நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களுடைய உரை பொதுவில் சிறப்பாக இருந்தது. தலித்துகளின் விடுதலை குறித்த அவருடைய தர்க்கபூர்வமான, அறிவுப்பூர்வமான பேச்சு. தலித்துகளுக்கான நிலப் பங்கீடு, பஞ்சமி நிலங்கள் குறித்து, வேலை வாய்ப்பு, பணியிடங்களில் தலித்துகளின் தேர்வு முறை, பணி வாய்ப்பு, பணி உயர்வு என்பவை எதார்த்தத்தில் எந்த அளவு உள்ளன என்பது குறித்தான பார்வைகளும், கல்வி நிலையங்களில் தலித்துகள் உரிமைகள் மறுக்கப்படுவதை பற்றியும் மிக ஆழமாகப் பேசினார்.
இடதுசாரி இயக்கங்கள் குறித்தும், திராவிடம் குறித்த சிந்தனைகள், ஆர் எஸ் எஸ் சங்கப் பரிவாரங்களின் எதிர்கால அபாயகரமான திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசினார். குறிப்பாக மேலைநாட்டு, மார்க்சிய சிந்தனை வெளிச்சத்தில் இருந்து தொகுக்கப்பட்ட இந்திய வரலாறுகளை மறுத்து, இந்தியச் சார்புள்ள, இந்திய தன்மையுள்ள புதிய வரலாறை எழுதப் போவதாக போவதாக ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் இறங்கியுள்ளன. இது வரலாற்றை எந்த அளவுக்கு தங்களுக்குச் சாதகமாக்க முயற்சிக்கிறார்கள் என்பது குறித்தும், அதன் அபாயங்கள் குறித்தும் சுட்டிக்காட்டி சிறப்பாக பேசினார்.
தலித் விடுதலை குறித்து பேசும் பொழுது “ஒரு உரையாடலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். உரையாடல் நிகழ்த்தும் போது யாரிடம் நிகழ்த்துவது? யார் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்களோ, யார் நம்முடைய உரிமைகளை மறுக்கிறார்களோ, பறித்தார்களோ அவர்களிடமே தான் நாம் உரையாடல் நிகழ்த்தி ஆக வேண்டும். ஆனால் ஆதிக்க சாதியினர் உரையாடலுக்கு தயாராக இல்லை. நீ எல்லாம் ஒரு ஆளா? உன்னுடன் நாங்கள் உரையாடவா என்ற ஆதிக்க சிந்தனை அவர்களிடம் இருந்தாலும், உரையாடல் மட்டும் தான் ஒரு விரிந்த அளவிலான கருத்துக்களை, சிந்தனைகளை கொண்டு சேர்க்க முடியும்” என்று மிகச் சரியாகச் சுட்டுகிறார்.
இந்த செய்திகளை சுட்ட வரும் பொழுது, “நீ எல்லாம் எனக்கு சமதையான ஆளா? உன்னுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவதா?” என்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரனிடம் கூறியதாக போகிற போக்கில் ஒரு செய்தியை கூறி விட்டு போகிறார். இவை குறித்து மாற்று உரையாடல்கள் பல வெளி வந்த போதிலும், அவர்களுடன் ஒரு மனம் திறந்த விவாதத்தை, உரையாடலை ஆதவன் நடத்தி உள்ளாரா என்று தெரியவில்லை. ஒருவேளை உங்களுடன் எனக்கு என்ன உரையாடல் நிகழ்த்த வேண்டி இருக்கிறது என்ற ஆதிக்க சாதி சிந்தனையாளர்கள் போன்ற மனநிலையில் ஆதவன் தீட்சண்யா இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.
90 களுக்குப் பிறகு குறிப்பாக சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பிறகு, அடையாள அரசியல் என்பது தொண்டு நிறுவனங்கள் மூலம் உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்திலும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக தலித் அரசியல், சூழலியல் அரசியல் உள்ளிட்ட பல்வேறு வகையான அடையாள அரசியல் போக்குகள் அரும்பத் தொடங்கின. அந்த காலகட்டத்தில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி எழுந்த தலித் எழுச்சியின் விளைவாக முதுகுளத்தூர் கலவரம் குறித்தும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் அரசியல் குறித்தும் அடையாள அரசியல் சிந்தனைகளிலிருந்து இந்த சிக்கலை அணுகத் தொடங்கிய அவலம் நேர்ந்தது. அதை நீட்சியாகத்தான் ஆதவன் தீட்சண்யாவின் பார்வைகளும் அமைந்துள்ளன.
முதுகுளத்தூர் கலவரம் குறித்து, அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களாக இருந்த தோழர்கள் பி. ராமமூர்த்தி, ஜீவானந்தம், கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்களின் அறிக்கைகள், அன்று கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்த நிலைப்பாடு, சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த ஒரு திறந்த உரையாடலை ஆதவன் நிகழ்த்துவாரா?
தன்னுடைய கட்சியின் அன்றைய நிலைப்பாடு தவறு என்று கூற வருகிறாரா? அது குறித்து கட்சியில் அதிகாரபூர்வமாக சுயவிமர்சனம் செய்து, கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதா? தெரியவில்லை. அப்படி இல்லையென்றால் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக எப்படி தொடர்ந்து பேச முடிகிறது?
சாதியைப் போலவே அமைப்பும் ஒரு அதிகாரத்தை கொடுக்கிறது. அந்த ஸ்தாபன அதிகாரத்தின் மீது நின்று கொண்டு, மாற்று உரையாடலை ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் புறம் தள்ளுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இடதுசாரி சிந்தனையை விஞ்சி, வர்க்கக் கண்ணோட்டத்தை விஞ்சி, அடையாள அரசியல் தான் ஆதவன் தீட்சண்யா போன்றவர்களிடமும் செல்வாக்கு செலுத்துகிறது என்பதை தான் இத்தகைய போக்குகள் உறுதி செய்கின்றன.
தோழரே! உரையாடல் என்பது dialogue என்று தானே அழைக்கப்படுகிறது. Monologue இல்லை என்பதை உங்கள் உரையிலேயே சுட்டிக்காட்டி உள்ளீர்கள். Monologue என்பது ஒருவகையில் சுயபுலம்பல் தானே. முதுகுளத்தூர் அரசியல் விஷயத்தில் மட்டும் dialogue நிகழ்த்தாமல் Monologue மட்டுமே நிகழ்த்துகிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா? நீங்களும் ஆதிக்க சாதியினர் போல் ‘உங்களிடம் என்ன உரையாடல் வேண்டி கிடக்கிறது” என்ற ஸ்தாபன ஆதிக்க கண்ணோட்டத்தோடு அணுக மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மனம் திறந்த உரையாடலைத் தொடர்வோமா? சமூக மாற்றத்திற்காக……..
தோழமையுடன்
மருதுபாண்டியன்
சோசலிச மையம்
6379240290.
+ There are no comments
Add yours