1962 இல் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டைக் கொண்டாட முடிவு செய்தார்கள். அதையொட்டி அவருக்கு ஒரு நினைவு மண்டபத்தை கட்டலாம் என இராமகிருஷ்ணா மடம் திட்டமிட்டு, இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரியில் பாறை ஒன்றை தேர்வு செய்தனர்.
கன்னியாகுமரியில் பெரும்பான்மையாக இருந்த மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒரு பெரும் போராட்டமாக மாறியது. அப்பாறைக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நினைவு மண்டபம் கட்ட விரும்பியவர்கள் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டனர். அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலம் மண்டபம் கட்ட அனுமதி மறுத்து, ஒரு கல்வெட்டு மட்டுமே வைக்க ஒப்புக் கொண்டார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரை மீறி நினைவு மண்டபம் கட்ட திரைமறைவு வேலைகள் செய்ய வேண்டும் என ராமகிருஷ்ணா மடம் முடிவு செய்து, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த ஏக்நாத் ராண்டேவிடம் பொறுப்பைக் கொடுத்தனர். விவேகானந்தர் நினைவு பாறை கமிட்டி என ஒன்றை ஏக்நாத் அமைத்தார்.
1892 ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரிவந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்தார் என தேதி குறிப்பிட்டுச் சொன்னார்கள். அதில் டிசம்பர்-25 என்பது கிறிஸ்மஸ் நாள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
குமரி மாவட்டத்தின் சமூகச்சூழலை அறிந்து அப்போதே திட்டமிட்டனர். மண்டைக்காடுக்கு முந்தைய திட்டமிடல் இதுதான்.விவேகானந்தர் அப்பாறையில் தவமிருக்கும் பொழுதுதான் ஞானம் பெற்றார் என்பதற்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. ஆனால் இக்கதை அப்போது பரப்பிவிடப்பட்டது.
ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சராக அன்றிருந்த ஹுமாயுன் கபீர், இயற்கையாக அழகாக உள்ள பாறையின் மீது மண்டபம் கட்டுவதை எதிர்த்தார். ஹுமாயுன் கபீர் மேற்குவங்கத்தின் கல்கத்தாவைச் சார்ந்தவர். கல்கத்தாவில் பிறந்த விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு, கலகத்தாவைச் சேர்ந்தவர் எதிர்க்கிறார் என்று மதக் கண்ணோட்டத்துடன் அவருக்கு எதிராக வங்கம் முழுவதும் எதிர்ப்புகளைக் கிளப்பி விட்டார் ஆர்.எஸ்.எஸ்.ஏக்நாத்.
டில்லியில் ஏக்நாத் முகாமிட்டார். லால் பகதூர் சாஸ்திரியின் வழிகாட்டுதலில் விவேகானந்தருக்கு குமரி முனையில் நினைவு மண்டபம் கட்ட மனு எழுதி 323 எம்பிகளிடம் கையெழுத்து வாங்கி பிரதமர் நேருவிடம் கொடுத்து ஒப்புதல் கேட்டார்.
நேருவும் ஒப்புதல் கொடுக்க, காங்கிரஸ் கட்சியில் இருந்த முதலமைச்சரான பக்தவச்சலமும் ஒப்புக் கொண்டார். ஆனால், முதலமைச்சர் பக்தவச்சலம் 15 ×15 அடியில் தான் நினைவு மண்டபம் அமைக்க அனுமதி கொடுத்தார். பிரம்மாண்டமாக கட்டவேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் எண்ணத்திற்கு அது தடையாக இருந்தது.
காஞ்சி சங்கராச்சாரியின் அதிதீவிர பக்தர் முதலமைச்சர் பக்தவச்சலம். சங்கராச்சாரி சொன்னால் பக்தவச்சலம் கேட்பார் எனக்கருதிய ஏக்நாத், 130க்கு 56 அடியில் ஒரு பெரிய கட்டிடத்தின் வரைபடத்தை சங்கராச்சாரியிடம் கொடுத்து, அவர் மூலமாகவே முதலமைச்சர் பக்தவச்சலத்திடம் பேசி சம்மதிக்க வைத்தார். 1970 இல் நினைவு மண்டபம் கட்டி முடித்ததும், விவேகானந்தா கேந்த்ரா என்ற ஒன்றைத் தொடங்கி 1972 இல் குமரி முனையில் காவி கொடியை ஏற்றினார்கள்.
சுவாமி விவேகானந்தரைப் பற்றி படித்தால், அவர் மத நம்பிக்கை கொண்டவர். மதவெறியர் அல்ல. பார்ப்பனிய மூடத்தனங்களுக்கு எதிராகப் பேசியவர். மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரமாக சாஸ்திரங்கள் இருந்தால், அந்த சாஸ்திரங்களைக் கங்கையில் தூக்கி வீசுங்கள் என்று பேசியவர். இந்து மதத்திற்குள் சமூக சீர்திருத்தம் செய்யப் பேசியவர். அவர் சமூக சீர்திருத்தவாதி.
ஈராயிரம் கடவுள்கள் ஒரு மனிதன் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பினால், மனிதகுலம் நாத்திகத்தை தழுவுவது மேல் என்று பேசியவர். சனாதனத்தில் மூழ்கிக்கிடந்த அன்றைய கேரளத்தை முட்டாள்களின் பூமி என்று விமர்சித்தவர்.
அவரையும் உள்ளிழுத்துப் போட்டு தன்னுள் வரவு வைத்துக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். கடல் விழுங்கல்களுக்கு சற்றும் குறைவில்லாதது ஆதிக்க விழுங்கல்கள்.
“தான் பரமார்த்தாவால் அனுப்பி வைக்கப்பட்டவர்” என்று விவேகானந்தர் எவ்விடத்திலும் கூறிக்கொள்ளவில்லை. ஆன்மீகம் வேறு. அயோக்கியத்தனம் வேறு. அயோக்கியத்தனத்தை ஆன்மீகம் எனும் பெயரில் வெளிப்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ்.அரசியல்.
வள்ளுவர் சிலையை கலைஞர் எழுப்பியது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும்.
– கல்கி குமார்.
+ There are no comments
Add yours