வெளி உலகம் பற்றி அறியத் தொடங்கிக் கொண்டிருந்த வயதில் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்த வயதில் ஆய்த எழுத்து திரைப்படம் ஏற்படுத்திய உளக் கிளர்ச்சியை இப்போதும் நம்ப முடியவில்லை.
” வடக்கு வாழ்கிறது ! தெற்குத் தேய்கிறது!” என்ற அண்ணாவின் புகழ்பெற்ற இந்திய ஆளும் வகுப்பு குறித்த அரசியல் மதிப்பீட்டை ஒரு ஊழல்வாதியாகச் சித்தரிக்கப்படும் வேட்டிகட்டிய பாரதிராஜா வசனமாகப் பேசியிருப்பார்.
வேட்டி கட்டிய பாரதிராஜா எனும் திராவிட இயக்க அரசியல் குறியீட்டை நவநாகரீக உடையணிந்த , ஐஐடியில் படித்த பொருளியல் வல்லுநரான ,அழகிய துணிச்சல் கொண்ட இளைஞன் தனது நண்பர்கள் துணையுடன் அகற்ற முயற்சிப்பதும் ஊழல் மலிந்த அரசியல் நிறுவனத்தை மாற்றப் போராடுவதுமாக ஆய்த எழுத்து திரைப்படத்தின் கதைக்கரு அமைந்திருக்கும்.
மார்க்சின் மூலதனம் பற்றிய ஆதிதிரட்டல் கோட்பாட்டை இந்திய சமூகத்தில் பொருத்திப் பார்க்கும் போது வரலாற்று வகையில் உடைமை , முதல் ஆகியவற்றைக் கொண்ட ஒன்றிய அரசு எனும் நிறுவனத்தின் வழியாக அதிகாரத்தில் அமர்ந்து கொண்ட பார்ப்பனிய – பனியா சமூக வகுப்புகள் ஒரு புதிய அரசியல் மாற்றமாக அண்ணா தலைமையிலான திமுக தோற்றம் பெற்றதில் இருந்து இன்று வரை அதன் மீது வெறுப்பை உமிழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
அன்னா அசாரேவினை ஆட்சியில் அமர்த்துவதற்குக் குருமூர்த்தி , அசீத்தோவல் தலைமையிலான VIF பின்னணியில் இருந்து பரப்புரை மேற்கொண்டதும் அதே கூட்டத்திலுள்ள குருமூர்த்தி தேர்தல் பத்திர ஊழல் பற்றிக் கேள்விகேட்டதற்கு முன்பு ஊழலாக அறியப்பட்டவை இன்றைக்குச் சட்டப்படியானதாக மாற்றப்பட்டுள்ளன என பதிலளித்து மழுப்பியதும் தற்செயலானதல்ல.
கூட்டுக்களவாணி முதலாளித்துவ காலகட்டத்தில் ஊழல் அரசின் கொள்கை உருவாக்கமாகவும் அதிகாரத்தைக் குவித்துக் கொண்டு சட்டங்களாகவும் அறிவிக்கப்பட்ட பின்னர் அது ஊழல் நீக்கம் என மாற்றப்பட்டதும் மோடி ஆட்சியில்ன் கும்பலாட்சி சர்வாதிகாரத்தின்
விளைவு. நாட்டின் அரசியல் சட்டம், சனநாயகம் , கருத்துரிமை , மதச்சார்பின்மை , கூட்டாட்சி விழுமியங்களை நசுக்கி எதிர்க்கட்சியினரை பிளவுபடுத்நி , சிறைப்படுத்தி அச்சுறுத்தி நாட்டின் சனநாயகத்தை அழித்து வரும் ஆர்எஸ்.எஸ் கார்பரேட் கூட்டை எதிர்த்து ஒரு சனநாயக அணியை உருவாக்குவது என்பது ஆய்த எழுத்தின் திரைப்பட நாயகன் சூர்யாவைப் போல எதிர்ப்புகளற்ற முறையில் எதிரிகளை வீழ்த்தும் திரைப்பட பாணி அரசியல் போன்றது அல்ல எதார்த்த அரசியல் நிலைமை.
மக்கள் போராளிகளையும் குடியுரிமைச் செயற்பாட்டாளர்களையும் எதிர்க்கட்சி முதல்வர்களையும் ஊபா , பிஎம்எல்ஏ போன்ற சட்டங்களில் ஆண்டுக் கணக்கில் சிறையில் தள்ளுவது போன்ற நடப்புகளைக் கொண்ட கரடுமுரடான வழியைக் கொண்டது தான் இன்றைய இந்திய அரசியல் நிலைமை.
திரைப்படக் கதை , இயக்க , வசனத்திற்கேற்ப நடிப்பது போன்றது எளிதானது அல்ல. அது ஆழ்ந்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய சிக்கலான போராட்டம். இது நடிகர் விஜய் உள்ளிட்ட எவருக்கும் பொருந்தும்.
குறிப்பு – ஆயுத எழுத்தில் திராவிட இயக்க குறியீட்டுப் பாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்திருக்கக் கூடாது என தலைவர் பிரபாகரனை நேரில் சந்திக்கும் போது அவர் கூறியதாக பாரதிராஜா கொடுத்த நேர்காணல் தூரநோக்குக் கொண்ட பிரபாகரனின் கலை இலக்கிய அரசியல் பார்வையை நினைவுபடுத்துகிறது.

குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply