நான் அங்கிருந்து வருகிறேன்!

நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவன்
எல்லோரையும் போல
ஓயாமல் ஏராளமான நினைவுகள்
சாக்கு கொடுமை நிரம்பிய மனிதர்களாக வந்து நிரம்பிக் கொண்டே இருக்கிறார்கள்

எனக்கு தாய் உண்டு. தாய் வீடு உண்டு.
சகோதரர்கள் உண்டு;
நண்பர்கள் உண்டு;
பனியில் இறுகிப்போன
ஒரு சிறையின் அறைகூட ஊரில் உண்டு.
புரளும் அலைகள் எனக்குண்டு- அவற்றைப்
பறித்துக் கொண்டு போன
கடல் நாரைகளின் நினைவும் உண்டு.
எனக்கென்ற சித்தாந்தமும் உண்டு.
நெடிதுயர்ந்து வளர்ந்த
பச்சைப் புல்லும் உண்டு.
பலம் மிக்க வாளய்.

சொற்களின் உச்சம் கடந்து
ஒரு நிலவும் உண்டு;
கூவி தெரியும்
பறவைகளின் உணவை பகிர்ந்து கொண்டேன் –
அவை கடவுள் வழங்கியவை என்றார்.
இதுவன்றி இதோ அழிக்கவே முடியாத எங்கள் ஆலிவ் மரமும் உண்டு.

உயிருள்ள துடிப்பான நிலத்தின் உடலை
வாள்கள்
துயர்கொண்ட மேசை மீது
கிடத்தும் முன்னால்….
ஆசையோடு இந்நிலமுழுதும் நடக்கின்றேன்…

நான் அந்தப் பூமியிலிருந்து தான்
வருகிறேன்.
தாய்க்கு அந்த வானத்தை வழங்குகிறேன்.
வானம் தன் தாய்க்காக அழும்போது
தாயகம் திரும்பும் மேகத்துக்கு
என்னை நான் அறிவித்து அழுகிறேன்.
ரத்தச் சிவப்பேறிய
இப்பூமி அறிய தகுந்த
அத்தனைச் சொற்களையும்
நான் கற்றேன் .
அடக்கும் சட்டங்களை அடித்து நொறுக்க,
சொற்கள் அனைத்தும் அறிந்து உடைத்தேன்,
ஒற்றைச் சொல்லை உருவாக்க :
தாய்நிலம்!

மகமூத் தர்வீஷ்
( பாலஸ்தீனப் பாவலன் )
தமிழில் – ஆற்றுப்பாலம் பஷீர்
நன்றி – வையம் இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *