சாஹர் மாலா திட்டம்-SAGARMALA PROJECT

1 min read

மீனவர்களே, ஒன்றுகூடுங்கள்!

இந்தியாவின் 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் வாழும் மீனவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வது நல்லது. தமிழ்நாட்டின் பழவேற்காடு முதல், நீரோடி வரை 1,050 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் அமைந்திருக்கும் அறுநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து, நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பையும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொண்டிருக்கும் தமிழக மீனவ மக்கள் மாநில அளவில் தங்களை ஒருங்கிணைக்காத பட்சத்தில் கடற்கரையையும், கடலையும், மீன்பிடித் தொழிலையும் இழக்க நேரிடலாம்.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெற்றால், இந்தியாவின் கடற்கரை அதானிக்கு தாரை வார்க்கப்படும். அவர் தாதுமணற் கொள்ளையில் ஈடுபட்டு, கார்னெட், இல்மனைட், சிலிக்கானைட், மோனோசைட், தோரியம் உள்ளிட்ட கனிமவளங்களை அள்ளித்தோண்டி எடுத்து, ஆயிரமாயிரம் கோடிகள் சம்பாதிப்பார்.

அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், கப்பல் உடைக்கும் தளங்கள், உண்டுறை விடுதிகள், உல்லாச விடுதிகள் போன்றவை கடற்கரை முழுவதும் முளைத்துக் கொண்டிருக்கின்றன. சாகர்மாலா, பாரத்மாலா என்கிற பெயர்களில் சிறு, குறு துறைமுகங்களும், தொழிற்பேட்டைகளும், இவற்றை இணைக்கும் சாலைகளும், தொடர்வண்டித் தடங்களும் அமைக்கத் திட்டமிடுகிறார்கள். மேலும், கடலில் காற்றாலைகள் அமைக்கும் திட்டங்களும், ஹைட்ரோகார்பன் திட்டங்களும் தீட்டப்படுகின்றன.

அண்மையில் இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடலிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு ஹட்ரோகார்பன் அகழ்வு மற்றும் உரிமம் கொள்கையின்கீழ் (Hydrocarbon Exploration & Licensing Policy–HELP) விருப்ப மனுக்களைக் (Notice Inviting Offers–NIO) கோரியுள்ளது. இவற்றுள் மூன்று தொகுதிகள் (Blocks ) குமரி முனைக்குத் தெற்கே அமைந்திருக்கின்றன. அவற்றின் மொத்தப் பரப்பளவு 27,154 சதுர கி.மீ. ஆகும்.

இந்த பெரும் கடற்பரப்பின் நடுவே “வாட்ஜ் பேங்க்” (Wadge Bank) எனும் “படுகைக் கரை” ஒன்று அமைந்திருக்கிறது. உலகம் முழுவதும் வெகுசில படுகைக் கரைகளே உள்ள நிலையில், அவற்றுள் ஓன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. சற்றொப்ப 10,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்தப் படுகைக் கரை இந்தியாவின் மாபெரும் மீன்வளச் சுரங்கமாகத் திகழ்ந்து வருகிறது.

இங்கே பலமான நீரோட்டங்களோ, அலைகளோ, வெள்ளப்பெருக்கோ ஏற்படுவதில்லை என்பதால், மீன்களுக்குத் தேவையான உணவுகள் உற்பத்தி ஆகின்றன. ஏராளமான பவளப் பாறைகள் படிந்திருக்கும் இப்பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட மீன் வகைகளும், அறுபதுக்கும் மேலான கடல்வாழ் உயிரினங்களும் வாழ்கின்றன. மீன்களும், பிற கடல்வாழ் உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.

தென் மாவட்டங்களைச் சார்ந்த லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாகவும், கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பெட்டகமாகவும் இந்தப் பகுதி அமைந்திருக்கிறது. இங்கே எண்ணெய் எடுப்பது மேற்படிச் சூழலை முற்றிலுமாக அழித்தொழித்து, மீனவக் குடும்பங்களை எழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளிவிடும். அதேபோல, எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலைச் செயல்பாடுகளும், அதனால் ஏற்படும் மாசுபாடும், கடல் சூழலை முற்றிலுமாக அழித்துவிடும்.

தமிழக மீனவர்கள் உடனடியாக ஒன்றுகூடி, மேற்படித் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்து, கடலையும், கடற்கரையையும், தங்களின் நலன்களையும் காத்துக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் மாபெரும் அழிவைச் சந்திக்க நேரிடலாம்.

பச்சைத் தமிழகம் கட்சி
மார்ச் 4, 2024.

(தொடர்புக்கு: சுப. உதயகுமாரன்)

You May Also Like

+ There are no comments

Add yours