ந்துள்ள ஆவணம் என தனது வழமையான பிரித்தாளும் சூழ்ச்சி உரையை தேர்தல் பரப்புரையில் ஆற்றினார்.
நாம் ( We) இந்துக்கள் முசுலீம் உள்ளிட்ட சிறும்பான்மையினர் , சனநாயகக் கொள்கைகளை வெளிப்படுத்துவோர் அவர்கள் ( others) எனும் பெயரில் ஒரு இந்து வாக்கு வங்கியைத் திரட்ட ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்கள் நீண்டகாலமாக நடத்தி வரும் பரப்புரையின் தொடர்ச்சியை மோடியின் திட்டமிட்ட உரை வெளிப்படுத்துகிறது.
பாசிச ஆட்சியாளர்கள் வழமையாக பெரும்பான்மை மக்களைத் தன் பக்கம் திருப்ப எப்பொழுதுமே சமூக வேறுபாடுகளை மறைத்து உயர்குடி ஆட்சியினை நிலைநிறுத்த நாம் × அவர்கள் என்ற அடையாளப்படுத்துதல்களை பொதுவாக முன்னெடுப்பர்.
நாசி இட்லர் தனக்கான எதிரியாக யூத சிறும்பான்மையினரை அடையாளங்கண்டார். ஆரிய இன மேன்மையை நிலைநிறுத்த செமிட்டிக் இன எதிர்ப்பை குவியப்படுத்தி செர்மனியை சர்வாதிகார ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இந்த சர்வதிகாரிகள் முன்வைத்த நாம் × அவர்கள் என்ற கருத்தாக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
பாசிச சக்திகள் ஒடுக்குண்ட மக்களையும் ஒடுக்குகிற பிரிவினையும் நாம் × அவர்கள் என்ற பொதுவான வரையறையின் கீழ் அடையாளப்படுத்துவதன் மூலம் ஒடுக்குதலை திரைபோட்டு மறைத்து வருகின்றனர்.
இந்துக் காவிக் கட்சியினருக்கு முசுலீம் ஆட்சியாளர்கள் என்ற பழைய ஆட்சியாளர்களும் சீமானுக்கு விசய நகர அரசு என்ற பழைய தெலுங்கு – கன்னட ஆட்சியாளர்களும் பகைவர் என்ற வரையறையின் பழைய வரலாற்று நிகழ்வுகளை நிரல்படுத்தி வருகின்றனர்.
மக்களைப் பிளவிபடுத்த பழைய காலத்தின் பிளவுண்ட பகுதிகளிலுள்ள கருத்துகளை எடுத்து வந்து நிகழ்கால அரசியலில் திணித்து வருகின்றனர். இது பாசிஸ்டுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்.
பாசிஸ்டுகள் எப்பொழுதுமே சமூகத்தில் புழங்கக் கூடிய சனநாயக , சமத்துவக் கருத்துகளை ( எடுத்துக்காட்டாக சுரண்டல் , இலஞ்சம் , ஆதிக்க எதிர்ப்பு , வளப் பாதுகாப்பு ) மேலோட்டாமகப் பேசுவதன் மூலமே வெகு மக்களைக் கவர்ந்து வருவர்.
இட்லர் தன்னை சோசலிஸ்ட் என அறிவித்துக் கொண்டதைப் போல தங்களை ஆதிக்க எதிர்ப்பாளர்களைப் போலக் காட்டிக் கொள்வதும் சமூகத்தில் உள்ள ஆதிக்க கொள்கைகளுக்கு சிக்கல் – நடைமுறை – தீர்வு என்ற கொள்கைகளின் வழி தீர்வுகளை முன்மொழியாமல் ஒரு கனவுலகத்தை பரப்புரை செய்வர்.
சீமானுடைய இலஞ்ச ஒழிப்பு , வளப் பாதுகாப்பு , வேளாண்மை பாதுகாப்பு போன்ற அறிவிப்புகள் இதனை அழிக்கிற சக்திகளின் அரசியல் – பொருளியல் நோக்கங்களை பேசாமல் நழுவி பொதுவான நன்மைகளப் பரப்புரை செய்வதாகும்.
ஆர்எஸ்எஸ் முன் வைக்கும் பழைமைவாத வருணப் பொருளியலை ,சாதிக் கட்டமைப்பை சீமான் பழமையான செம்மை கிராமத்தை Ideal ( முரண்பாடுகளே இல்லாத) முன் முழுவதும் ஆட்டு , மாடுகளை மேய்ப்பதை அரசுத் தொழில் ஆக்குவேன் எனப் புலம்புவதும் ஏற்கனவே கிராமங்களில் புரையோடிக் கிடக்கும் சாதிய கட்டமைப்பின் மீது எந்தத் தாக்குதலையும் தொடுக்காமல் அதனை விதந்தோதுவதன் மூலம் பழமைவாதத்தை
முன்வைத்து வருகிறார்.
மாநிலங்கள் எனும் அரசியல் அலகை சம்மு காசுமீர் தீர்ப்பின் மூலம் கேள்விக்குறியாக்கியுள்ள ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த வேண்டிய அரசியல் தேவை பற்றியோ அல்லது அதற்காக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதைப் பற்றியோ எந்த அக்கறையுமின்றி தமிழ்நாட்டுத் தேர்தலில் வெற்றி பெறுவதன் வழி மாநில சுயாட்சியைக் காப்பாற்றி விடுவதாக கதை விடுவதையும் வழமையாகக் கொண்டுள்ளார்.
சமூக நலத் திட்டங்களை எதிர்ப்பது , பழமைவாதத்தை வியந்தோதுவது , அன்பான சர்வாதிகாரம் என கதையளப்பது தமிழர் × தெலுங்கர் × கன்னடர்× மலையாளி என அண்டைத் தேசிய இனங்களை எதிரகளாகக் காட்டி தமிழர் உரிமை என மடைமாற்றுவதும் நாம் தமிழர் ஒரு நவ பாசிச கட்சி என்பதற்கு போதுமான சான்றுகள்.
பாசிச எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கும் இத்தகைய நவ பாசிஸ்டுகளையும் சேர்த்தே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
எழுத்தாளர் :
குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].
E,cellent article thank you