[1925 -2024]
மார்க்சிய பெரியாரிய கட்சியின் நிறுவனர் தோழர். வே ஆனைமுத்து நூற்றாண்டு தொடக்கம் இதுவாகும். இந்த ஆண்டிற்கு குடியரசு இதழ் நூற்றாண்டு மற்றும் இந்தியப் பொதுவுடமை இயக்க நூற்றாண்டு என மேலும் பல சிறப்புகள் உண்டு. பெரியாரின் தொண்டராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய தோழர். வே .ஆனைமுத்து 1957 அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.
அத்தோடு தனது அரசுப் பணியையும் துறந்து முழுப் பொது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டவர்.
சிறைப் போராட்டம் பலருக்கு சமூக அரசியலை விளங்க வைப்பது போல தோழர். வே ஆனைமுத்து அவர்கள் அந்த இரண்டு ஆண்டுகளில் அரசியல் சட்டத்தைப் பிழையறப் படித்து அதில் ஒளிந்துள்ள வருண – வகுப்பு ஆதிக்கத்தை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தியவர்.
பெரியார் இயக்கத்தை அதுவரை ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாக முன்மொழிந்த திராவிட இயக்க ஆய்வாளர்களிடம் இருந்து ஆனைமுத்து அவர்கள் வேறுபட்டு அதனை ஒரு அரசியல் இயக்கமாக தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக முன்மொழிந்தவர்.
இந்தியப் பொதுவுடமை இயக்கம் தவறவிட்ட சமூகநீதி , சனநாயக மரபை நிறைவு செய்யும் நோக்கில் மார்க்சியத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வகுப்பு ஆதிக்கத்தையும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார்.
இந்தியத் துணைக்கண்ட அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி , இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க பீகார் , உபி மாநிலங்களில் மாபெரும் பரப்புரைப் பணியை பல மாதங்கள் தங்கியிருந்து நடத்தியவர். நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து பிற்படுத்தப்பட்ட மக்கள் இடப்பங்கீட்டை உறுதிசெய்ய வலியுறுத்தினார்.
மொரார்ஜி தேசாயைச் சந்தித்ததும் அவருடனான சந்திப்பில் அரசியல் அமைப்பில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க உள்ள பிரிவினைச் சுட்டிக்காட்டிப் பேசியதும் பின்னாளில் மண்டல் ஆணையம் அமைய அது வழி வகுத்தது.
உண்மையில் மண்டல் நாயகர் என்றாலும் தோழர் வே . ஆனைமுத்துவுக்கு தகும்.
அதுமட்டுமல்ல பெரியாருக்குப் பிறகு பார்ப்பன – பனியா கூட்டை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டம் ஒரு தேசிய இனங்களின் தன்னாட்சி பெற்ற கூட்டாட்சியாக அமைய வேண்டும் என தொடர்ந்து எழுதி வந்தவர். ‘அரசியல் சட்டத்தின் மோசடி ‘ ‘ஆபத்தின் விளிம்பில் கூட்டாட்சி ‘என்பது அவருடைய தனிச்சிறப்பான படைப்புகள்.
பெரியாரின் குடியரசு இதழ்களை முதலில் தொகுக்கத் தொடங்கியவர். அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் போன்ற சம உரிமைப் போராளிகளின் கருத்துகளை ஆவணப்படுத்தியவர். சிந்தனையாளன் இதழைத் தொடர்ந்து நடத்தியவர் எனும் பன்முக ஆளுமையாக விளங்கியவர்.
இன்றைய இந்துப் பாசிசத்திற்கு எதிரான சமூகநீதி , கூட்டாட்சி கொள்களை ஒரு மாற்றுத்திட்டமாக தோழர் வே ஆனைமுத்துவிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ளலாம்.
தோழர். வே . ஆனைமுத்துவுக்கு தமிழ்நாடு அரசு போதிய மதிப்பளிக்கவில்லை என்பது வருத்தம். தோழர் வே ஆனைமுத்துவிற்கு தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் ஒரு திருவுருவ சிலையை அமைக்க வேண்டும். ஆண்டுதோறும் அவருடைய பெயரில் சமூகநீதி விருது ஒன்றை தமிழ்நாடு அரசு சார்பாக சம உரிமைப் போராளிகளுக்கு ஒன்றிய அளவில் வழங்க ஆவண செய்ய வேண்டும்.
எழுத்தாளர் :
குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours