ஜேவிபி வெற்றியைப் பற்றி சிங்கள இடதுசாரி அறிவாளி எனக் கருதப்படும் ஜெயநேவ உயன்கொட இன்றைய இந்துவில் கட்டுரை எழுதியிருக்கிறார். இது தான் இந்து ராம் முதல் இந்திய பொதுவுடமைக் கட்சியினரின் பன்னெடுங்காலமாக நீடிக்கும் அரசியல் கண்ணோட்டமாக உள்ளது.
சிங்கள அரசியல் மேலாதிக்க குழுக்களைத் ( political elites ) தூக்கி எறிந்துவிட்டு ஒரு எளிய பிரிவில் இருந்து வந்த முதல் அரசத் தலைவராக அனுரா முன்வைக்கப்படுகிறார்.
நம்முடைய கேள்வியெல்லாம் மிக எளிமையானது. சிங்கள மேல்தட்டு அரசியல் வகுப்பை இயக்கி வந்த அரசியல் கொள்கை எது ? என்பது தான் அந்தக் கேள்வி.
உலகின் பல நாடுகளில் உயர் ஆளும் வகுப்பு தனக்கென ஒரு அரசியல் கொள்கைகளை அந்தந்த நாட்டின் அரசியல் – பொருளியல் வரலாற்றிற்கேற்ப வரித்துக் கொண்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக இந்திய ஆளும் வகுப்பு பார்ப்பன – பனியா அரசியல் கொள்கையைக் கொண்டிருக்கிறது. இசுரேலில் சியோனிசம் , ஜெர்மனியில் நாசிசம் , இத்தாலியில் பாசிசம் , ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வெள்ளை நிறவாத – கிறத்தவ அடிப்படைவாத கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் டோரிக்கள் , கன்சர்வேட்டிவ்கள் போன்ற பிற்போக்கு ஆளும் கொள்கையை கொண்டுள்ளன.
இவற்றைப் போலவே இலங்கையின் அரசியல் உயர்தட்டுப் பிரிவினருக்கு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை ஒரு அரசியல் கொள்கையாக கொண்டிருக்கின்றன.
இலங்கையின் நவீன அரசியல் வழலாற்றிலும் அதன் அரசுப் பொறியமைவுக் கட்டமைப்பிலும் சிங்கள பௌத்த தேசியம் என்பது பிரிக்க முடியாத அரசியல் கொள்கை.
வெறும் பொருளாதார ஏற்றதாழ்வை மட்டும் சிங்கள உயர் ஆளும் வகுப்பு கொண்டிருக்கவில்லை .தன்னுடைய உயர் மேல்தட்டு வகுப்பு ஆட்சியைப் பாதுகாக்க சிங்கள பௌத்த அரசியல் கொள்கையைக் கொண்டிருக்கிறது. சிங்கள பௌத்த தேசியத்தின் அடிப்படையில் ஒரு ஒற்றைத்தன்மையுள்ள அரசியல் சட்டத்தை இயற்றிக் கொண்டது.
அதனிடத்தில் தமிழ் , முசுலீம் இன மக்களுக்கு சமத்துவமோ , சம உரிமையை இல்லை என்பது தான் இலங்கையின் அத்தனை அரசியல் நெருக்கடிக்கும் அடிப்படையான காரணம்.
இந்தக் காரணிகள் ஒரு நீண்ட உள்நாட்டுப் போரையும் அதன் பின்விளைவாய் ஒரு பெரிய பொருளியல் நெருக்கடியையும் இலங்கையில் தோற்றுவித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
உயகொண்டாவோ , அனுராவோ தமிழ் மக்களின் அரசியல் சமத்துவ உரிமைகளை வெறும் பொருளாதார ஏற்றதாழ்வைச் சரிசெய்வதற்கான அரசியல் சிக்கலாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பது தான் சிக்கலின் அடிப்படையே.

சிங்கள பௌத்த தேசியவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட கொடூராமன போர் ஓர் இனப்படுகொலையையும் போரஉக்குப் பிந்தைய தமிழ் மக்களை சொந்த நாட்டிலே ஏதுமற்ற மக்களாக முடக்கிப் போட்டிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் கடந்த பத்தாண்டுகளாக இன்றுவரை தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ்ப் பகுதி பொருளியல் முடக்கத்தாலும் இராணுவ படையினரின் முற்றுகையிலும் முற்றிலும் சீரழிந்திருக்கிறது.
இலங்கை அரசின் , இராணுவ , நிர்வாக கட்டமைப்பு முழு சிங்களமயமாக்கப் பட்டிருப்பதும் ஏனையோர் அன்னியமயமாக்கப்பட்டிருப்பதும் தான் இலங்கையின் அரசியல் துயரத்தின் அடிப்படை.
இவை எவற்றையுமே ஒருவர் காணாமல் சிங்கள தேசத்தின் வெற்றிக் கூச்சல் கதைகளைப் பேசுவது இடதுசாரித்துவமாக ஏற்றுக் கொள்ள முடியும்.
இந்தியாவில் பாஜக உருவாக்கி வரும் ஒற்றைத் தேசிய இந்துராஷ்டிரக் கட்டமைப்புக்கு எதிராக இடதுசாரிகளுக்கு இப்போது தான் மாநில உரிமைகள் பற்றிய பார்வையும் கண்ணும் திறந்திருக்கிறது.
சிங்கள அரசமைப்பு அடிப்படையில் ஒற்றைத்தன்மை கொண்ட ( unitary state ) வகைமை கொண்டது. அங்கே தமிழ் முசுலீம் உள்ளிட்ட பல்லின மக்களின் சமத்துவ உரிமைகளுக்கு வழி இருக்கிறதா?
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்கள. எழிம்போதெல்லாம் தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய பொதுவுடமைக் கட்சிகள் தமிழ் மக்கள் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற முழக்கத்தை கடந்த காலங்களில் எழுப்பி வந்திருக்கிறது.
அது என்ன அரசியல் தீர்வு என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம். இவ்வாறு தான் வெற்று அடிப்படை முழக்கத்தை பொதுநீரோட்ட பொதுவுடமைக் கட்சிகள் எழுப்பி வந்தன.
இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பயிலும் எவரும் அங்கே ஒரு தேசிய இனச் சிக்கல் உள்ளது அதற்கு சனநாயகப்பூர்வமான தீர்வு காணப்பட வேண்டும் என எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது தனி தேச உரிமையை ஆதரிக்க வேண்டியதாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது இலங்கை எனும் அரசியல் எல்லைக்குள்ளே கூட பல்லினங்கள் ( Multi ethnics) சமத்துவ அடிப்படையில் சேர்ந்து வாழும் ஒரு கூட்டாட்சி அமைப்பு முறையாகக் கூட இருக்கலாம்.
இந்திய விரிவாதிக்க நலன்களின் ஒட்டு வாலாக இருந்து கொண்டு 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தைத தாண்டி செல்லாத தீர்வைத் தான் இடதுசாரிகளும் இனச்சிக்கலுக்குத் தீர்வாக முன்மொழிகிறார்கள்.
இந்தியாவில் மாநிலங்களே நகராட்சி மன்றங்களாகத் தான் இருக்கிறது என நாம் குற்றஞ்சாட்டுகிறோம். மாநிலங்களுக்கு தன்னாட்சி வேண்டுகிறோம்.
உள்ளாட்சிக்கு கூடுதல் நிதி கூட கேட்டுப் போராடுகிறோம்.
ஆனால் இலங்கையில் எந்த உரிமையுமற்ற மாகாண அரசு பொறியமைவு முறையை முன்மொழியும் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை வலியுறுத்துகிறோம் . இது முரண்பாடு இல்லையா?
இன்னொரு நாட்டின் இறையாண்மைக்குள் ஒரு அளவுக்குத் தான் நாம் தலையிட முடியும் என்கிறார்கள் இடதுசாரிகள்.
ஆனால் பாலஸ்தீன விடுதலை உரிமைக்கு மூச்சடக்கி முழக்கமிடுகிறோம்.
தமிழ்ப்பகுதிக்குத் தேர்தல் பரப்புரைக்கு வந்த அனுரா ” தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கப் போவதாக நான் கூறமாட்டேன் என வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இலங்கை தேசத்தின் வளத்திற்காக வேண்டுமானல் எனக் வாக்களியுங்கள்.
நீங்கள் வாக்களித்து நான் வெற்றி பெற வேண்டிய கட்டாயமில்லை” எனும் தொனியில் பேசியிருக்கிறார்.
இவர் தான் இலங்கையின் இடதுசாரி.
ஐஎம் எப் , இலங்கையின் வல்லரசிய தரகு அரசியல் வகுப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தமிழ் மக்கள் எதிர் கொண்டு வரும் கொடுமைகளுக்கு ஒரு அஃறிணைப் பொருளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பையாவது கொடுக்க வேண்டாமா?
தமிழ் மக்களின் சமத்துவ உரிமையைப் பற்றிக் கதைக்காத இடதுசாரித்துவத்திற்கு ஏதாவது மதிப்புண்டா? என்பது தான் நமது கேள்வி! சிங்கள பௌத்த தேசியவாதம் மனித உரிமை , மூன்றாம் உலக நாட்டின் சனநாயகத் தேசியம் , இப்போது இடதுசாரித்துவம் என வெவ்வேறு போர்வைகளில் கடந்த காலங்களில் இருந்து இப்போது வரை வலம் வருகிறது.
இலங்கையில் அனுரா வெற்றி பெற்றிருக்கிறார் ஆட்சி மாற்றம் வந்திரகு்கிறது என்று வேண்டுமானல் பேசலாம் அதனை சிவப்பு அலை என்றெல்லாம் கரடிவிட வேண்டாம் தோழர்களே!
உண்மையில் இலங்கையில் பல்லினங்கள் சமத்துஒத்தோடும் சுதந்திரத்தோடு வாழும் ஓர் இடதுசாரி அரசியல் வேண்டும் என்பது தான் நம்முடைய இலட்சியம். அது ஓர் நீண்ட பாதை அதை அடைவதற்கு மெய்யான ஓருலகிய ( சர்வதேசிய) கண்ணோட்டத்தோடு உழைப்போம்!

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply