திருப்பரங்குன்றம் நடப்பது என்ன ?

பரங்குன்றம் முருகனை,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனாக்கிய வைதீக அரசியல்.

பார்ப்பனியம் இம்மண்ணில் நுழைந்த போது இங்கிருந்த வெகுமக்களின் வழிபாட்டு முறைகளையெல்லாம் தனக்கானதாக மாற்றும் முயற்சியில் இறங்கியது. அதுவே அவதாரம், அம்சம் எனும் கோட்பாட்டை உருவாக்கியது. பார்ப்பனியம் தனது புனிதத்தில் செய்த மாபெரும் கலப்படம் இதுதான்.

ஆதித்தமிழர்களின் வழிபாட்டு முறையானது இறந்தவர்களின் நினைவாக கல்நட்டு,அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளைப் படையலிட்டு வணங்குவதே. இறந்து போனவர்கள் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் குலத்தின் சின்னம் ஆகியவற்றையும் சேர்த்துப் புதைப்பதே மரபு.

நடுகல் வழிபாட்டின் கருத்தியல் யாதெனில் இறந்தவர்களின் நினைவும்,அவர்கள் மீதான நம்பிக்கையும் தங்களுக்கு பேராற்றலைத் தரும் என்ற நம்பிக்கையே. நடுகல் வழிபாடு குறித்து அகநானூறும்,புறநானூறும் பக்கம் பக்கமாகப் பேசுகிறது.

இல்லடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடு கல்லின் நாட் பலி யூட்டி-புறநானூறு:329

நடுகற் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ-புறநானூறு:232

நடுகள் பீலி சூட்டி துடுப்படுத்துத்
தோப்பி கள்ளொடு துரூ உப்பலி கொடுக்கும்-அகநானூறு:35

இறந்தவர்களின் நினைவிடத்தில் அவர்கள் விரும்பி உண்ட மதுவும், பலி கொடுக்கப்பட்ட ஆடும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட செய்தியையே மேலே உள்ள சங்க இலக்கியங்கள் கூறுகிறது. இது சமுதாயத்தின் முதல் கட்டம்.

சமுதாய வளர்ச்சி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. அதன் வளர்ச்சியால் புதிய மாற்றங்கள் உருவானது. இக்காலத்தில் தான் அரசு என்ற நிறுவனத்தை ஆதிக்க உடமை வர்க்கம் உருவாக்குகிறது. இந்த உடமை வர்க்கம் உருவாக்கிய முக்கியப் படைப்பு தான் சான்றோர்கள், உயர்ந்தோர்கள் எனப்பட்டது.

உழைப்போடு நேரடியாக எவ்விதத்திலும் தொடர்பற்ற இந்தக் கூட்டம் தான் ஆதிக்கத்தைக் கையில் வைத்திருந்தது. பொது என்ற இனக்குழு வாழ்க்கை முறையை மாற்றி,இவர்கள் உருவாக்கியதே உயர்ந்தோர், தாழ்ந்தோர், மேலோர், கீழோர் என்ற கருத்தும், அதையொட்டிய சமூக வாழ்வும் மற்றும் கடவுள்களும்.

இந்த ஆதிக்கக்கூட்டம் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் சதாசர்வ காலமும் யுத்தங்களை நடத்திக் கொண்டே இருந்தார்கள். யுத்தங்களில் உயிரிழப்புகள் உருவாகின. இப்போது உயர்ந்த சான்றோர்களுக்கு மேல் உலகமும்,வீர சொர்க்கமும் உருவாக்கப்பட்டன. பலியான கீழோர்களுக்கு காட்டுப் பாதைகளில் அதே நடுகல் வழிபாடு தான்.

உடமை வர்க்கம் தங்களுக்காக பலியானவர்களுக்கு மேலே ஒரு உலகத்தைக் கதை கட்டி எழுப்பியது. அவர்களுக்காக வேள்வி யாகங்கள் நடத்தியது. அக்னி வழியாக அவர்களுக்கு மேலே படையலை அனுப்பியது. அந்த மேல் உலகத்திற்குள் ஒரு இடத்தை ரிசர்வ் செய்வதற்குத்தான் இப்போதும் ஒரு கூட்டம் எல்லாப்புறமும் அலைகிறது.

மேல் உலகத்திற்கு புறக்கணிக்கப்பட்ட கீழ்மக்கள் தங்களுக்காகப் பலியானவர்களுக்கு ஆடு கோழி வெட்டி பலியிட்டு,அதை உண்டு, அவர்களை மனதில் நிறுத்தி தங்கள் வாழ்க்கையை புதிய நம்பிக்கையுடன் தொடர்கின்றனர்.
இத்தெய்வங்கள் தான் சுடலை, விருமன், கருப்பு, மாடன்,காடன்,மாயன்,
அய்யனார், முனி,பேச்சி,வீராயி,காத்தாயி,
ஒச்சு போன்றவைகள்.

இந்தத் தெய்வங்கள் உடமை வர்க்கத்தால் மேல் உலகத்திற்கும் வீர சொர்க்கத்திற்கும் அனுமதிக்கப்படாதவர்கள். பார்ப்பனியக் கருத்தியலின் படி ஒடுக்குமுறையின் வடிவங்கள். பார்ப்பனிய சமய மரபின் முக்கிய பகுதி யாதெனில் இந்த கீழோர் தெய்வங்களின் மீதும்,வழிபாட்டு முறைகள் மீதும் நடத்திய தாக்குதலே.

நடுகல் வழிபாடு சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்த தமிழ்ச்சமூகம் நாகரீகத்தின் வாசத்தை நுகரத் தொடங்கிய காலம் அது. வடக்கே இருந்து சமண,பௌத்த,வைதீகக் கருத்துகள் இங்கே வந்து கலந்தன. பௌத்த சமணக் கருத்தியலின் வேர் எதில் நிலைபெற்றிருந்தது என்றால்,சமூகத்தில் ஏற்பட்ட பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி தான். ஏனெனில் பார்ப்பனியம் தனது பத்தாம்பசலித்தனமான கோட்பாட்டில் அப்போது நின்று கொண்டிருந்தது.

ஆசீவக,பௌத்த சமண மதங்களே தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தது. தமிழில் தோன்றிய மாபெரும் இலக்கியங்கள் எல்லாம் இம்மதங்களின் சிந்தனைகளையே முன் வைத்துப் பேசின.கிபி 6 ம் நூற்றாண்டு வரை இந்த நிலைதான் தமிழ் சமூகத்தில் நீடித்தது. இந்தியா முழுமையும் இதே நிலைதான் இருந்தது.பார்ப்பனிய ஆதிக்கம் அடியோடு பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆரியக் கட்டுமானம் அடியோடு வீழும் நிலையும் ஏற்பட்டது.

தங்களுக்குச் சாதகமான குப்தப் பேரரசின் மூலம் (கிபி 250-550) பௌத்த சமண மதங்களை வீழ்த்தும் கடமையைப் பார்ப்பனியம் பக்குவமாகச் செய்து முடித்தது.எனவே தான் குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம் என புலகாங்கித்தோடு வரலாறு பாடத்தில் படிக்கிறோம்.

ஆசீவகம், பௌத்த மற்றும் சமணத்தின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி தங்களை புத்துயிர் பெற பார்ப்பனியம் முயன்றது. தனது புனிதப் புடலங்காயில் கள்ளத்தனமான கலப்படத்தைச் செய்ய தயாரானது. அதுதான் ஆரியரல்லாத இனக்குழு மக்களிடையே செல்வாக்குடன் இருந்த லட்சக்கணக்கான தெய்வங்களை தன்னுடைய கடவுளின் அவதாரங்கள் அம்சங்கள் என்று பேசியது. இந்த மாயவலையில் எல்லாத் தெய்வங்களும் நங்கூரம் பாய்ச்சி இழுக்கப்பட்டன.

அதுவரை வேதத்தை மறுத்த சுமேரியக் கடவுளான நாராயணனும்,வேதக் கடவுளான விஷ்ணுவும் ஒன்றென ஆக்கினார்கள். வேதத்திற்கு புறம்பான சிவசங்கரனும்,வேதகால ருத்திரனும் ஒன்றாக ஆக்கினார்கள். ஆரியரல்லாத மக்களிடையே செல்வாக்குடன் இருந்த வாசுதேவகிருஷ்ணனை, பார்ப்பனியக் கடவுளான நாராயண விஷ்ணுவின் அவதாரமாக ஆக்கினார்கள்.

இந்திரனுக்கு எதிராக மேருமலையைத் தூக்கிய இடையர்களின் கடவுள் கிருஷ்ணனையும், விவசாய மக்களின் கடவுளான பலராமனையும் விஷ்ணுவின் அவதாரமாக்கினார்கள். மேய்ச்சல் சமூகம் மற்றும் வேளாண் சமூகத்தின் மீது தனது பண்பாட்டு ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பார்ப்பனியம் அரங்கேற்றிய அரசியல் இது.

ஆரியருக்குப் பகைவனான பன்றி இந்திரனால் கொல்லப்பட்டது என்று ரிக்வேதம் கூறுகிறது. இதன் பொருள் யாதெனில் பன்றியை குலக்குறியாகக் கொண்டு வாழ்ந்த விந்திய மலையைச் சுற்றி வாழ்ந்த பூர்வகுடிகளுடனான பார்ப்பனிய யுத்தம் தான். அவர்களை வீழ்த்தியும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் உளவியல் ஏற்பாடு தான் வராக அவதாரம்.

பழங்குடி மக்களின் விலங்கு வழிபாட்டில் முக்கியமானது சிங்க வழிபாடு. இந்த மக்களை தன்னுடன் இணைத்த ஏற்பாடு தான் நரசிங்க அவதாரம். நெய்தல் குடிகளின் மீனை தன்னுடன் இணைத்து மச்ச அவதாரம்.கடல்கோளால் அழிந்த துயரத்துடன் தரையில் துள்ளிய மீனைத் தாங்கிப்பிடித்து உருவான பாண்டியப் பேரரசின் கொடியும் மீன் கொடி தான். அந்த மீன் ஆட்சி செய்த இடத்தை தன் கணக்கில் வரவு வைத்தக் கதையே மீனாட்சி என்ற தெய்வம்.இது போன்ற அவதாரக் கோட்பாடுகளின் அரசியல் மூலம் பெரும் முடிச்சுப் போடப்பட்டது.

ஆதி மக்களின் செல்வாக்குப் பெற்ற பெண் தெய்வங்களையெல்லாம் ஒருங்கிணைத்து லட்சுமி என்ற வடிவத்துடன் பொறுத்தி, லட்சுமியை விஷ்ணுவின் பக்கத்தில் அமர வைத்து அவரின் மனைவியாக்கும் முயற்சியையும் பார்ப்பனியம் பக்காவாக செய்து முடித்தது.

தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தெய்வங்கள் கொற்றவையும் அவர் மகன் முருகனும் தான். கிபி 7 ம் நூற்றாண்டில் இவர்கள் இருவரும் ஆரியத்தை நோக்கி இழுக்கப்பட்டனர். ஆரியக் கடவுளான ஸ்கந்தனுடன் முருகன் இணைக்கப்பட்டான். முருகனின் மனைவியாக அதுவரை இருந்த வள்ளி இரண்டாமவளாக ஆக்கப்பட்டு ஸ்கந்தனின் மனைவி தேவசேனை முதல் மனைவியாக ஆக்கப்பட்டாள்.முருக வரலாறு ஸ்கந்த புராணமாக இக்காலத்தில் மாற்றப்பட்டது.

சங்க இலக்கியங்களில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தோடு பிசைந்து திணை மாவை படையலிடுவார்கள். அப்போது வேலன் என்ற தனது பூசாரியின் மீது ஆவி உருவில் வந்து குறி சொல்வான் முருகன். பார்ப்பனியம் முருகனைக் கையிலெடுத்த போதுதான் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட புனிதமான ஸ்கந்தனாக மாறி தேவசேனாதிபதியாக ஆக்கப்படுகிறான். சேயோன், செவ்வேள்,வேலன் என்ற அடையாளங்கள் அகற்றப்பட்டு ஸ்கந்தன்,சண்முகன்,சுப்பிரமணியன் என்ற அடையாளங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.

கொற்றவை,மாரி,பேச்சி போன்ற பெண் தெய்வங்கள் பார்வதியின் பிம்பங்களாக மாற்றப்படுகிறது. சுடலை மாடன் காடன் ஆகியவை சிவனின் பிம்பங்களாகவும் மாற்றப்படுகிறது.உழைக்கும் மக்களின் லட்சக்கணக்கான கிராம தெய்வங்கள் அனைத்தும் அவதாரம், அம்சம், புராணக்கதைகள் மூலம் பார்ப்பனிய ஆளுமையின் கீழ் கொண்டு வந்ததே கிபி 7 ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கமும்.அது உருவாக்கிய பெரிய புராணமும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேல் வழிபாடும், அதன் பிறகு முருக வழிபாடும் நடந்த இடம் பரங்குன்றம்.இலக்கியங்களில் வேற் கோட்டம் என அழைக்கப்பட்ட இடமே பரங்குன்றம். கிபி 7 ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கத்தின் பிதாமகன்கள் திருநாவுக்கரசர்,திருஞான சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவரும் இதை சிவத்தளமாக மாற்றி தேவாரம் பாடினர்.சிவனுக்கும் முருகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அவர்கள் பாடலின் மையக்கரு. அன்றிலிருந்து பாண்டி நாட்டின் பதினான்கு பாடல் பெற்ற தளமாக பரங்குன்றம் திருப்பரங்குன்றமாக மாற்றப்பட்டது.

தேவாரத்தின் படியான பூஜை முறையால் இங்கு கடைபிடிக்கும் பூஜை மரபு சிவமரபு தான்.இங்கு ஏற்றப்பட்டுள்ள கொடி முருகனுக்குரிய சேவற் கொடி அல்ல. சிவனுக்கான ரிஷபக் கொடி தான். பள்ளியறையும் சிவனுக்குத்தான்.முருகனுக்கல்ல. ஆனால் பக்தர்கள் முருகன் கோவில் என்றே இங்கு வருகிறார்கள். நேர்த்திக்கடன் கழிக்கிறார்கள். ஆனால் சிவாச்சாரியார்கள் இது ஈஸ்வரத்தலம் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் உள்ளுக்குள் தங்களுக்கான காரியத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முருகனுக்கு ஆறுபடை என்பதும் பார்ப்பனியக் கட்டமைப்பே.
முருகன் தமிழ் நிலமெங்கும் இருந்தவர்.
முருகனுக்கானது ஆற்றுப்படை தான். திருமுருகாற்றுப்படை தான்.
அதை ஆறு மட்டும் என்றது வைதீக அரசியல்.

வைதீகக்கூட்டத்தின் மாற்று மரபுக்கும், உழைக்கும் மக்களின் முருக வழிபாட்டிற்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தப் போர்க்களம் தான் திருப்பரங்குன்றம். இங்கு முருகன் வதம் செய்ய வேண்டியது சூரனை அல்ல. சங்கிகளையே.

சூர்யா சேவியர் – முகநூல் பதிவு

Written by arakalagam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *