வெற்றிமாறனுடைய விடுதலை -2 திரைப்படம் இந்த நேரத்தில் வெளிவந்திருக்கிறது.

இந்திய ஒன்றியம் பொதுவுடைமைக் கட்சி நூற்றாண்டை நோக்கி நடைபோடத் தொடங்கியிருக்கிற காலம்.
இந்த நூற்றாண்டில் தமிழ்ப் பொதுவுடைமைச் சிந்தனை முறை தோற்றம் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவையும் பொதுவுடைமை இயக்கம் கடந்த வந்த வரலாற்று வழியையும் மீளச் சிந்தித்துப் பொருதிக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இயக்குநர் வெற்றிமாறனுடைய
விடுதலை -2 திரைப்படம் இந்த நேரத்தில் வெளிவந்திருக்கிறது.

தமிழ் மற்றும் இந்தியத் திரைப்பட உலகம் பொதுவுடைமைக் கட்சிகளுடைய போராட்டம் , பொதுவுடைமைத் தலைவர்கள் பற்றிய தனி வரலாறு , சில குறிப்பிட்ட நிகழ்வுகளை குவியப்படுத்தி அதில் பொதுவுடைமை இயக்கத்தின் பங்கு என்பதாக பொதுவுடைமைக் கட்சியினர் பற்றிய பதிவுகளை பதிவு செய்திருக்கிறது.

ஆனால் ஒரு முழுத் திரைப்படமாக முதன் முதலில் தமிழ் நிலம் என்ற வட்டத்துக்குள் இயங்கிய பொதுவுடைமைக் கட்சிகளில் ஏற்பட்ட கொள்கைப் பிளவுகளை சமூக மாற்றத்துடன் இணைந்த முறையில் ஆவணப்படுத்திய முதல் திரைப்படமாக விடுதலை வந்திருக்கிறது. அதற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்குப் பாராட்டுகள்!

பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து ஒடுக்குண்ட மக்களின் உரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக எழுந்து கீழ்த் தஞ்சை போன்ற பகுதிகளில் உழைப்பாளிகளுடைய சம உரிமையை நிலைநாட்டிய போரட்டத்தில் இருந்து கதைக்களம் தொடங்குகிறது.

ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் தோழர் சீனிவாசராவ்
போன்ற தோழர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் பின்னர் மெல்ல வசந்தத்தின்
இடிமுழக்கமாய் எழுந்த மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் பகுதியாய் தோற்றம் பெற்ற தோழர் சாரு தலைமையிலான மா-லெ கட்சியாக உருவெடுத்தது.

அந்த எழுச்சியின் விளைவாக தமிழ்நாட்டிலும் கிளர்ந்தெழுந்த இளையோர் பட்டாளத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பின்னர் அதிலிருந்து தேசிய இனங்களின் தன்னுரிமை என்ற லெனினிய கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு தனி இயக்கம் கண்ட ( தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி )தமிழ்நாடு சோசலிச கட்சியில் களமாடிய தோழர்களான தோழர் தமிழரசன் , மாறன், பழநி , கலியபெருமாள்
ஆகியோரின் போராட்ட வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறது.
அதே நேரத்தில் அப்பு , பாலன் போன்ற ஈகிகளையும் , கோதாண்டராமன் போன்ற போராளிகளையும் திரைப்படம் நினைவுபடுத்தத் தவறவில்லை.

பின்னர் கருவிப் போராட்டம் குறித்த தன்னாய்வு அது இயக்கத்தை முடக்கியதோடு மக்களிடம் இருந்து தோழர்களைத் தனிமைப்படுத்தியது தொடர்பான தன்னாய்வோடு ஒரு மக்கள் திரள் வழியைப் பின்பற்றி மக்களை அமைப்புகள் வேண்டுவதாய் பெருமாள் வாத்தியார் ( திரையில் ) அவருடைய படுகொலையோடு திரைப்படம் முடிகிறது.

பொதுவுடைமை இயக்கம் இயங்கிய சம காலத்தில் திராவிட இயக்கம் தலைமையிலான சமூகநீதி , சமநீதிப் போராட்டத்தையும் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் பற்றிய பதிவையும் இணைத்தே காண முடிகிறது.

மார்க்சியம் ,வகுப்புப் போராட்டம் , தேசியம் , நிலக்கிழாரிய சுரண்டல் எதிர்ப்பு , வர்ண சாதி எதிர்ப்பு பெண்ணியம் என்ற அனைத்தையும் தழுவிய தமிழ்ச் சிந்தனை முறைமையையும் திரைப்படத்தினூடாக வரும் காட்சிப் படிமங்களின் வழி வள்ளலார் அயோத்திதாசப் பண்டிதர் , சிங்காரவேலர் பெரியார் போன்ற தமிழ்ச் சமத்துவ அடையாளங்களும் படிமங்களாகக் காட்டப்பட்டிருப்பது சமத்துவத்தை அடைவதற்கான போராட்டத்தில் இந்த அடையாளங்கள் மற்றும் அவர்களுடைய பங்களிப்புகளை தமிழ்ச் சமூகம் ஏந்திக்கொள்ள வேண்டிய தேவையை நினைவுபடுத்துகிறது.

படம் மூன்று தளங்களில் இயங்குகிறது. ஒன்று பொதுவுடைமக் கட்சியின் போராட்டங்கள் , ஈகம் , வாழ்க்கை முறை என்பது ஒரு பகுதியாகவும் இரண்டாவதாக அரச வன்மைறை , கொள்கை வகுப்பாளர்களின் மக்கள் பகை ஆட்சிமுறைமை நாம் சனநாயகம் என்று கருதிக் கொண்டிருக்கிற நிறுவனங்களின் மீது அவர்கள் செலுத்தி வருகிற ஆதிக்கம் என்று அரசு ( State) எனும் வடிவம் எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான காட்சிப் பதிவுகளைக் கொண்டுள்ளன.

மூன்றாவதாக மக்கள் இந்தப் போராட்டங்ககளின் ஒரு பகுதியாக பெற்ற உரிமைகளை எண்ணிப் பார்க்க வேண்டுவதாகவும் அரச நிறுவனங்கள் கட்டி எழுப்புகிற செய்திகள் , கருத்துகள், மக்கள் உரைமகளுக்காப் போராடுகிறவர்கள் மீது அரச நிறுவனங்கள் சுமத்துகிற பயங்கரவாத – பிரிவினைவாத முத்திரைகள் ,
போலி மோதல் படுகொலைகள் ,
ஆகியவற்றைப் பகுத்துப் பார்க்க வேண்டுவதானக் காட்சிப் பதிவுகளையும் கொண்டிருக்கிறது.

ஒரு முழுநீளத் திரைப்படமாக ஒரு நம்பிக்கையூட்டுகிற முறையில் பொதுவுடைமைக் கட்சியினர் பற்றிய பதிவுகளைச் செய்திருப்பதன் வழி இளைய தலைமுறை எந்த திசை நோக்கி் நடைபோட வேண்டும் என்ற அவாவையும் திரைப்படம் ஏற்படுத்தியிருப்பதாகக் காண முடிகிறது.

அதே நேரத்தில் சிறு சிறு வரலாற்றுப் பிழை ஏற்படும் வகையில் அமைந்துள்ள தோற்றப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

தோழர் தமிழரசன் மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் மாணவர் சங்கத்திலிருந்து வசந்தத்தின் இடிமுழக்கமாய் எழுந்த நக்சல்பாரி மா லெ கட்சியின் முதல் மாநிலக் குழுவில் தலைவராக வந்துவிட்டார்.

பின்னர் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி அமைக்கப்பட்ட போதும் அவரே கட்சியின் அரசியல் சித்தாந்த தலைவராக இருந்தவர். கள நடவடிக்கையிலும் தன்னை இணைத்துக் கொண்டவர்.

புலவர் கலியபெருமாள் போன்ற தலைவர்கள் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியில் பங்கேற்று பல இன்னல்களையும் ஈகங்களையும் அவரும் அவருடைய ஒட்டுமொத்தக் குடும்பமும் அடைந்தவை மறுக்கமுடியாத வரலாற்று உண்மைகளாக இருந்தபோதும் புலவர் கலியபெருமாள் கீழ் செயல்பட்டவராக தோழர் தமிழரசனைச் சித்தரிக்கக் கூடிய தோற்றப் பிழையை திரைப்படக் குழு சரி செய்திருக்கலாம்.

அதனைத் தவிர்த்து இந்திய திரைப்படத் தணிக்கை எல்லைக்குள் இந்த வரலாறுகளைப் பதிவுசெய்த்தற்காக இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டத் தகுந்தவர்.

குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *