மாஞ்சோலை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடு

நூறு ஆண்டுகளாக சுரண்டப்பட்ட மக்கள் வெறுங்கையோடு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். 12 மணி நேர உழைப்பு, விடுப்பு இல்லா வேலை, பசி பட்டினியோடு கொடும் காட்டில் போராட்டம் என சக்கையாக உறிஞ்சியெடுக்கப்பட்ட எளிய மக்கள் வீசியெறியப்படுகிறார்கள். இத்தனை ஆண்டுகால உழைப்பிற்கு பின்னர் கையும், காலும் மட்டுமே மிச்சமாக வீதியில் நிற்கிறார்கள்.

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற மாஞ்சோலை தேயிலையை உருவாக்கியவர்களை அன்றாடங்காய்ச்சிகளாக தெருவுக்கு தள்ளுகிறது தேயிலை தோட்ட நிர்வாகம். கொள்ளை லாபம் பார்த்த பாம்பே-பர்மா ட்ரேடிங் கார்ப்பரேசன் எவ்வித நியாய பங்கீடு தராமல் நிறுவனத்தை மூடுகிறது. தொழிலாளர்களை பற்றி அக்கறை கொள்ளாமல் நீதிமன்றம் உத்திரவிடுகிறது. தொழிலாளர் தரப்பு நீதியை நிர்வாகமோ, அரசுகளோ, நீதிமன்றமோ மறுத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். கேட்பார் யாருமின்றி,பலமான கதவிடுக்கில் சிக்கும் பட்டாம்பூச்சியை போல நசுக்கப்படுகிறார்கள். எத்தனைகாலம் தான் அநீதிகளை இம்மக்கள் எதிர்கொள்வார்கள்? சாதியால் ஒடுக்கப்பட்டார்கள், உழைப்பில் சுரண்டப்பட்டார்கள், உரிமையில் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

படித்த சமூகம், சமூகநீதி பேசும் கற்றோர், முற்போக்கு நிறங்களுக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள், கொள்கை அரசியலின் தலைவர்களை அடையாளமாக்கிக்கொண்டவர்கள் கைகோர்த்தால் இம்மக்களுக்கான நீதி கிடைக்கும் என்றால் நாம் அமைதி காக்க முடியுமா?

ஒரு மாலைவேளையில் ஓரிரு மணிநேரம் நாம் ஒன்றுகூடி குரல் எழுப்பினால் நீதிக்கான கதவுகளில் அசைவுகள் வருமென்றால் அதை மறுப்பீர்களா?

நாம் ஏன் இம்மக்களுக்காக ஒன்றுகூடக்கூடாது?
நாம் ஏன் நீதிக்காக குரல் கொடுக்கக்கூடாது?
அரசின் செவிகளுக்கு சென்று சேரும் வலிமை நம் குரலுக்கு இருக்குமெனில் அதை எழுப்ப மறுப்பது நியாயமாகுமா?

நாங்கள் மாஞ்சோலையை பார்த்ததில்லை, அம்மக்களோடு உண்டு, உறவாடியதில்லை, நேரில் கண்டதில்லை, இருந்த போதிலும் அம்மக்களின் நீதிக்காக நிற்கவேண்டுமெனில் களம் காண தயங்கமாட்டோம் எனும் முடிவை கற்றவர்கள் தானே நாம், நேரில் சந்திப்போம், எளியோருக்கு துணை நிற்போம்.
மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமைக்காக போராட்டத்தை துவக்குகிறோம். நீதிக்காக கைகோர்ததிடுங்கள்.

மே17 இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *