20 ஆம் நூற்றாண்டில் உருவான சமூக அரசியல் மறுமலர்ச்சியின் விளைவாக நீதிக்கட்சி , சுயமரியாதை இயக்கம் , பொதுவுடமை இயக்கம் , ஒடுக்கப்பட்டோர் இயக்கம் , தனித்தமிழ் இயக்கம் ஆகியவை தமிழ் அரசியல் அரங்கில் தோற்றம் பெற்றன. இவையாவும் அதிகாரம் கரடுதட்டிப் போயிருந்த பழைய தமிழ்ச் சமூக அமைப்பில் மாற்றத்தையும் புதுமையையும் வேண்டி நின்றன.
மரபான நிலவுடமை ஆதிக்கமும் அதனோடு பிணைந்த சைவநெறியும் சாதிய காழ்ப்பும் கொண்ட தமிழ்ச் சநாதன மரபொன்று மேற்கண்ட புதுமை இயக்கங்களைக் கண்டு நடுங்கியது. ஒருபுறம் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்துக் கிளம்புவதாக அறிவித்துக் கொண்ட சைவ வெறி இயககம்
தமிழ்ச் சமூக அமைப்பில் எத்தகைய புதிய சீர்திருத்தத்தையும் ஏற்க மறுத்தது.
இந்த சைவர் இயக்கத்தில் வ.உ.சியைத் தவிர ஏனையோர் பார்ப்பனிய மேலாதிக்கத்தோடு இணக்கம் காணவே முற்பட்டனர் . அதில் கடும்போக்குச் சைவர்களான முத்தையா பிள்ளை
மென்போக்குச் சைவரான மறைமலையடிகள் , கி.ஆ.பெ. விசுவநாதம் என அனைவரும் உட்படுவர்.
மறைமலையடிகள் பார்ப்பன மேலாதிக்கத்தையும் சமக்கிருத – இந்தி மேலாதிக்கத்தை எதிர்த்த மறைமலையடிகள் சைவருலகின் பிற்போக்குத்தனங்கள் மீது சுயமரியாதை இயக்கத் தீரர்கள் நடத்திய பகுத்தறிவு , சமூகநீதி , சமத்துவம் எனும் கருதுகோளின் வழியில் நடத்திய தாக்குதலை ஏற்றுக்கொள்வராக இல்லை.
மறைமலையடிகளின் கருத்துகளின் மீது தேசியவாதிகளும் பார்ப்பன சநாதனிகளும் நடத்திய கடுந்தாக்குதலை பெரியார் மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுகி மறைமலையடிகளைத் தக்க நேரத்தில் காத்திருக்கிறார்.
சைவர் – சுயமரியாதை இயக்கத்தார் மோதல் ஓரளவு மட்டுப்பட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஓரணியில் திரண்டு போராடி வெற்றிபெற வைத்தது.
சைவருலகின் பிற்போக்குத்தனங்கள் மீது பெரியாரும் சுயமரியாதை இயக்கத்தாரும் நடத்திய கருத்தியல் தாக்குதல் தமிழ்ச் சமூகத்தை சனநாயகப்படுத்துவதற்கான
போராட்டமாகவே இருந்தது.
பெரியாரை மொழியை மட்டும் வைத்துத் தாக்குதல் நடத்தும் போக்கு அண்மைக் காலத்தில் தீவிரமாகியுள்ளது.
தமிழ் என்று கோரிய தமிழ்ச் சநாதனிகளுக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் சுயமரியாதை இயக்கத்தை வேளாள இயக்கம் எனக் குற்றஞ்சாட்டிய பொதுவுடமைக் கட்சியனருக்கும் பதிலளிக்கும் வகையிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ்ச் சமூக அரசியலில் ஏற்பட்ட அசைவியக்கத்தையும் அறிந்துகொள்ள ஒரு அருமையான ஆய்வுநூல்.
ஆய்வாளர்.இரா. வேங்கடாசலபதி 1990 களில் தோழர். வே. ஆனைமுத்து அவர்களின் வேண்டுகோளின் படி எழுதி பதிப்பிக்க முடியாமல் தனி நூலாக ஆகியிருக்கிறது.இரா. வேங்கடசலபதியின் இன்றியமையாத பங்களிப்பு.
இன்றைய தலைமுறை பழைய வரலாற்றில் இருந்து நிகழ்காலத்தில் நடக்கும் கருத்தியல் போராட்டங்களை அறிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் இலவயமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours