பேப்பர் லீக்கும் – பாஜகவும் பிரிக்க முடியாத கூட்டணி!

நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் அம்பலமாகி வாதப் பொருளாகி வரும் சூழலில் மக்களவையின் தலைவர் ஓம்பிர்லாவின் மகளும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தவருமான அஞ்சலி பிர்லா இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்வாகியுள்ளது ஐயத்தைக் கிளப்பியுள்ளதாக சமூகவலைத் தளப் பதிவுகள் காட்டுகின்றன.

இந்த அய்யத்திற்கு அடிப்படையை பாஜக வழங்கியிருக்கிறது மறுக்க முடியாத உண்மை.உபியில் அண்மையில் நடைபெற்ற 63 ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கான தேர்வில் வினாத்தாள் வெளியாகி மாபெரும் சிக்கலானது. இந்தத் தேர்வை நடத்தியது பாஜக ஆதரவு பெற்ற ஆரியக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் சுரேசு சந்திரா ஆரியாவுக்குச் சொந்தமான EDU TEST எனும் தனியார் நிறுவனம் . இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதால் அதனை கடந்த பிப்ரவரியில் உபி அரசு தடை விதித்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் மீது பீகார் மேல்நிலைக்கல்விக்கான தேர்வை நடத்தியதில் முறைகேடு செய்த வழக்கு கடந்த 2017 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உபி காவலர் தேர்வு முறைகேடு அம்பலமான சில மாதங்களிலேயே CSIR எனும் ஒன்றிய அரசின் அறிவியல் ஆய்வு கல்வி நிறுவனத்திற்கான ஆசிரியர் தேர்வை நடத்தும் பொறுப்பை EDU TEST நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்தத் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

இராசஸ்தான் , பீகார் , உபி , போன்ற வட இந்திய மாநிலங்களில் அரசுத் தேர்வுகளையே தனியார் நிறுவனங்கள் நடத்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் முறைகேட்ணின் ஒட்டுமொத்த வடிவமாகத் திகழும் EDU TEST நிறுவனத்திற்கே தொடர்ந்து தேர்வு நடத்த ஒப்பந்தங்கள் கொடுத்து வருவது அதன் அரசியல் பின்னணியை நமக்கு உணர்த்துகிறது.

EDU TEST நிறுவனத்தின் நிறுவனரான இந்துத்துவ பேர்வழியும் சர்வதேசிக் ஆர்ய பிரதிநிதி சபா எனும் ஆரிய சமாஜத்தின் பார்ப்பன மேலாண்மைக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் அமைப்பின் தலைவருமான சுரேசு சந்திரா ஆர்யா பாஜகவின் ஒன்றிய அமைச்சர்களோடு வலுவானத் தொடர்பில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகுதி , திறமை எனக் கூப்பாடு போடும் பாஜக தேசிய கல்விக் கொள்கையின் பெயரில்கல்வித்துறைக்கு பல்வேறு நுழைவுத் தேர்வுகளைத் திணித்து வருவதோடு அந்தத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடமும் வழங்கி வருகிறது.

நீட் ,ஜேஇஇ ,நெட் போன்ற அகில இந்தியத் தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வு முகமை ஒரு தனியார் கூட்டுறவு சங்கம் என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

பேப்பர் லீக்கும் பாஜகவும் பிரிக்க முடியாதவை என்பது இதிலிருந்து புலனாகிறது.

எழுத்தாளர் :

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *