இரண்டு காட்சிகள். குந்தவை கண்கள் கட்டப்பட்ட வநதியத்தேவனைச் சந்திக்கும் காட்சி அழகியல். நிலநீர் வெளி, காமெரா கோணம், வசனம், தொடுதல் என அது ஒரு அழகான அனுபவம். வரலாற்றுக்கு இங்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
ஆதித்த கரிகாலன் நந்தினி சந்திப்பு கருத்தியல் வியாக்யானம். எப்படி? வரலாறு இங்கு காதலின் உன்னதம் குறித்ததாக மடை மாற்றம் செய்யப்படுகிறது. இக்காட்சியில் இரு பரிமாணங்கள் இருக்கின்றன. ஒன்று பாத்திரக் கட்டமைப்பு- வரலாற்றில் பார்ப்பனர்களால் கொல்லப்பட்ட பார்ப்பனர் அல்லாத அரசன் இங்கு பூணூல் அணிந்த விரக்தியுற்ற காதலானாகத் தற்கொலை செய்துகொள்கிறான்.
இரண்டாவதாக, இதற்கு ஒரு கலை நியாயத்தை திரைக்கதை ஆசிரியரும் (மூவரில் ஒருவர்) வசனகர்த்தாவுமான ஜெயமோகன் வழங்குகிறார்.
ஆதித்தகரிகாலனை நந்தினி கொல்லாமல் விடுவதற்கான காரணம் அவன் மீதான காதல் என அவன் கருதுகிறான். நந்தினி அவனைக் காதலித்ததற்கான காரணமாக ராஜ-அரண்மனை வாழ்வின் மீதான வேட்கையைச் சொல்கிறாள். நிராகரிக்கப்பட்ட ஒரு அனாதையின் வெஞ்சினமாக-பழிவாங்கலாக அவளது நடத்தை அமைகிறது. தான் உண்மையில் நந்தினியால் காதலிக்கப்படவில்லை என்பதை அறியும் ஆதித்த கரிகாலன் விரக்தியில் ஒரு காவிய மரணத்தின் பொருட்டு, காதலியின் கையால் தற்கொலைசெய்து கொள்கிறான்.
உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்களா? வரலாறு மறந்து போகிறதா? அதுதான் இந்தக் கலை வியாக்யானத்தின் நோக்கம்.
அடுத்து, ஓடக்காரியான வறிய பெண்னின் ஆசை என்ன தெரியுமா? அரண்மணை அலங்கார-ஆடம்பர வாழ்வு வாழ்வது. கல்கி இப்படியா பூங்குழலியைப் படைத்தார்? உண்மையில் ஜெயமோகனின் கலை வியாக்யானங்கள் ஏழ்மையான பெண்களின் மீதான வன்முறை. இப்படி அழகியலும் கருத்தியலும் சமவிகிதத்தில் கலந்ததுதான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்.
Leave a Reply