விடிந்தால் எழுந்தால் கிண்டி மாளிகையில் இருந்து நாள்தோறும் சநாதனம் குறித்த அறிவுரைகளும் விளக்கங்களும் ஒரு சன்னியாசியைப் போல கிண்டியார் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
‘சநாதனம்’ அறியப்பட்ட கருத்துகளுக்கு புதுப்புது விளக்கங்கள் தருவதன் மூலம் அதனை பொது மக்களின் சிந்தனையில் மறையாமல் பாதுகாப்பது அவர் உள்ளிட்ட சநாதன தர்மத்தில் நாட்டம் உள்ள மோகன் பகவாத் , வட இந்திய சாமியார்கள் , பாஜகவின் அரசியல்வாதிகள் , நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் எனப் பலரின் பெரிய பட்டியல் உள்ளது.
சநாதன தர்மம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளபடி அது நான்கு வர்ணங்களைப் பாதுகாக்கும் சாதி தர்மம் என்பதே உண்மை. சாதி தர்மம் , குலத் தொழில் என அதன் உண்மைப் பொருளைக் குறிப்பிட்டால் சநாதனத்தின் நோக்கம் மக்கள் மன்றத்தில் அம்பலம் ஆகிவிடும் என்று பயந்தே அதற்குப் புதுப்புது விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
சநாதன தர்மத்தின் நோக்கம் அடிப்படையில் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களாக இருக்கக்கூடிய சூத்திர , பஞ்சம மக்களின் அரசியல் ,பொருளியல் , பண்பாட்டு உரமைகளைப் பறித்து பார்ப்பன – பனியா கூட்டத்தின் கையில் ஒப்படைப்பதேயாகும்.
20 ஆம் நூற்றாண்டில்
சநாதன தர்மத்தை மீளக்கட்டமைக்கும் அரசியல் நிறுவனங்கள் தோற்றம் பெறக் காரணம் அக்காலத்தில் அரசியல் , சமூக ,பொருளியலில் உருவான சனநாயக போக்கை எதிர்த்தேயாகும்.
பாரத் மகாமண்டல் என மதன்மோகன் மாளவியாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் பின்னர் இந்துமகாசபாவாக உருவெடுத்தது.
கோயில் நுழைவில் இருந்து , கைம்பெண் மறுமணம் , பொது இடங்களைப் புழங்கும் உரிமைகள் , அரசியலில் இடப்பங்கீடு என அனைத்து சனநாயகக் கோரிக்கைகளையும் தடுக்க சநாதன தர்மம் தேவைப்பட்டது.
மோடியின் ஆட்சியில் சநாதனம்!
இருபதாம் நூற்றாண்டில் ஒரு சனநாயக எதிர்ப்பு இயக்கமாக உருவெடுத்த சநாதன தர்மம் குரல் கம்மி பதுங்கியிருந்தது. அது மீண்டும் பாஜகவின் ஆட்சியில் பதுங்கிய புற்றிலிருந்து மீண்டும் தலையைக் காட்டத் தொடங்கியுள்ளது.
அரசியலில் , பொருளியலில் , பண்பாட்டில் ஒரு ஒற்றைத்தன்மையும் , அதிகார குவிப்பும் ஏற்படத் தொடங்கும் போது ஆளும் வகுப்புகளுக்குப் பிற்போக்கு கருத்தியலோடு கூட்டுத் தேவைப்படுகிறது.
பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு சனநாயக ஆட்சி முறைமையை வீழ்த்த முதலாளித்துவ வகுப்பு பிற்போக்கு வகுப்புகளோடு கூட்டு வைத்துக் கொண்டு தனது சுரண்டல் நலன்களைப் பாதுகாத்து வருகின்றது.
பல முதலாளித்துவ சனநாயக நாடுகளிலும் அரசியலில் படுபிற்போக்கான பாசிஸ்டுகள் தோற்றம் பெறுவதற்கு காரணம் பொருளியலில் ஏற்படக்கூடிய குவிவு முதன்மையான காரணம்.
அதனை , அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதாலளிகள் தங்கள் சுரண்டலைக் காக்கவும் அவர்களுடைய கூட்டாளிகளான பன்னாட்டு பெருமுதலாளிகள் தங்களுடைய சுரண்டல் நலன்களைக் காக்கவும் தங்களுடைய கூட்டாளிகளுக்கு சுரண்டலில் பங்கு கொடுக்கவும் சநாதனம் எனும் சனநாயகப் பகைப் பிற்போக்குக் கொள்கை ஆளும் பாஜகவுக்கு தேவைப்படுகிறது.
எனவே தான் அரசியலில் அதிகாரங்களைக் குவித்து எல்லாவற்றையும் ஒரே நாடு ; ஒரே பண்பாடு , ஒரே நாடு ; ஒரே வரி , ஒரே நாடு ; ஒரே அரசு , ஒரே நாடு ; ஒரே கட்சி எனும் பாசிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.இதன் உள்ளடக்கம் பொளியல் சுரண்டைலைத் தீவிரப்படுத்துவதாகும்.
அரசியலில் , பொருளியலில் , பண்பாட்டு உரிமைகளில் சனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதும் பிற்போக்கு ஆட்சி முறைமையை நிறுவுவதுமே சநாதனமாகும்.
மோடி ஆட்சியின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் அரசியல் சனநாயகத்தை (Political democracy) , பொருளியல் சனநாயகத்தை ( Economic Democracy ) ,சமூக சனநாயகத்தை ( Social democracy) பறித்து வருவதை நாம் பொருத்திப் பார்க்கலாம். 44 தொழிலாளர் சட்டங்களை வெட்டிக் குறுக்கி 4 தொகுப்புகளாக மோடி அரசு மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சநாதனம் எனும் கருத்தியல் தேவைப்படுகிறது.
நம்முடைய தமிழ்நாட்டில் சநாதனத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் மரபுவழி இயக்கமான திமுக ஆட்சியில் இருக்கிறது. துணை முதல்வர் உதயநிதி சநாதனம் வேரடி மண்ணோடு அழிக்கப்பட வேண்டும் என அறைகூவல் விட்ட கையோடு வழக்குகளையும் சந்தித்து வருகிறார்.
அரசியலில் சநாதனத்தை எதிர்ப்பதாகக் கூறும் திமுக சங்கம் சேரும் அரசியல் சனநாயகத்தை மறுத்து வருகிறது. அரசியல் சட்டம் பிரிவு 19 ல் வழங்கப்படுள்ள அடிப்படை உரிமை சங்கம் சேரும் உரிமை.
காலனிய ஆட்சியில் தொழிலாளர்கள் உயிர் கொடுத்துப் போராடிப் பெற்ற உரிமையின் பயனாகவே தொழிற சங்க சட்டம்(1926) உருவாக்கப்பட்டது.
தொழில் வளமும் , வேலைவாயப்பும் தேவை என்ற போதிலும் தொழிலாளர் உரிமையைப் பறிகொடுத்து தொழில் வளர்ச்சி பொருளியலை ஒரு சிலரிடம் குவிக்கும் நோக்கமுடையது. சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது.
ஒரு மாதத்தைத் தாண்டி காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் ஆலையின் தொழிலாளர்கள் சங்கம் சேரும் அடிப்படை உரிமைக்காக , கூலி உயர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாம்சங் நிறுவனத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்து தொழிலாளர்களின் சுயமரியாதையைக் காக்க தொழிற்சங்கம் அமைப்பது அடிப்படையான கோரிக்கை ஆகும்.
இவற்றை மறுப்பது சநாதனமேயாகும்.
சாம்சங் நிறுவனத்தின் கொரியத் தொழிற்சாங்கம் அந்நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கமாக செயல்பட முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கத்தை அனுமதிக்க மறுப்பது நமது நாட்டின் மக்களின் இறையாண்மையை மதிக்க மறுப்பதேயாகும்.
சநாதன சொல்லாட்சியஎதிர்ப்பது மட்டுமல்ல சநாதன எதிர்ப்பு அரசியல். சநாதனத்தின் உட்பொருளாயுள்ள உரிமை மறுப்பை எதிர்ப்பதே உண்மையான சநாதன எதிர்ப்பு அரசியலாகும்.
சநாதனத்தின் கொடிய வேரைப் புதைக்க அரசியல் சனநாயகம் அடிப்படையானது.
சாம்சங் போராட்டம் சநாதனத்திற்கு எதிரான போராட்டம் ! சமத்துவத்திற்கான போராட்டம் ! சனநாயகத்திற்கான போராட்டம் ! அதனை மறுப்பதும் தடுப்பதுமே சநாதனம்!
சாம்சங் தொழிலாளர் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்!
குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours