நீதிபதிகள் நியமனம்..பிராமண சூழ்ச்சியும் பலியாகும் சமூக நீதியும் !!

அறக்கலக ஊடகத்திற்காக சிறப்பு நேர்காணல் : உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சே .வாஞ்சிநாதன் சந்திப்பு பத்திரிக்கையாளர் தவம் !!

தவம்: சார் வணக்கம். குறிப்பா உச்சநீதிமன்றத்துடைய மிக முக்கியமாக பி.ஆர். கவாய் ஓய்வு பெற்ற பிறகு, தலைமை நீதிபதியாக சூர்யாகாந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று கூட அது பெரிய விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது பெரிய அளவுக்கு இந்தியா முழுக்க பேசும் பொருளாகவும் மாறி இருக்கிறது இதுவரை அவர் என்ன வகையான தீர்ப்புகள் கொடுத்திருக்கிறார்..?குறிப்பா சமீப காலங்கள்ல எந்த ஒரு பிரச்சனைக்குமே, நாட்டுல நடக்கக்கூடிய பிரச்சனைக்கு கூட நீதிமன்றங்கள்தான் அத தீர்மானிக்க இருக்கிற இடத்தில் இருக்கு!. உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றம்தான் மக்களின் கடைசி நம்பிக்கை! பிரச்சனைகள் கூர்மையா இருக்கிற இந்த காலகட்டத்துல தலைமை நீதிபதி, நியமனம் என்பதும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் என்பதிலும் அரசியல் தலையீடு இருப்பதாக விமர்சனம் இருக்கிறது ! அதாவது உச்ச நீதிமன்றமோ உயர்நீதிமன்றமோ நடக்கற மாற்றங்களில் என்ன பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது? இத நீங்க எப்படி பாக்குறீங்க?

வாஞ்சிநாதன்: நீதித்துறைக்குள் ஏராளமான பிரச்சனைகள், சிக்கல்கள் இருப்பது உண்மைதான். அதுல நான் அடிப்படையாக பார்க்கும் சிக்கல் எதுன்னா ‘அப்பாயின்ட்மெண்ட் ஆஃப் ஜட்ஜஸ்‘ (Appointment of Judges). நீதிபதிகள் நியமனம். உயர்நீதிமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கிற முறை… அதுதான் அடிப்படையில பிரச்சனை. அந்த முறையை சரியாக ஒழுங்குப்படுத்தினா பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படும் அப்படின்னுதான் பார்க்கிறேன்

ஏன்னா, ஒரு ஜனநாயக நாடு, அரசியல் சட்ட நாட்டில எல்லோருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அரசு நிர்வாகம், நீதித்துறை நிர்வாகத்தில இருக்கணும் அப்படின்றது ஒரு அடிப்படையான அரசியல் சட்ட கோட்பாடு. இப்ப உயர் நீதிமன்றத்திலயோ, உச்ச நீதிமன்றத்திலயோ எல்லா தரப்புக்கும் அப்படி பிரதிநிதித்துவம் இருக்கானா? இல்ல.

சப்ஆர்டினேட் ஜுடிசியரில* (கீழமை நீதிமன்றங்களில்) தமிழ்நாட்டைப் பொறுத்த அளவுக்கு இருக்குது. ஏன்னா ரிசர்வேஷன் இருக்கு. பெண்களுக்கும் ரிசர்வேஷன் இருக்கு. அதனால நிறைய பேர் பெண்கள்… தமிழ்நாடு சப்ஆர்டினேட் ஜுடிசியரிலாம் கிட்டத்தட்ட 60% பெண்கள் இருக்காங்க. அதுக்கு காரணமே இட ஒதுக்கீடுதான்.

ஆனா, உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. இட ஒதுக்கீடு கிடையாதுன்றது ஒரு பிரச்சனை. இரண்டாவது, தேர்வு செய்கிற முறை. மெட்ராஸ் ஹைகோர்ட்டில் உள்ள நீதிபதிகளை தேர்வு செய்து பரிந்துரை செய்வது உச்ச நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள ‘கொலிஜியம்‘ (Collegium). கொலிஜியம்னா தலைமை நீதிபதி, அதற்கப்புறம் இருக்கக்கூடிய ரெண்டு Senior Judge

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யக்கூடிய, உயர் நீதிமன்ற நீதிபதிகளை அங்கீகரித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பக்கூடிய ஒரு பணியை செய்வது Supreme Court Collegium. சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்தில தலைமை நீதிபதியும், அதற்கு அப்புறம் இருக்கக்கூடிய நான்கு மூத்த நீதிபதிகளும் இருப்பாங்க. மொத்தம் 5 பேர் இருப்பாங்க.

இப்ப இந்த கொலிஜியத்தோட பங்க்ஷன் (Function) முறையாக நடக்குதான்னா 100% இல்ல. அதுல வெளிப்படை தன்மை கிடையாது. Procedure கிடையாது. ஊருக்கு உலகத்துக்கு எல்லாம் வெளிப்படையா இருக்கணும், நீங்க நம்பகத் தன்மையா இருக்கணும், ஒரு ப்ரொசீஜர் படி நடக்கணும்… அப்படி இல்லாம நடந்தா அதை நாங்க ரத்து செய்வோம் என்று சொல்லக்கூடிய நீதித்துறை, சொந்த நீதிபதிகள் நியமனத்தில அது எதையுமே ஃபாலோ பண்றது இல்ல அப்படின்றதுதான் வருத்ததுக்குரிய செய்தி. இதை நான் சொல்லல, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவங்க கொலிஜியத்தில் இருந்தவங்க சொல்லி இருக்கறாங்க. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், அவங்க எல்லாம் ரோகின்டன் நாரிமன்ல இருந்து செல்லமேஸ்வர் வரை பல்வேறு நீதிபதிகள் இந்த கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்போது கூட ஜஸ்டிஸ் B.V.Nagarathna அவர்கள் ‘டிசன்ட்’ (Dissent) எழுதி இருக்காங்க ரெண்டு நீதிபதிகள் நியமனத்துல. அதை கூட Websiteல கூட Publish பண்ண மாட்டறாங்க அப்படின்றதுதான் அவங்களோட நிலைமை.

தவம்: அடுத்த தலைமை நீதிபதி அவங்தானே அவருக்கே இதான் நிலமையா என்ன தான் நடக்குது நீதிமன்ற உள்கட்டமைப்பில் ?

வாஞ்சிநாதன்: ஆமா. இப்ப இப்படி இருக்கற சூழ்நிலையில இப்ப மெட்ராஸ் High Court எடுத்துக்குவோம். சென்னை உயர்நீதிமன்றத்தில இன்னைக்கு இப்போதைய தலைமை நீதிபதி வந்ததிலிருந்து உள்ள பிரச்சனையை பார்ப்போம். இப்போதைய தலைமை நீதிபதி ராஜஸ்தான் ஹைகோர்ட்ல இருந்து 21.07.2025-ல மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்கு வராரு. அவர் பேர் திரு மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா. அவர் வரும்போது ஜஸ்டிஸ் ஆர். சுப்பிரமணியம் இரண்டாவது ஜட்ஜா இருக்காரு. ஜஸ்டிஸ் எம். சுந்தர் மூணாவது ஜட்ஜா இருக்காரு. இவங்கதான் கொலிஜியம்.

இதுல 24.07.2025-ல ஜஸ்டிஸ் ஆர். சுப்பிரமணியம் Retire ஆயிடுறார். அதற்கு பிறகு ஜஸ்டிஸ் எம். சுந்தர்… தலைமை நீதிபதி, அதற்கப்புறம் ஜஸ்டிஸ் சுரேஷ்குமார். இவங்க மூணு பேர்தான் கொலிஜியம். இவங்கதான் நீதிபதிகளுக்கு வந்து பரிந்துரை பண்ணனும். செலக்ட் பண்ணி மதுரை ஹைகோர்ட்லயும் மெட்ராஸ் ஹைகோர்ட்ல உள்ளவங்கள பரிந்துரை பண்ணி அனுப்பணும். இப்போதைக்கு ஒரு கிட்டத்தட்ட 20-க்கு மேற்பட்ட Vaccant இருக்கு

அடுத்து என்ன பண்றாங்கன்னா, 13.09.2025-ல ஜஸ்டிஸ் எம். சுந்தர மணிப்பூருக்கு தலைமை நீதிபதியா மாற்றி Transfer பண்றாங்க. அவர் போயிறாரு. அவர் எப்ப வரை இருக்கிறாரு அப்படின்னா அவர் Retirement Date 18.07.2028 வரை இருக்காரு. அவர் இங்க Continue ஆனா அவர் தொடர்ந்து கொலிஜியத்தில இருப்பாரு. ஜஸ்டிஸ் எம். சுந்தர் அவர் மிக மிக நேர்மையான ஒரு நீதிபதி. எந்த அழுத்தங்களுக்கும் பணிய மாட்டார். ஆர்.எஸ்.எஸ் ஐடியாலஜியோ வேற எந்த ஐடியாலஜிக்கோ அவர் பணியக்கூடிய நபர் கிடையாது. அவரை தலைமை நீதிபதியாக்கி அனுப்பிச்சிட்டாங்க. இது ஒரு விஷயம்.

அடுத்து கொலிஜியம் யாரு? தலைமை நீதிபதி, ஜஸ்டிஸ் சுரேஷ்குமார், ஜஸ்டிஸ் நிஷா பானு. நிஷா பானு அவர்கள் மதுரை Barல pratice பண்ணிட்டு போன Minority கிறிஸ்டின் சமூகத்தை சேர்ந்த ஒரு நீதிபதி. இப்ப Nisha banu அவர்கள் அவங்க எப்ப Retire ஆகுறாங்கன்னா 17.09.2028. அவங்களும் மூணு வருஷம் கொலிஜியத்தில இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு.
நிஷா பானு அவர்கள்… ஏப்ரல் 25, 26-ல உச்சநீதிமன்ற கொலிஜியம் மீட்டிங்ல முடிவு பண்ணி அவங்களை கேரளாவுக்கு Transfer பண்றாங்க. கேரளாவுல அவங்க எத்தனாவது இடத்துக்கு போறாங்க? ஏழாவது இடத்துக்கு போறாங்க. இங்க மூணாவது இடத்தில இருந்த ஜட்ஜ் கேரளாவுல ஏழாவது இடமோ ஒன்பதாவது இடத்துக்கோ அவங்க போறாங்க.

ஆகஸ்ட்ல 26-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை பண்ணுது. அக்டோபர் 14-ஆம் தேதி சென்ட்ரல் கவர்மென்ட் நோட்டிபிகேஷன் போட்டு அவங்கள அங்க ஜாயின் பண்ண சொல்றாங்க. அவங்க லீவ் போட்டு இதுவரை ஜாயின் பண்ணல. நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவங்களுக்கு கேசஸ் அலாட் பண்ணாம அவங்க வீட்டிலே, ஜட்ஜோட பங்களாவிலயே இருக்கறாங்க.

இப்படி ஒரு நிலை, நெருக்கடியான நிலை இங்க இருக்கு. இப்ப ஜஸ்டிஸ் நிஷா பானு 2028 வரை இருப்பாங்க. அவங்களையும் மாத்திட்டாங்க. என்ன காரணத்துக்கு மாத்துறாங்க அப்படின்றதுதான் இப்ப நம்ம கேள்வி. ஓகே, ஒரு நீதிபதியை இங்க இருந்து வேற Stateக்கு மாத்துறீங்கன்னா காரணம் வேணும்ல? அவங்க seniority மூணாவது இடத்துல இங்க இருக்கறாங்க. இன்னொரு இடத்துல ஏழாவது இடத்துல, ஒன்பதாவது இடத்துல போட்டீங்கன்னா சீனியாரிட்டி போகுது. நாளைக்கு அவங்க உச்சநீதிமன்றம் போறதுக்கு, எதிர்காலத்தில அவங்க எலிவேஷனுக்கு பிரச்சனையா இருக்கும்.

இப்ப நீதிபதி நிஷா பானு அவர்களை ஏன் Transfer பண்ணீங்க? உச்சநீதிமன்ற கொலிஜியம் அதுக்கான காரணம் என்ன? ஒன்றிய அரசு உடனே நோட்டிபை பண்ணீங்கள அதுக்கான காரணம் என்ன? காரணம் சொல்லித்தான் மாத்தணும். ஏதாவது Rule இருக்கா? இல்ல. காரணம்ன்றது வெளிப்படைத்தன்மை வேணும்னு நீதிமன்றங்கள் சொல்லுதுல்ல? வெளிப்படைத்தன்மை வேணும்னா காரணம் சொல்லணும்ல?

இப்ப எங்களுக்கு என்ன சந்தேகமா இருக்குன்னா, ஒரு மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்த, மைனாரிட்டியின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஒரு நீதிபதி நாளைக்கு இவங்க சொல்ற Recommandationக்கு இடைஞ்சலா இருப்பாங்களோ அப்படின்றதுனால மாத்திட்டாங்களான்னு சந்தேகம் வருமா வராதா? மக்களுக்கும் அட்வகேட்ஸ்க்கும்? அவங்களே Leave போட்டுதான போகாம இருக்காங்க. இப்ப அவங்க இத Reconsider பண்ணுங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க. அப்படிதான் அவங்க இதுவரை போகவே இல்ல, Joint பண்ணல.!!

இது முடிஞ்சிருச்சா? அடுத்த விஷயம்… அடுத்து கொலிஜியத்தில வர்றவரு ஜஸ்டிஸ் எம்.எஸ். ரமேஷ். அவர் 27.12.2025 வரை அவர் இருப்பார். 27.12-ன்னா என்ன? அடுத்த மாசம் கோர்ட் வந்து அடுத்த மாசம் 20-ஆம் தேதி கோர்ட் முடியுது. 19-ஆம் தேதி கோர்ட் முடிஞ்சிரும். அப்ப இன்னும் ஒரு 15 நாள்ல அவரும் ரிட்டயர்ட் ஆயிடுவார். ஜஸ்டிஸ் எம்.எஸ். ரமேஷ் இன்னும் 15 நாள்ல ரிட்டயர்ட் ஆக போறார். அதுக்கு அப்புறம் அவரும் கொலிஜியத்தில இருக்க மாட்டார்.

எஸ்.எம். சுப்பிரமணியம் என்ற ஒரு நீதிபதி அவர் அடுத்து கொலிஜியத்துக்கு வராரு. அவர் 30.05.2027 வரை இருப்பார். சரி, அதற்கப்புறம் எம்.எஸ். ரமேஷ் அவர்கள் போன பிறகு கொலிஜியம்ன்றது யாரு மூணு பேர் இருப்பாங்கன்னா… தலைமை நீதிபதி, திரு எஸ்.எம். சுப்பிரமணியம், அதற்கப்புறம் நீதிபதி திருமதி அனிதா சுமந்த். அவங்க கொலிஜியத்துக்குள்ள வந்துறாங்க. அவங்க எப்ப வரை இருக்கறாங்கன்னா 14.04.2032 வரை இருப்பாங்க. ஆக .

இப்ப நம்மளோட கேள்வி என்ன அப்படின்னா, நீங்க ஜஸ்டிஸ் எம். சுந்தர Transfer பண்ணீங்க. அது கூட அவரை தலைமை நீதிபதியா மாத்தி இருக்கோம் அப்படின்னு சொல்லலாம். அதை விட்டுருங்க. அடுத்து இப்ப இருக்க தலைமை நீதிபதி திரு சுரேஷ்குமார் அவர்கள், அடுத்து நிஷா பானு… இவங்க மூணு பேரை வச்சு கொலிஜியம் முடிவு பண்றதுல என்ன தடை இருக்கு?

நிஷா பானு அவர்கள் மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர். சுரேஷ்குமார் அவர்கள் வந்து ஓபிசி தேவர் சமூகத்தை சேர்ந்தவர். இப்ப ஒரு ஓபிசி இருக்கறவங்க, ஒரு மைனாரிட்டி இருக்கறாங்க. அவங்களை வச்சு முடிவு பண்றதுல என்ன பிரச்சனை? ஏன் நிஷா பானு அவர்களை மாத்துனீங்க? இதுக்கு பதில் சொல்லணும் ஒன்னு.

ரெண்டாவது, நிஷா பானு அவர்களை மாத்திய பிறகு கூட ஜஸ்டிஸ் எம்.எஸ். ரமேஷ் வந்துறார். இப்ப இன்னைக்கு தேதி கொலிஜியம் யாருன்னா தலைமை நீதிபதி, ஜஸ்டிஸ் சுரேஷ்குமார், ஜஸ்டிஸ் எம்.எஸ். ரமேஷ். மூணு பேரும் இன்னைக்கு தேதியில கொலிஜியத்தில இருக்கறாங்க. இவர்களை வைத்து ஏன் முடிவு பண்ணல? இப்ப கொலிஜியத்தில் முடிவு பண்ணி அனுப்ப வேண்டியதான? ஏன் பண்ண மாட்டறீங்க?

ஜஸ்டிஸ் எம்.எஸ். ரமேஷ் அவர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இப்ப இருக்கக்கூடிய கொலிஜியம் என்பது… தலைமை நீதிபதி அவர்கள், அவர் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர். அடுத்து இருக்கக்கூடிய திரு சுரேஷ் குமார் அவர்கள், ஓபிசி பிரிவில் வரக்கூடிய முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர். அடுத்து இருக்கக்கூடிய ஜஸ்டிஸ் எம்.எஸ். ரமேஷ் அவர்கள் ஷெடியூல் காஸ்டில் வரக்கூடியவர்.

என் கேள்வி என்னன்னா, ஒரு SC Judge இருக்கிறபோது, ஒரு OBC தேவர் சமூகத்தை சேர்ந்தவர் இருக்கிற போது ஏன் கொலிஜியம் கூடி முடிவு பண்ண மாட்டறீங்க? யாருக்காக Wait பண்றீங்கன்னு என் கேள்வி. கேள்வி வருமா வராதா?

அப்ப இன்னும் ஒரு 15 நாள்ல எம்.எஸ். ரமேஷ் அவர்கள் Retire ஆயிடுவாரு அப்படின்றதுக்காக வெயிட் பண்றீங்களா? இந்த சுரேஷ்குமார் அவர்களை வேறு நீதிமன்றத்துக்கு மாத்திட்டு, அடுத்து கொலிஜியத்தில் எஸ்.எம். சுப்பிரமணியம் அவர்களும், அனிதா சுமந்த் அவர்களும் வந்தா அதுல ரெண்டு பேர் பிராமின் வருவாங்க. ஒரு நான்-பிராமின், ரெண்டு பிராமின். இப்ப அதுக்காக வெயிட் பண்றீங்களான்னு சந்தேகம் வருமா வராதா?

தவம்: பெரிய குற்றச்சாட்டாச்சே… அப்படி நீதிமன்றம் தனிச்சையாக சமூக ரீதியில் செயல்படுமா? அப்படி ஒரு சிக்கல் வருமா?

வாஞ்சிநாதன்: ஆமா. என்ன உச்சநீதிமன்றம் என்ன சொல்லி இருக்குன்னா, இப்ப ஏற்கனவே சென்ற ஆண்டு, இந்த ஆண்டு தொடக்கத்திலயே சென்ற ஆண்டுலே ஒரு லிஸ்ட் அனுப்புனாங்க ஏற்கனவே உள்ள கொலிஜியம். அதை உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசின் லெட்டரோட திருப்பி அனுப்பினாங்க. என்ன சொல்லி இருக்காங்கன்னா, அதுல ‘அன்-ரெப்ரசென்டட் கம்யூனிட்டி’ (Unrepresented Community)… அதாவது இதுவரை பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களுக்கு, குறிப்பாக SC,ST,OBC, மைனாரிட்டிக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து நீங்க லிஸ்ட் அனுப்புங்கன்னு சொல்லி ஒன்றிய அரசு சொல்லிருக்காங்க.

தவம்: ஒன்றிய அரசே அப்படி சொல்கிறது என்றால் பெரிய விசயம்தான் பிறகு என்ன பிரச்சனை?

வாஞ்சிநாதன்: ஆமா. ஒன்றிய அரசோட லா Minister கொஞ்சம் பரவாயில்ல போல. அவர் இப்படி அனுப்பி இருக்காங்க. இப்ப நீங்க அப்படிப்பட்ட நபர்களை தேர்வு செய்கிற போது, இப்ப இருக்க காம்பினேஷன்றது எல்லா சமூகத்தை சேர்ந்தவங்களுக்கும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு காம்பினேஷன். அதாவது ஓபிசி சமூகத்தில் ஒருத்தர் இருக்கார், எஸ்சி எஸ்டிக்கான பிரதிநிதித்துவம் ஒன்னு இருக்குது, ஓசி (OC) கேட்டகிரிக்கு ஒரு பிரதிநிதித்துவம் இருக்கு. இதைவிட கரெக்டான ப்ரபோஷன் (Proportion) கொலிஜியத்துக்கு எப்ப வரும்?

அடுத்து ஓபிசிக்கோ, எஸ்சி எஸ்டிக்கு ரெப்ரசென்டேஷனே கிடையாது கொலிஜியத்துக்குள்ள. அடுத்து மூணு பேருமே ஓசி கேட்டகிரில தான் வருவாங்க. அடுத்து யார் வர்றா? அதுக்கு முன்னாடியே தெரியும் எஸ்.எம். சுப்பிரமணியம் அவர்கள் வருவார். ஓகே, அவர் எனக்கு பிசியா ஓசியான்றது கரெக்டா தெரியல, ஆனா ரெண்டு பேர் ஓசி மெஜாரிட்டி வருவாங்க கண்டிப்பா. அவரும் ஓசியா இருந்தா மூணு பேரும் ஓசியா இருக்கறதுக்கான வாய்ப்பு இருக்குது.

அதனால இன்னைக்கு உள்ள காம்போசிஷன்ல ஒரு பட்டியல் சமூகமும், ஒரு ஓபிசி சமூகமும் ஏன் நீதிபதிகள் நியமனத்தில அவர்களுடைய கருத்து இருக்கக்கூடாது என்று நீதித்துறை நினைக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்லணும்.

இரண்டாவது விஷயம், ஒரு வேக்கன்சி வருது, ஒரு அஞ்சு வேக்கன்சி அல்லது ஒரு 10 வேக்கன்சி வருதுன்னா, வந்த உடனே இவ்வளவு நாள்ல கொலிஜியம் கூடணும் அப்படின்னு ஒரு முடிவு இருக்கணும்ல? இப்ப என்ன ப்ரொசீஜர் இருக்குன்னு கேக்குறாங்க. நீங்க கொலிஜியம் இன்னும் ஒரு வருஷம் கூட்டலைனாலும் சட்டப்படி ஒன்னும் செய்ய முடியாது. எந்த வரையறையும் கிடையாது.

தவம்: ஆளுநர் மாதிரிதான அதுவும்?

வாஞ்சிநாதன்: ஆமா ஆளுநர் கதைதான். பெரிய பவர் சென்டர். அவங்களுக்கு எந்த கட்டுப்பாடும் வைக்கக்கூடாது, அவங்க விரும்புன வரை பண்ணிக்கிருவாங்க. இப்ப என் கேள்வி என்னன்னா, உலகத்துக்கே சொல்றீங்க ஜுடிசியரி… நீங்க ஏன் உங்க டைம் லிமிட் வைக்க மாட்டறீங்க?

அப்ப சில நீதிபதிகள் நீங்க சொல்றத செய்யல அப்படின்னா ஒன்றிய அரசு சொல்லுவாங்க. இன்னும் நீதிபதி எல்லாம் இவங்க அவர்ன்னு சொல்லி ரெக்கமெண்ட் பண்ணுவாங்க. ஏன்னா
“எந்தப்ரொசீஜரும் கிடையாது. ஒரு நீதிபதி ஆகறதுக்கு என்ன தகுதி? எப்படி இன்டர்வியூ இருக்கா? செலக்க்ஷன் இருக்கா? எக்ஸாம் இருக்கா?
ஒன்னும் கிடையாது.
இப்ப இந்த நீதிபதிகள் பார்த்து இவங்க ரெக்கமெண்டேஷன் சொல்றவங்கள வச்சு அதை எடுப்பாங்க. எப்படி எடுக்கறாங்கன்னு நம்மளுக்கு தெரியாது. அந்த மோட் ஆஃப் செலக்ஷனோ, லிஸ்ட் எப்படி வாங்குறாங்கன்னு தெரியாது. அந்த கேண்டிடேட்டோட டீடைல் நம்மளுக்கு தெரியாது. எந்த வெப்சைட்ல அத போட மாட்டாங்க. கொலிஜியத்துல என்ன பேசுறாங்கன்றது எந்த வெப்சைட்லயும் வராது.

ஈவன் சுப்ரீம் கோர்ட் கொலிஜியனால் இப்ப சில விஷயங்களை அப்லோட் பண்றாங்க. நெட்ல போடுறாங்க, வெப்சைட்ல போடுறாங்க. ஆனா “ஹைகோர்ட் ல எதையும் போடுறதுல்ல. இப்ப இங்க நீதிபதிகள் நியமனம் என்பது ஒரு மர்ம குகை. அதுக்குள்ள என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது”

இதேது ஒரு IAS Appointmentலயோ, ஒரு Collector appointmentல, அல்லது வேற ஒரு தாசில்தார் Appointmentல, ஒரு இன்ஸ்பெக்டர், DSP Appointmentல, ஒரு பியூன் Appointmentல கூட, ஒரு ஆசிரியர் Appointmentல கூட நீங்க என்ன சொல்றீங்க? Judiciary prodcure Follow பண்ணல, நீங்க ரத்து பண்றீங்க. இப்ப நீதிபதிகள் நியமனத்தில நாங்க என்ன கேட்கிறோம்? வெளிப்படை தன்மை இருக்கணும். எப்படி இந்த ப்ராசஸ் நடக்குது? ரெண்டாவது டைம் பவுண்ட் மேனர்ல (Time bound manner) அனுப்பனும். மூன்றாவது கொலிஜியத்தில இவங்க இருப்பாங்கன்றதுக்காக நீங்க மாத்துனீங்கன்னு உச்ச நீதிமன்றம் செய்தால்… இந்த உச்ச நீதிமன்றம் என்னவ… இந்த நாட்டுக்கே எல்லா பிரச்சனையும் தீர்க்கக்கூடிய உச்ச நீதிமன்றம் தான் வெளிப்படை தன்மை இல்லாமல் செய்றாங்க.

இதுக்கு பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும். ஜஸ்டிஸ் அதுல் சிரிதரன் ஒருத்தர் மத்திய பிரதேச ஹைகோர்ட்ல இருந்தார். அங்க உள்ள சாதி கொடுமைகளுக்கு எதிராக தீவிரமாக அவர் பேசினார். இது ஒரு தேசிய அவமானம், கான்ஸ்டியூஷன் நாட்டில இப்படி செய்ய முடியுமா, இதுக்கு எதிரா எல்லாரும் கடுமையா எதிர்வினை ஆற்றணும் அப்படின்னல்லாம் ஜட்ஜ்மென்ட் கொடுத்தாரு. அவரை ஃபர்ஸ்ட் சத்தீஸ்கர் கோர்ட்டுக்கு மாத்துனாங்க. யூனியன் கவர்மெண்ட் அத நோட்டிபையே பண்ணல. அடுத்து குஜராத் ஹைகோர்ட்ல ஜூனியர் ஜட்ஜா போட்டுட்டார். அதுக்கு வந்து லிஸ்ட்ட மறுபடியும் திருப்பி அனுப்பி ஒன்றிய அரசு இவரை வேற இடத்துக்கு மாத்துங்கன்னு சொல்லி, அதை உச்சநீதிமன்ற கொலிஜியம்… அதுல சென்ட்ரல் கவர்மெண்ட் கேட்டுக்கிட்டதுனால நாங்க மாத்துறோம் அப்படின்னு ரெசல்யூஷன் வருது. அப்படி செய்ய முடியுமா? அப்பட்டமான அரசியல் சட்ட மோசடி இது. உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசு சொன்னதுபடி அவர் குஜராத்துக்கு மாற்றப்பட்டார்.

இப்படி பல நீதிபதிகள் பலியாக்கப்பட்டிருக்காங்க. இப்ப ரீசன்டா வந்து உச்சநீதிமன்றத்தில கடந்த 25.08.2025-ல ரெண்டு நீதிபதிகள்… ஜஸ்டிஸ் அலோக் ஆர்தே, ஜஸ்டிஸ் வி.எம். பாஞ்சோலி ரெண்டு பேரையும் எலிவேட் பண்ணாங்க. 25-ஆம் தேதி ரெக்கமெண்ட் பண்றாங்க. 29-ஆம் தேதி சென்ட்ரல் கவர்மெண்ட் நோட்டிபிகேஷன் போட்டு அவங்க பதவி ஏத்திட்டாங்க.

இப்ப இதுல கொலிஜியத்தில் இருக்கக்கூடிய ஒரு நீதிபதியே அதை கேள்வி கேட்டிருக்காங்க, ஜஸ்டிஸ் பி.வி. நாகரத்தினா. அதுல அவங்க அஞ்சு நீதிபதிகள்ல ‘டிசன்ட் நோட்’ (Dissent note) எழுதி இருக்காங்க. இந்த காரணங்களனால ஜஸ்டிஸ் பாஞ்சோலி அப்பாயின்ட்மெண்ட்ட, எலிவேஷன நான் எதிர்க்கிறேன் அப்படின்னு சொல்லி அவங்க எழுதி ரிட்டனா கொடுத்திருக்காங்க. அதை வெப்சைட்ல கூட பப்ளிஷ் பண்ணல ! ஜுடிஷயரி. வேற வழியில பிரஸ்ல லீக் ஆகிதான் செய்தி வந்திருக்கு.

அதுல அவங்க சொல்லிருக்க விஷயம் என்னன்னா, அதாவது அஞ்சு விஷயத்தை சொல்லி இருக்காங்க. ஒவ்வொரு ஹைகோர்ட்டுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் உங்களுக்கு வந்து ரிசர்வேஷன் கிடையாது. அப்ப அவங்க பொதுவா என்ன செய்வாங்கன்னா ஏரியா வைஸ்ல, இப்ப தமிழ்நாட்டில ஆளே இல்ல, தமிழ்நாடு கேரளா சவுத்ல ஆளே இல்லைன்னா இதுல இருந்து கொண்டு வருவாங்க. அப்பறம் மத்த கம்யூனிட்டில ஆள் இல்லைன்னா அதுல இருந்து கொண்டு வருவாங்க. பெண்கள் இல்லைன்னா கொண்டு வருவாங்க. இப்படி அவங்களா பண்ணிக்கிருவாங்க. அதுக்கு எந்த ரூலோ ரிசர்வேஷனோ கிடையாது. அப்படி எல்லா பகுதிக்கும் பிரதிநிதித்துவம் வேணும் என்ற அடிப்படையில் கொண்டு வருவாங்க.

அதுல அதிக நீதிபதிகள் இருக்கிற ஹைகோர்ட் வந்து அலகாபாத் ஹைகோர்ட். 160 நீதிபதிகள் இருக்காங்க. அதிலிருந்து உச்ச நீதிமன்றத்தில இருக்கிற நபர்கள் மூணு Judge இருக்காங்க. அலகாபாத் High Courtல இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு போனவங்க மூணு பேர் இருக்காங்க. அதேபோல Bombay High Courtல 94 ஜட்ஜஸ் சாங்ஷன்ட் ஸ்ட்ரென்த். அதுல இருந்து மூணு பேர். பஞ்சாப் ஹரியானா High Court 85 பேர் Sanction. அதுல இருந்து மூணு பேர்.

அதே சமயம் Madras High Court 75 ஜட்ஜஸ் இருக்காங்க. ரெண்டு பேர்தான் உச்சநீதிமன்றத்தில இருக்காங்க. கல்கத்தா High Court 72 ஜட்ஜஸ் சாங்ஷன். அதுல ரெண்டு பேர் இருக்காங்க. டெல்லில 60 ஜட்ஜஸ் இருக்கலாம். அதுல இருந்து ஒரு ஆள். கர்நாடகா 62 பேருக்கு ரெண்டு.

அதே சமயம் ஜஸ்டிஸ் B.V.Nagarathna அவங்க டிசன்ட் நோட்ல என்ன சொல்றாங்கன்னா, குஜராத்தில இருந்து என்ன, மத்திய பிரதேசத்தில இருந்து என்னன்னு கேக்குறாங்க. சரி குஜராத்துல 52 ஜட்ஜ் தான் சாங்ஷன். குஜராத்தில இருந்து மூணு பேர். மத்திய பிரதேசல 53 பேர்தான். அங்க இருந்து மூணு பேர்.

குஜராத்தும் மத்திய பிரதேசம் தீர்மானிக்கிற இடமா வராங்க. Supreme Courtல ஒருத்தர் தலைமை நீதியா வருவாரு. அடுத்து கொலிஞ்சியத்துல ரெண்டு பேர் வருவாங்க. அப்ப மூணு பேர் மெஜாரிட்டியா வந்துருவாங்க. இப்படி பல பிரச்சனைகள் அதுல வரும்.

இவங்கதான் நாடு முழுவதும் உள்ள High Court நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியிலே தீர்மானிக்க கூடியவர்கள். இப்ப அவங்க என்ன கேக்குறாங்கன்னா, இத நான் கேட்கல… உச்சநீதிமன்ற நீதிபதி திருமதி நாகரத்தினா அவர்கள் கேக்குறாங்க. நீங்க அலகாபாத்துக்கு மூணு, குஜராத்துக்கு மூணா? அப்படி நம்ம தமிழ்நாட்டுக்கு எடுத்துக்கிட்டா 75-க்கு மூணு கிடையாது. 53-க்கு மூணு, 52-க்கு மூணு. இது எப்படி நியாயமா இருக்கும்?

இன்னும் பல High Courtக்கு Representation கிடையாது. ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒரிசா, திரிபுரா, உத்தரகாண்ட் இதுக்கெல்லாம் ஜட்ஜே கிடையாது. இந்த பகுதிகள் எல்லாம் சேர்த்துதானே ஒருத்தர் இருக்கணும்ல? அது கிடையாது.

இப்ப அடுத்து ரெண்டாவது அப்ஜெக்ஷன் * என்ன சொல்றாங்கன்னா, அடுத்து எலிவேஷன்ல சிஜே-யா (CJI) அடுத்தடுத்து வரக்கூடியவங்கள்ல ரெண்டு வருஷத்துல ரெண்டு குஜராத்தை சேர்ந்த தலைமை நீதிபதிகள் இருப்பாங்க. பர்திவாளா அவர் வந்து 2028-லிருந்து 2030 வரை… மே 3, 2028-ல இருந்து ஆகஸ்ட் 11, 2030 வரை கிட்டத்தட்ட ரெண்டு ஆண்டுகள் இருக்கறாரு. அந்த பீரியட்ல இவரும், இப்ப இருக்கற… இப்ப இவங்க எலிவேட் பண்ணதுல ஒரு நீதிபதி அங்க தலைமை நீதிபதியா வந்துறாரு. அப்ப ரெண்டு வருஷத்துக்குள்ள ரெண்டு பேர் உச்சநீதிமன்ற தலைமை குஜராத்தில இருந்து மட்டும் எப்படி வராங்க அப்படின்றது இன்னொரு கொஸ்டின அவங்க ரேஸ் பண்றாங்க.

ரெண்டாவது சீனியாரிட்டி. மூணு பெண் சிஜே இருக்கறாங்க. தலைமை நீதிபதி குஜராத் ஹைகோர்ட்ல சுனிதா அகர்வால், பாம்பே ஹைகோர்ட்ல ரேவதி பிரசாத், பஞ்சாப் ஹரியானா ஹைகோர்ட்ல லிசாகில். இவங்க மூணு பேரும் ஜஸ்டிஸ் பாஞ்சோலியோட சீனியர்ஸ். அவங்க மூணு பேரு சீனியாரிட்டிய பைபாஸ் பண்ணிட்டு நீங்க எதுக்கு இவர கொண்டு வந்தீங்கன்னு கேக்குறாங்க.

தவம்: நியாயமான கேள்விதானே ? பிறகு நடப்பது என்ன?

வாஞ்சிநாதன்: ஆமா. இது எதுக்குமே பதில் கிடையாது. அதேபோல ஏற்கனவே இவர அங்க குஜராத்தில இருந்து பாட்னா ஹைகோர்ட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணாங்க. பண்ணிட்டு ஒன்பது மாசம் அத கவர்மெண்ட் நோட்டிபைவே பண்ணல. இப்ப ஜஸ்டிஸ் நிஷா பானுவை ஆகஸ்ட்ல போட்டு அக்டோபர்ல நோட்டிபை பண்றீங்க. ஆனா ஜஸ்டிஸ் பாஞ்சோலிக்கு ஒன்பது மாசமா டிரான்ஸ்பர் போட்டத சென்ட்ரல் கவர்மெண்ட் நோட்டிபையே பண்ணல. அப்படியே இருக்காரு அவரு. டிரான்ஸ்பர் சுப்ரீம் கோர்ட் கொடுத்துருச்சு. ஆனா அவங்க ஒன்னுமே செய்யல.

இப்ப அதை வந்து சொல்றாங்க. ஏற்கனவே அவர் பேர் வரும்போது ரெண்டு ஜட்ஜ்… ஜஸ்டிஸ் நாகரத்னாவோட விக்ரம்நாத் இன்னொரு ஜட்ஜ அவர் அப்போஸ் பண்றாரு. ரெண்டாவது தடவை சென்ட்ரல் கவர்மெண்ட் திரும்பி வந்து அவர ரீகன்சிடர் பண்ணுங்கன்னு சொல்றப்ப அந்த ஜட்ஜ் ஸ்டாண்ட மாத்திக்கிறாரு. இது எப்படி செய்ய முடியும் தெரியலன்னு அவங்க சொல்றாங்க. முதல்ல எதுக்கு அப்போஸ் பண்ணாரு? இப்ப எதுக்கு மாத்துனாருன்னு தெரியல அப்படின்னு ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்துல இவ்வளவு குளறுபடி இருக்குன்னு யார் சொல்றது?

இன்னொரு உச்சநீதிமன்ற நீதிபதி. அவங்க வருங்கால தலைமை நீதிபதி . அவங்களே சொல்றாங்க.

அப்ப இப்படி கொஞ்ச நாள்தான் இருப்பாங்க அவங்க. இப்ப இது இப்ப மட்டும் கிடையாது. 2014-ல ஜஸ்டிஸ் செல்லமேஸ்வர் பேட்டி எல்லாம் கொடுத்தாங்கல்ல… அந்த அதுல ஒரு நீதிபதி அவர் நான் கொலிஜிய மீட்டிங்கே வரமாட்டேன்,

இது இப்ப மட்டும் கிடையாது. 2014-ல ஜஸ்டிஸ் செல்லமேஸ்வர் பேட்டி எல்லாம் கொடுத்தாங்கல்ல… அந்த அதுல ஒரு நீதிபதி அவர் நான் கொலிஜிய மீட்டிங்கே வரமாட்டேன், எழுத்து பூர்வமா எல்லாம் வேணும் அப்படின்னு அவர் கேட்டாரு. பப்ளிஷ் பண்ணுங்கன்னு கேட்டாரு. அதுவே ஒரு பெரிய பிரச்சனையா இருந்துச்சு.

அடுத்து 2011-ல 18-ல ஜஸ்டிஸ் மதன் லோக்கூர் கொலிஜியத்தில இருந்தாரு. அவங்க கொலிஜியம் ரெண்டு பேர ரெக்கமெண்ட் பண்றாங்க. அந்த செய்தி சுப்ரீம் கோர்ட் Websiteல கூட போடல. அது ஒண்ணுமே பண்ணல. அதுக்கப்புறம் அவர் Retire ஆன பிறகு இன்னும் ரெண்டு பேர இவங்க புதுசா ரெக்கமெண்ட் பண்ணி அடுத்த கொலிஜியம் அனுப்பிருச்சு. முன்னாடி இவங்க recommended பண்ணாங்களே அது Recordல கூட வரல. ரகசியமா அந்த டாக்குமெண்ட் என்ன ஆச்சுன்னே தெரியல அப்படின்னு அவர்தான் சொல்லிருக்காரு. நான் இருக்கிற போது ரெண்டு பேரு ரெக்கமெண்ட் பண்ணுமே, அது ஒரு ரெக்கார்டுலனாலும் வைக்க வேண்டாமா? அது எதனால நீங்க பண்ணல அப்படின்றத ஒன்னும் சொல்லல.

அதேபோல ஜஸ்டிஸ் ரோஹிண்டன் நாரிமன் இருக்கிற போது
“அகில் குரேஷின்னு ஒரு ஜட்ஜ் இருந்தாரு. யாருன்னா அவர்
குஜராத்தில இருக்கிற போது அமித்ஷாவை ரிமாண்ட் பண்ணவர். அவரை வந்து கடுமையா மோடி அரசு பழி வாங்கினாங்க. “

அவர சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவிடாம தடுக்கறது… கடைசி வரை வரவே விடல. இப்ப ஜஸ்டிஸ் நாரிமன் என்ன பண்ணாரு? அவர் கொலிஜியத்தில் இருக்கிற போது ஜஸ்டிஸ் குரேஷிய எலிவேட் பண்ணாம நீங்க யாரையும் நியமிக்க கூடாது… கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் யாரையுமே போடவிடாம வச்சிட்டார். அவ்வளவு பெரிய பைட் அதுக்குள்ள வந்து நடந்துச்சு.

அதுக்கப்புறம் ஜஸ்டிஸ் முரளிதர் நம்மளுக்கு தெரியும். அவரையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவிடாமல் தடுத்தாங்க. டெல்லி ரையோட்ல அவர் கொஸ்டின் பண்ணாரு அப்படின்றதுனால. இப்ப என்ன பிரச்சனைன்னா அடிப்படையில ஒரு நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதுக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக ஒன்றிய அரசு வந்து நின்னு முழுக்க influence பண்றாங்க அப்படின்றதுதான் அதுல தெரியுது.

இது இவ்வளவு குழப்பத்துக்கும் பிரச்சனைக்கு காரணம் யாரு? ஒன்றிய அரசு. அந்த ஒன்றிய அரசின் நெருக்கடிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் பணிஞ்சு போறாங்கன்றதுதான் வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். மத்தவங்க கிட்ட எல்லாம் வீரம் காட்டுற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதுல பேசுறதே கிடையாது.

தமிழ்நாட்ட Example எடுத்துக்கங்க. 2021-ல உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜான் சத்தியன் அவர்கள் பேரு சுப்ரீம் கோர்ட்டுக்கு… High Courtக்கு ஜட்ஜுக்கு Recommand பண்ணாங்க. உச்சநீதிமன்றத்தில இருந்து… ஒன்றிய அரசாங்கம் என்ன சொன்னா அவர் மோடிக்கு எதிரா Facebookல எழுதிட்டாரு அப்படின்னு நிறுத்திட்டாங்க. அடுத்து மறுபடியும் அந்த Reconsideration போகுது. அப்ப வந்து மறுபடியும் அதை பரிசீலிச்சோம், அது ஒரு பிரச்சனைக்குரிய விஷயம் கிடையாது, எல்லாரும் “Criticize” பண்ணல, அவரு விமர்சனம் தான் பண்ணி இருக்கிறாரு. நீங்க அவர் பேர அவர் High Court ஜட்ஜா போட்ட பிறகுதான் Justice Victoria Gowri உட்பட மத்தவங்களை நியமிக்கணும்னே அனுப்புனாங்க. இது 2022. அது கொஞ்ச முடிவெடுத்து நடக்கல. முடிவெடுத்து இப்படி இப்படியே சொல்லி அனுப்புனாங்க ரெசல்யூஷன் போட்டு. என்ன ஆச்சு இப்ப வரைக்கும்? இல்ல. இன்னைக்கு வரை இல்ல. அவங்க சொன்ன மத்த எல்லாரும் ரிட்டயர்ட் ஆகி கூட போயிருவாங்க போல. எதுவுமே நடக்கல.

அப்ப இதுல யார் இன்னைக்கு Appointment Authority ? கேள்வியாயிடுச்சு. இதுவரை வந்து Thrid Judge case படி… உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில மூணு கேஸ் இருக்கு: ஃபர்ஸ்ட் ஜட்ஜ் கேஸ், செகண்ட் ஜட்ஜ் கேஸ், தேர்ட் ஜட்ஜ் கேஸ். அதன்படி உச்ச நீதிமன்ற கொலிஜியம் முடிவு பண்ணா அவங்களதான் அப்பாயின்ட் பண்ணனும். ஆனா இப்ப ஒன்றிய அரசுக்கு பல Appointment போகுது. Even Supreme Court ஜட்ஜஸ் நியமனம், உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம் அவங்க விரும்பலன்னா நோட்டிபை பண்ண மாட்டறாங்க. இதை கேட்பதற்கான எந்த வழியும் இல்ல. இத பல தலைமை நீதிபதி ஓன் கோர்ட்ல சொல்லிட்டாங்க. இப்ப Final Authority, Appointment Authority யாருன்னா ஒன்றிய அரசாங்கமாதான் இன்னைக்கு இருக்குது.

அப்ப நீதித்துறை எப்படி Independentடா இருக்கும்? இப்ப ஒன்றிய அரசை எதிர்த்து ஒரு விமர்சனம் பண்ணா… இப்ப ஜான் சத்தியன் அவர்கள் மோடியை ஒரு விமர்சனம் பண்ணிட்டாரு அப்படின்றதுக்காக அவரை கடைசி வரை விடமாட்டோம். அகில் குரேஷி அமித்ஷாவை Remand பண்ணிட்டாரு, நீதிபதியாக அவர் கடமை செய்தார் என்பதற்காக கடைசி வரை அவரை விட மாட்டோம் அப்படின்னா என்ன செய்தியை வந்து சொல்றாங்க ஒன்றிய அரசும் நீதித்துறையும்? அவங்களை எதிர்த்தா Judiciaryக்குள்ள இருந்தால் நீங்க இருக்க முடியாது, ஜட்ஜ் ஆக முடியாது.

இப்ப யாராவது வக்கீல் விமர்சனம் பண்ணுவாங்களா? ஜட்ஜ் கனவுல இருக்கறவங்க யாராவது விமர்சனம் பண்ணுவாங்களா? அப்பா வாயை திறந்தா மாட்டிருவோம்… Social media அக்கவுண்டே மூடிருவாங்க. சரி ஜட்ஜா இருக்கும்போது BJPக்கு எதிரா சட்டப்படி ஏதாலும் பண்ணனா இதான் நிலைமை. பண்ணவங்க எல்லாத்தையும் காலி பண்ணி இருக்கறாங்க அவங்க. இதை மீறி Supreme Court ஒரு தடவை கூட தடுத்தது கிடையாது.

அப்ப எப்படி இருக்கும்? இப்ப Madras High Courtல இன்னைக்கு அதான் நடக்குதா அப்படின்ற சந்தேகம் வருமா வராதா? ஒரு பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரும், ஒரு OBC சமூகத்தை சேர்ந்தவரும் இன்னைக்கு இரண்டு பேரும்… ஒரு OC சமூகத்தை சேர்ந்தவரும் இருக்கிற சூழ்நிலையில collegium Meeting கூடி நீங்க முடிவு பண்ணாம, இப்ப இவர்கள் எல்லாம் போன பிறகு ” OC சமூகத்தை சேர்ந்தவர்கள் மெஜாரிட்டியா இருக்கும்போது கொண்டுவர நினைக்கிறீங்களா அப்படின்ற கேள்வி வரும்னா அது சமூக நீதிக்கு எதிரானது “

கொலிஜியத்தில இயல்பா இவங்கல்லாம் வர்றத நீங்க கட்டைல் (Curtail) பண்றீங்க, தூக்குறீங்க. ஒரு மைனாரிட்டி இருந்தவங்கள தூக்கி அடிக்கிறீங்க அப்படின்னா மொத்தத்துல இது வெளிப்படை தன்மையோடு உயர்நீதிமன்ற கொலிஜியம், உச்ச நீதிமன்ற கொலிஜியம், ஒன்றிய அரசு எல்லாம் வந்து மிக மோசமான முறையில் அரசியல் சட்டத்தை வீழ்த்துவதற்கு, நீதிபதிகள் நியமனத்தை, நீதித்துறையை வீழ்த்துவதற்கு இவர்கள் வேலை செய்கிறார்களோ? இப்ப இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு நீங்க மத்தவங்க வெளிப்படையா இருக்கணும் அப்படின்னு சொல்வதற்கு என்றதுதான் என் கேள்வி.

எனவே இது என்ன பிரச்சனைன்னா… இப்ப இந்த மீசை முறக்கி பட்டியல் சமூகத்தோட சண்டைக்கு போறாங்கள மாரி செல்வராஜோட இந்த தேவர் சமூகம், முக்குலத்தோர் சமூகம்… ஏண்டா முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் கொலிஜியத்தில இருக்கறாரு. அவர் இருக்க காலத்துல கூட்டி முடிவு பண்ணுங்க. இதுல வந்து முக்குலத்தோர் சமூகத்தில பிரதிநிதித்துவம் இல்ல, டிஎன்டி-க்கு, பிரமலை கள்ளர் இது மாதிரி இவங்களுக்குெல்லாம் பிரதிநிதித்துவம் இல்ல. இப்பனாலும் கூட்டுங்க. அன்ரப்ரசென்டட் கம்யூனிட்டி குடுங்க. பேசுறதுக்கு யாருக்காலும் தகுதி இருக்கா? ஏதாவது தெரியுமா? நடக்குறது தெரியுமா? தெரியல.

இந்த கருணாஸ்ன்னு ஒரு ஆள் இருக்காரு, வாண்டியார்ன்னு இருக்காரு… அங்க போய் எல்லாம் அடிக்கிறாரு. High Courtல High Court முன்னாடி போய் உட்காருங்கன்னு சொல்றேன் நானு. அப்புறம் என்ன மூர்த்தின்னு ஒரு ஆள் இருக்காரு, பி.வி. கதிரவன்னு ஒரு ஆள் இருக்காரு, இந்த முருகன் ஜின்னு ஒரு ஆள் இருக்காரு, திருமாறன்ஜினு ஒரு ஆள் இருக்காரு, இன்னும் என்ன இசக்கி ராஜான்னு ஒருத்தர் இருக்காரு… எத்தனையோ பேர் நாங்கதான் இந்த முக்குலத்தோர் சமூகத்துக்கு தலைவர் அப்படின்னு பேசிக்கிட்டு இருக்க ஆட்களுக்கு யாருக்காவது என்ன நடக்குதான்னு தெரியுமா? நீ மாரி செல்வராஜ் படத்துக்கு சண்டைக்கு போற… எதுக்கு சண்டைக்கு போகும்னு தெரிய வேண்டாமா? இந்த அறிவில்லாம இவங்க என்ன கம்யூனிட்டி லீடர்ஸ்னு சொல்ல முடியும்?

அதேபோல பட்டியல் சமூகம். பட்டியல் சமூகத்துக்கு நிறைய தலைவர்கள் இருக்கறாங்க. கிருஷ்ணசாமி இருக்காரு, திருமாவளவன் இருக்கார், ஜான் பாண்டியன் இருக்கார், பலர் இருக்காங்க. திருமாவளவனுக்கு இந்த செய்தி போச்சா இல்லையான்னு தெரியல. ஆனால் இதையெல்லாம் கூர்ந்து எல்லாரும் அவங்க கவனிக்கணும். அவங்களும் யாரும் வாய திறக்கல.

அடுத்து சமூகநீதி பேசக்கூடிய திமுக. சமூகநீதி பேசுறீங்க, OBC,SC,STக்கு தான் நாங்க ஃபைட் பண்றோம்னு சொல்றீங்க. கொலிஜியம் சம்பந்தமா என்னைக்காவது பேசி இருக்கீங்களா? இப்ப நீதிபதி நியமனத்தில கோட்டை விட்டறீங்க. நீங்க கோட்டைய கோட்டை விட்டு இன்னைக்கு நீதிமன்றம் போனாலும் பிரயோஜனம் இல்ல. இனி எல்லா பொசிஷன்லயும் அவங்க வந்து முழுக்க நீதித்துறை காவி மயமானால் நீங்க Government ரன் பண்ண முடியாது. அவங்களுக்கு உட்பட்டுதான் ரன் பண்ண முடியும். ஆனா திமுகல சட்டத்துறைன்னு ஒன்னு இருக்குல? அது என்ன செய்யுது? இத ஏதாவது பார்க்குமா?

இல்ல திமுக Minister இத்தனை பேர் இருக்கறாங்கல… வெறும் வியாபாரம் பாக்குறது, கலெக்ஷன் பாக்குறது, பதவிக்கு அடிச்சுக்கிறது, நாங்க வந்து ஜிபிஆர் இருப்போம், பிபிஆர் இருப்போம், ஏஜி… இந்த சண்டைக்கு அடிச்சுக்கிறத தவிர வேற உருப்படியான வேலை எதையுமே சட்டத்துறையும் செய்றது இல்ல, அமைச்சர்களும் செய்றது இல்ல., பதவிய பிடிக்கிறதுதான் பிஸியா இருக்குறீங்க. இதான் நிலைமையா இருக்குது.

“இப்ப யாருமே இத வந்து பேசல அப்படின்னா யாருதான் பூனைக்கு மணி கட்டுறது? முக்கியமான ஒரு பிரச்சனை. எல்லா கட்சிகளும் பேச வேண்டிய ஒரு பிரச்சனை. இப்போதாவது வாயை திறந்து பேசுங்கன்றதுதான் என் கோரிக்கை “

தவம்: இந்த சூழல்ல தலைமை நீதிபதியா சூர்யாகாந்த் வந்து இருக்கிறார் இல்லையா? அது பற்றி கொஞ்சம் உங்க பார்வை என்ன?

வாஞ்சிநாதன் : தலைமை நீதிபதி அவர்கள் காஷ்மீர் பிரச்சனையில் அவரு தீர்ப்பு கொடுத்தவர். டிரான்ஸ்பரன்சி தொடர்பா அவர்ட்ட கேட்கிறப்ப எல்லாத்தையும் அப்படி வந்து வெளிப்படையா இப்படி சொல்ல முடியும் அப்படின்னு கருத்து சொல்ற ஒரு நீதிபதி. இப்ப ஈவிஎம் (EVM) வழக்கு, இப்படி பல்வேறு வழக்குல, எஸ்ஐஆர் வழக்கு எல்லாத்துலையும் அவர் ஒரு ஸ்ட்ராங்கான ஒரு Judgement கொடுக்கல அப்படின்றதுதான்.

ஏற்கனவே ஓய்வு பெற்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதிய அவர் மேல புகார் கொடுத்து புகார் சொல்லிருக்கார். இவரு எலிவேஷன போய் புகார் சொல்றார். இப்படி பல்வேறு பிரச்சனையில் உள்ள சூழ்நிலையில அவர் வராரு.

என்னை பொறுத்தவரை சந்திரசூட் மேலல்லாம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. ஆமா. இப்ப கவாய் அவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. அந்த எதிர்பார்ப்புகள் கூட பொயத்து போனதான் நம்ம பார்த்தோம். இப்ப இவர் மேல நம்முக்கு பெரிய எதிர்பார்ப்புல்லாம் ஒன்னும் கிடையாது. இருக்கறத மெயின்டென் பண்ணிட்டு போனாலே பரவாயில்லை.

இதற்கிடையில சஞ்சீவி கண்ணான்னு ஒரு CJI வந்தாருங்க. ஆமா அவர் நல்ல விஷயங்கள் பண்ணாரு. நிறைய விஷயம் குறிப்பிட்ட காலத்துல சில நல்ல விஷயங்கள் பண்ணிட்டு போனாரு. குறிப்பா இந்த கொலிஜியத்தோட ரெக்கமெண்டேஷன் அதெல்லாம் வெப்சைட்ல ஏத்தி வெளிப்படை தன்மைய உருவாக்கினவர் அவர்தான். கவாய் அவர்கள் சில வேலை பண்ணாரு. உச்சநீதிமன்றத்துல அங்க உள்ள ஸ்டாப்ஸ்கு Reservation கொண்டு வந்தாரு. அது மாதிரி சில விஷயம் பண்ணாரு. சில விஷயங்கள் நெகட்டிவாவும் பண்ணாரு. இதான் அப்படி இருந்தவர் மேல செருப்பு வீசப்பட்டு ஒரு நெருக்கடி அவருக்கு உருவாக்கப்பட்டதுன்றதுதான் எதார்த்தமான சூழல்.

இப்போ சூர்யாகாந்த் அவர்கள்… அவர்ட்ட நம்ம பெரிய எதிர்பார்ப்புல்லாம் ஒன்னும் கிடையாது. இருக்கிற நிலைமையை கீழ கொண்டு போகாம அவர் வேலை பார்த்தார்னா போதும்ன்றதுதான். ஏன்னா காஷ்மீர் பிரச்சனை எல்லாம் டைம் லிமிட் கூட பிக்ஸ் பண்ணல ஸ்டேட்டா கொண்டு வர்றதுக்கு… அப்படின்றது ஒரு வருத்தத்துக்குரிய ஒரு விஷயமாதான் இருக்கு. இப்ப நீதித்துறை என்பது இதுவரை அவர் எப்படி வேணாலும் இருக்கலாம். ஆனா ஒரு தலைமை நீதிபதியா வந்த பிறகு இந்தியாவை வழிநடத்துகிற பொறுப்புல அவருக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கு. அந்த பொறுப்பை உணர்ந்து அவர் செயல்பட வேண்டும். இப்ப சொல்ற நான் கோரிக்கை வைக்கிறேன், வெளிப்படைத் தன்மை வேணும் நீதிபதி நியமனத்தில. அதை அவர் என்சியூர் செய்வாரான்னு பாக்கணும்.

தவம்: இப்படியான நீதிமன்ற உள்கட்டமைப்பில் நடக்கும் குளறுபடிகளை தயவு தாட்சயன்யம் இன்றி உள்ளதை உள்ளபடி நீதித்துறை மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளீர்கள் அதை அப்படியே மக்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன் நீதிபரிபாலனை சார்ந்த கூர்மையான விவாதச் சூழலில் அறக்கலகத்திற்காக இவ்வளவு நீண்ட நேரம் ஒதுக்கியதற்கு நன்றி சார்

வாஞ்சிநாதன்: நன்றி.

தொகுப்பு : Hari Krishnan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *