இலட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் குழிதோண்டி புதைத்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.நீட் முறைகேடுகள் வெளியாகி நாடு தழுவிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. நீட் தேர்வில் தேசியத் தேர்வு முகமையின் செயல்பாடுகள் பல ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுத்திருக்கின்றன.
புனிதம் , தகுதி , திறமை என்றெல்லாம் கூப்பாடு போட்ட நீட் தேர்வில், முறைகேடுகள் வெளிவந்து நாறிக்கொண்டிருக்கும் சூழலில் அடுத்ததாக நாடு தழுவிய NEET – 24 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கருதி UGC கேட்டுக் கொண்டதின் பெயரில் அத்தேர்வு நீக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வையும் தேசியத் தேர்வு முகமையே ( NTA )நடத்தியதென்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து உயர்கல்வியை வசதி படைத்தவர்களுக்கு தாரை வார்க்கும் நோக்கிலும் கல்வியை தனது இந்துப் பார்ப்பனிய அரசியல் நோக்கங்களுக்காக இரையாக்கவும் மாநிலங்கள் ,கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியை பறிக்கும் நோக்கில் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்டு வரப்படுகின்றன.
இதுவரை NET தேர்வுகள் , ஒன்றிய அரசின் மருத்துவ கல்விக்கான தேர்வுகளை நடத்தி வந்த UGC , CBSE , போன்ற கல்வியியல் தொட்பான நிறுவனங்களிடம் இருந்து தேர்வு உரிமைகள் பறிக்கப்பட்டு கல்விப் புலத்திற்கு தகுதியே இல்லாத ஒரு முகவாண்மை அமைப்பான தேசியத் தேர்வு முகமையிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.
வருங்காலத்தில் மேலும் பல தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும் நோக்கிலேயே மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரங்களைப் பறித்து கூட்டாட்ட்சி முறைகளுக்கு எதிராகவும் கல்வியியல் முறைகளுக்கு எதிராகவும் தேசிய தேர்வு முகமை அமைக்கப்பட்டது.
அதன் வெளிப்படைத் தன்மையின்மையும் வானாளவிய அதிகார குவிப்பும் வருங்காலத்தில் கல்விப்புலத்தை சீரழிவுக்குத் தள்ளும். பயிற்சி நிறுவனங்களின் கொள்ளைக்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்.
மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் இன்று குறிப்பிட்டுள்ள டிவிட்டர் செய்தயில் UGC – NET தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார்.
இராமர் கோயில் நிறுவப்பட்டது எப்படி? ராம்சரிதமனாசில் அனுமார் எந்தக் காதையில் வருகிறார் போன்ற கேள்விகளின் தரத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டமும் புராண – இதிகாசமயமாகி வருவதும் இந்துத்துவ கருத்தியல் திணிப்புக்கு ஆளாகி வருவதும் கவனிக்க வேண்டிய நிகழ்வுகள்.
மாநில உரிமைகள் , கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி , வெளிப்படைத்தன்மை , மாணவர் நலன் ஆகியவற்றுக்கு எதிராக உள்ள தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்.
கல்வியை கார்ப்பரேட்மயமாக்கவும் காவிமயமாக்கவும் துடிக்கும் தேசிய கல்விக் கொள்கை முற்றலுமாக புறக்கணிக்கப்பட வேண்டும்.
கல்வி முழுக்க மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற வேண்டும்.
எழுத்தாளர் :

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply