உளவு தேசம் (Surveillance State)

1 min read

ஒன்றிய, மாநில உளவுத்துறைகள் மக்கள் செயல்பாட்டாளர்களை மிக உன்னிப்பாக அவதானிக்கின்றன. கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், வளக்கொள்ளையர்கள், வன்முறையாளர்கள், சமூக விரோதிகள் போன்றோரை வேவு பார்ப்பதைவிட, களப்பணியாளர்களை இவர்கள் அதிகமாக கண்காணிக்கின்றனர். உளவுத்துறைகளைப் பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு என்பது ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக, ஆளும்வர்க்கத்திற்கு எதிராக, யாரும் எழுந்து நிற்காமலிருப்பதும், ஏனென்று கேள்வி கேட்காமலிருப்பதும்தான்.

இம்மாதிரி களப்பணியாளர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக, ஒழுக்கமானவர்களாக, உறுதியானவர்களாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு மேற்படித் துறைகள் அவர்களை அதிகமாக அச்சுறுத்துகின்றன. இந்த நியாயவான்கள் தங்களின் பித்தலாட்ட எசமானர்களை அம்பலப்படுத்தி விடுவார்களோ, அவர்களின் தன்னல ஈடுபாடுகளுக்கு பெரும் தீங்கு விளைவித்துவிடுவார்களோ என்கிற அச்சமே இதற்கு முக்கியமான காரணம்.

அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் வேவு பார்த்தல், அடுத்திருப்போரிடம் தகவல் சேகரித்தல், குடும்ப உறுப்பினர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தல், வீட்டில் சிறைவைத்தல், காவல் நிலையத்தில் அடைத்துவைத்தல், வழக்குகளில் சிக்க வைத்தல், கைது செய்து சிறையில் அடைத்தல் என பல்வேறு (ஓரளவு அல்லது முழுஅளவு) நேரடி வழிகளை அவர்கள் கைக்கொண்டாலும், இத்துறைகள் மேற்கொள்ளும் மறைமுக வழிகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

என்னுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஒன்றிய, மாநில உளவுத்துறைகள் மூன்று முக்கியமான மறைமுக வழிகளை மேற்கொள்கின்றன. முதலாவது, Character Assassination எனப்படும் “தன்மைப் படுகொலை” செய்வது. அதாவது, இவனொரு தேசத்துரோகி, வெளிநாட்டுக் கைக்கூலி, வெளிநாட்டுப் பணம் பெறுபவன், பிரிவினைவாதி, மக்களை/பிரச்சினைகளைத் தூண்டிவிடுபவன், நகர்ப்புற நக்சல் என்றெல்லாம் கேவலப் படுத்துவது அவர்களின் உத்தியாக இருக்கிறது. எந்தவிதமானத் தரவுகளையும், நிரூபணங்களையும் தராது, தங்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கதையளப்பது, “ஆளுமை அழிப்பு” செய்வது தொடர்ந்து நடக்கிறது.

இரண்டாவது, Systematic Isolation என்கிற திட்டமிட்டுத் தனிமைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக, என்னை யாராவது ஒரு நிகழ்வில் பேசுவதற்கு அழைத்தால், நிகழ்ச்சி அமைப்பாளர்களை பல்வேறு உளவுத்துறைகளின் பல்வேறு அதிகாரிகள் மாறி, மாறி, திரும்பத் திரும்ப அழைத்து, “அவரையா அழைத்தீர்கள்?,” “அவரை ஏன் அழைத்தீர்கள்?,” “அவர்மீது எத்தனை வழக்குகள் இருக்கின்றன தெரியுமா?,” என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து, மனம் துவளச் செய்வது இவர்களின் உத்தியாக இருக்கிறது. “இந்த சனியனைப் போய் அழைத்துவிட்டோமே?’ என்று அவர்கள் விசனப்படுமளவுக்கு அவர்களுக்கு வெறுப்பேற்றுகிறார்கள். உற்றார், உறவினர் முதல் உயரே இருக்கும் அதிகாரிகள் வரை யாரும் அருகே வராமலிருக்கும்படிச் செய்ய அயராது உழைக்கிறார்கள்.

மூன்றாவது, Economic Strangulation எனும் “பொருளாதார கழுத்து நெரிப்பு.” அதாவது வேலை, தொழில், வணிகம், நன்கொடை என எந்த வழியிலும் எந்தவிதமான வருமானமும் வராமல் பார்த்துக் கொள்வதில் குறிப்பாய் இருக்கிறார்கள். என்னுடைய, எனது மனைவியினுடைய, என் பள்ளியை நடத்தும் அறக்கட்டளையினுடைய வங்கிக் கணக்குகள் அனைத்தையும் கடந்த பதினோரு வருடங்களாக முடக்கி வைத்திருக்கிறார்கள். SBI வங்கியிடம் முறையிட்டால், அரசின் நடவடிக்கையில் நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிறார்கள். தில்லி உள்துறை அமைச்சகத்திற்குச் சென்று விசாரித்தால், உங்கள் கோப்புக்களையேக் காணவில்லை என்கிறார்கள்.

திரு. ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட மேற்படி நடவடிக்கை, திரு. அமித் சா அந்தப் பொறுப்புக்கு வந்தபிறகும் தொடர்கிறது. எனக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்று பொதுவெளியில் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முதல் இப்போதைய ஆளுநர் ஆர். என். ரவி வரை பலருக்கு வழக்குரைஞர் அழைப்பாணை (வக்கீல் நோட்டீஸ்) அனுப்பிய பிறகு, அவர்கள் அமைதியாக விலகிச் சென்றார்களே தவிர, யாரும் என் மீதான அபாண்டமானக் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தலைப்படவில்லை.

ஓரிரு அண்மை நிகழ்வுகளை மட்டும் உங்களோடுப் பகிர அனுமதியுங்கள். அக்டோபர் 18, 2022 அன்று என்னுடைய தந்தையார், திரு. சு. பரமார்த்தலிங்கம் அவர்கள் இயற்கை எய்திய நிலையில், அடுத்த நாள் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது. வீட்டிலும், இறுதி யாத்திரையிலும், தகனத் தலத்திலும் பத்துக்கும் மேற்பட்ட உளவுத்துறை அதிகாரிகள் வந்து படமெடுப்பதும், வீடியோ எடுப்பதுமாக இருந்திருக்கிறார்கள். கடந்த அக்டோபர் 18, 2023 அன்று வீட்டில் வைத்து முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வை நடத்தினேன். அந்த நிகழ்வுக்கு யார், யார் வருகிறார்கள், என்னென்னப் பேசுகிறார்கள் என்று அவதானிக்கும்படி உளவுத்துறை அதிகாரிகளுக்கு வாக்கி-டாக்கி மூலம் உத்தரவுகள் பறந்திருக்கின்றன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, இடிந்தகரையிலிருந்து ஒரு தம்பி என்னை அழைத்து “அண்ணா, ஊருக்கு வருகிறீர்களோ?” என்று கேட்டார். சற்று நேரத்தில் இன்னொரு சகோதரர் அழைத்து இதே கேள்வியைக் கேட்டார். “இல்லையே, நான் வீட்டில் இருக்கிறேன்,” என்றேன். நீங்கள் ஊருக்கு வருவதாக குமரி மாவட்ட உளவுத்துறையினர், நெல்லை மாவட்ட உளவுத்துறைகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

தமிழ் நாட்டில் நடக்கும் கொலை பாதககங்கள், சாலை விபத்துக்கள், ஆணவக் கொலைகள், சாதி மோதல்கள், போதைப் பொருள் வியாபாரம், வளக்கொள்ளைகள், இயற்கைப் பேரிடர்கள் அனைத்தையும் விட முக்கியமானது உதயகுமார் என்கிற ஒரு தனிநபர் நாகர்கோவிலிலிருந்து தன்னந்தனியனாக பேருந்தில் புறப்பட்டு இடிந்தகரைக்குச் செல்வது எனும் பேருண்மையைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்துவிட்டேன் நான்.

கடந்த டிசம்பர் 14, 2023 அன்று நானும், சில தோழர்களும் குமரி மாவட்டத்திலுள்ள சில குடிமைச் சமூகத் தலைவர்களை சந்திப்பதற்காக காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். தலைக்கவசம் அணிந்த ஒருவர் எங்களை பைக்கில் பின்தொடர்வதைக் கண்டுணர்ந்தோம். பின்னர் அவர் ஓர் உளவுத்துறை அதிகாரி என்பதையும் கண்டுபிடித்தோம். அவரை நாங்கள் இனம் கண்டுகொண்டதை அறிந்ததும், அவருக்குப் பதிலாக அறிமுகமில்லாத ஒருவர் எங்களைப் பின்தொடர்ந்தார். நான் குமரி மாவட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவரை அழைத்து, எங்களைப் பின்தொடர்ந்த குறிப்பிட்ட உளவுத்துறை அதிகாரியின் கைப்பேசி எண்ணைத் தாருங்கள் எனக் கேட்டேன். எண் கிடைத்த நிலையில், பின் தொடர்ந்தவர் விலகிச்சென்றார்.

நான் கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் பேசுகிறேன், போராட்டங்களில் பங்கேற்கிறேன்; ஆனால் இதுவரை ஒருமுறைகூட கேரள காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் என்னை படமெடுத்ததுமில்லை, எனது பேச்சைப் பதிவு செய்ததுமில்லை. ஆனால் சமூகநீதி பேசும் தித்திக்கும் “திராவிட நாட்டில்” குறைந்தது ஐந்து அதிகாரிகள் முகத்துக்கு முன்னால் மூன்றடி தூரத்தில் நின்று கையடக்கக் காமிராவிலும், கைப்பேசியிலும் படமெடுக்கிறார்கள். பதிவுசெய்கிறார்கள்.

இன்பத் தமிழ்நாட்டில் கைப்பேசியை ஒட்டுக் கேட்கிறார்கள், காரைப் பின்தொடர்கிறார்கள், கண்கொத்திப் பாம்பாய் கண்காணிப்பதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள், பெட்டிக் கடைக்காரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், நம்மைப் பிடிக்காதவர்கள் என ஏராளமானோர் உதவியுடன் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் அமெரிக்க உளவுத்துறை செயற்கைகோள்களின் அட்டூழியத்தால் தம் நாட்டு பெண்கள் ‘சூரியக் குளியல்’ (Sunbathing) நடத்த முடியவில்லை என்று வேடிக்கையாகச் சொன்னதாகப் படித்திருக்கிறேன். இந்திய ஒன்றியத்தின் மற்றும் மாநிலங்களின் உளவுத்துறைகளும் நம்மை இப்படித்தான் இடையறாது கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. இழவெடுத்த இஸ்ரேலிய ஆளும்வர்க்கம் கண்டுபிடிக்கும் உளவு மென்பொருட்கள், வேவு பார்க்கும் ஆயுதங்கள் போன்றவற்றை வாங்கிக் குவித்து, இந்தியாவை வேவுபார்க்கும் அரசுடன் கூடிய, ஓர் உளவு தேசமாக (Surveillance State) மாற்றி விட்டார்கள்.

நம் அனைவரையும் அரசு எனும் பெரியண்ணன் கண்ணிமைக்காமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். நாம் யார் யாரிடம் பேசுகிறோம், என்னென்னப் பேசுகிறோம், எங்கேப் போகிறோம், என்ன செய்கிறோம், எவரோடுப் புழங்குகிறோம், யாரோடுத் தூங்குகிறோம் என எல்லாமே பெரியண்ணனுக்குத் தெரியும். உங்களை தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்க முடிவு செய்துவிட்டால், பெரியண்ணனே உங்கள் கணினியில் தவறான தகவல்களைப் பதிவிறக்கம் செய்து, உங்களைத் தளைப்படுத்துவார். உங்களைக் கண்காணிப்பிலேயே வைத்திருப்பதா, அல்லது உங்கள் கதையை முடித்து விடுவதா என்பதையும் பெரியண்ணன் உரிய நேரத்தில் உகந்த வழிகளில் முடிவு செய்கிறார். கனடா நாட்டோடு உறவு முறிவு, அமெரிக்காவுடனான உறவில் விரிசல் போன்றவற்றுக்கான காரணங்களை எல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்தானே?

கும்பல் கொலை, காவல் நிலைய மரணம், காணாமற்போதல், என்கவுண்டர், சிறை மரணம் என மனித உயிர்கள் மயிரென மலிந்து போய்விட்டதையும், அச்சமற்ற வாழ்வை ஐயமுற்ற வாழ்வு அபகரித்துக் கொண்டிருப்பதையும், இங்கே யாரும் எப்போது வேண்டுமானாலும் இல்லாமற் செய்யப்படலாம் எனும் நிலைமை ஏற்பட்டிருப்பதையும், மக்களின் காவல்துறை மன்னர்களின் ஏவல்துறையாக மாறிவிட்டிருப்பதையும் பார்க்கும்போது, சுதந்திரக் காற்றை சுவாசித்து வளர்ந்த என்னுடைய இளமைக்காலம் நெஞ்சில் நிழலாடுகிறது. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் ஒன்று உள்ளுக்குள் ஓங்கி ஒலிக்கிறது:
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே,
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே,
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே,
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே – நாமே
வாழ்ந்து வந்தோமே!

எல்லாவற்றையும் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோமே,
உரிமைகளற்ற குற்றவாளிகளாய் நடத்தப்படுகிறோமே,
யாரும் யாரையும் நம்பமுடியாமல் அழியப் போகிறோமே,
எனும் பெருத்தக் கவலையுடன்…

சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்,
டிசம்பர் 26, 2023.

You May Also Like

+ There are no comments

Add yours