தகுதி நீக்கத்திற்கு பின்னால் சதி இருக்கிறது

பத்ம வியூகத்தில் அபிமன்யு
எப்படித் தோற்கடிக்கப்பட்டான் என்பது
நமக்குத் தெரியும்
காப்பியத் துயரங்கள்
ஒருபோதும் முடிவடைவதில்லை
வினேஷ் போகத் கடைசியில் உடைக்க முடியாத
வியூகம் ஒன்று அங்கே இருந்தது
அங்குதான் அவள்
கற்பனை செய்திடாத வியூகத்தால்
வீழ்த்தப்பட்டிருக்கிறாள்

நீதிக்காக தெருக்களில் போராடிய
எவரும் வெல்ல அனுமதிக்கப்பட்டதில்லை
இந்தியாவின் மகள்கள் மட்டும்
எப்படி வெல்ல முடியும்?

அவள் வென்றிருந்தால்
அது இன்னொரு வீராங்கணைக்கு எதிரான
வெற்றியாக இருந்திருக்காது
இன்னொரு தேசத்திற்கு எதிரான
வெற்றியாக இருந்திருக்காது
அது அவளது சொந்த மண்ணின்
அகங்காரத்திற்கு எதிரான
வெற்றியாக இருந்திருக்கும்
அது அநீதி இழைக்கப்பட்ட
தங்கள் உடலின் வெற்றியாக இருந்திருக்கும்

ஒரு வேளை அவள் தோற்றிருந்தால்
அந்தத் தோல்வியின் சுமையை
இந்த தேசமே தோளில் தாங்கியிருக்கும்
அவள் எல்லாவற்றிலும்
கடைசிவரை போராடுகிறவள்
என்ற பிம்பம் நிலைத்திருக்கும்

அதனால்தான்
அவள் களத்தில் நுழையாமலேயே
வெளியேற்றப்பட்டிருக்கிறாள்
அவள் போட்டி துவங்கும்முன்பே
தோற்கடிக்கப்பட்டிருக்கிறாள்
சகுனிகளின் சூதாட்டக் கட்டங்களில்
தாயங்கள் அப்படித்தான் உருளும்

அதிகாரத்தின் உதடுகளில் வஞ்சகப் புன்னகை
ஆணவத்தின் கண்களில் நீலிக் கண்ணீர்
வஞ்சகத்தின் நாவில் பரிவின் சொற்கள்
அவர்கள் தோற்கவிரும்ப மாட்டார்கள்
அவர்களுக்குத் தெரியும்
அவளது வெற்றி
அவர்கள் மீதான கேலிச்சிரிப்பாக
மாறும் என்று

அவர்களால் எதையும் செய்ய முடியும்
அவர்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள்

தங்கத்தில் ஒவ்வொரு கிராமும்
மதிப்பு மிக்கதுதான்
அவளுக்கு நூறு கிராம் எடை கூடியிருந்தது
என்கிறார்கள்
நூறுகூட இல்லை
56 கிராம் மட்டுமே என்கிறது
இன்னொரு செய்தி
56 என்பது நமக்கு
மிகவும் பழக்கமான எண்
அது அச்சுறுத்தும் எண்
அது கேலிக்கூத்தான எண்
ஐம்பத்தாறினால்
ஐம்பத்தாறு வெல்லப்பட்டிருக்கலாம்

தரூவ் ரத்தீ அவ்வளவு சிறிய எடையை
தலைமுடியை மழித்துக்கொண்டாலே
குறைத்திருக்கலாம் என்கிறான்
இந்த நாடு இதுபோல
இன்னும் என்னென்ன துயரங்களை
காணவேண்டியிருக்கும்?

பெண் மீண்டும் ஒரு முறை
உடலால் வெல்லப்படுகிறாள்
அது எப்போதும் வரலாற்றில் நிகழ்கிறது
இப்போது வரலாறாக நிகழ்ந்திருக்கிறது

நீங்கள் வாழ்வில் வெல்ல வேண்டுமா?
முதலில் 100 கிராம் எடையைக் குறையுங்கள்
இல்லை 56 கிராமாக குறையுங்கள்
சைக்கிள் ஓட்டுங்கள்
பட்டினி கிடங்கள்
தூங்காமல் இருங்கள்
பிறகி ‘ ஸீரோ’ எடை நோக்கிச் செல்லுங்கள்
நிலவுக்குச் செல்லுங்கள்
அங்கே எடை வெகுவாகக் குறையும்
அங்கே இதுபோன்ற காரணங்களால்
எவரும் வெளியேற்றப்பட மாட்டார்கள்

7.8.2024
மாலை 4.00
மனுஷ்ய புத்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *