இயக்குனர் அவர்களுக்கு,
காதல் கதையாக இத்திரைப்படம் சிறந்த உணர்வை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் இதில் காசுமீர் மாநில மக்களின் அன்றாட வாழ்வும், போராட்டமும் தவறாக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வகையில் இப்படம், ஒரு அரசியலை முன்வைக்கிறது. அந்த அரசியல் காசுமீரிகளின் குரலை பிரதிபலிக்காமல் அவர்களை எதிரியாக நிறுத்துகிறது.
நீங்கள் இந்திய ராணுவத்தின் பிரச்சாரமாக இப்படம் எடுத்ததை ஒப்புக்கொள்வதில் மகிழ்ச்சி. இராணுவம் ஒப்புதல் கொடுத்து காட்சிகளை மட்டும் அமைத்த நீங்கள், காசுமீரிகள் வரலாறை அம்மக்களிடம் கேட்டு காட்சி வைக்காமல், உண்மைகளை மறைத்தது ஏன் என்பதே எங்கள் கேள்வி. காசுமீரிகள் தரப்பு செய்திகளையும் சொல்லவேண்டுமென உங்களுக்கு தோன்றவில்லையே ஏன்?
ஈழத்தின் கதையை, இலங்கை ராணுவத்தின் வழியாக சொல்வீர்களா அல்லது தமிழர்களின் குரலாக சொல்வீர்களா?.. ஸ்டெர்லைட் படுகொலையை போலிசிடம் கேட்டு படமெடுப்பீர்களா அல்லது தூத்துக்குடி மக்களிடம் கேட்டு படமெடுப்பீர்களா?
தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நம்மிடம் கேட்காமல், இந்தி அதிகாரிகளிடம் கேட்டு அவர்கள் ஒப்புதலோடு வடஇந்தியன் ஒருவர் திரைப்படம் எடுத்தால் அது எந்த வகையில் தமிழர்களுக்கு எதிராக இருக்குமோ அவ்வகையிலேயே இப்படம் காசுமீரிகளுக்கு எதிராக இருக்கிறது என்கிறோம். இப்படம் காசுமீரிகள் எதிர்கொள்ளும் நெருக்கடியை எதிர்மறையாக சொல்கிறது. அவர்களது சிக்கலுக்கு, அவர்களது போராட்டமே காரணம் என்கிறது. ஆனால் இது உண்மையல்ல.
‘…தேர்தல் நடந்தால் வளர்ச்சி வந்துவிடும்…’ என்று படம் பேசுகிறது. ஆனால் காசுமீரிகள் 1953 முதல் 2014வரை தேர்தலில் பங்கெடுத்து காசுமீரிகள் தேர்ந்தெடுத்த முதல்வர்களை சிறையில் அடைத்தார்கள். ஆனால் திரைப்படம் காசுமீரி தேர்தல் தடுக்கப்படுவதாகவும் மட்டுமே காட்டுகிறது. 1953ல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் அப்துல்லா 13 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். இறுதியாக 2014ல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் 2019ல் சிறை வைக்கப்பட்டார். இவ்வாறு அம்மக்களின் முதல்வர்களே தொடர்ந்து சிறைவைக்கப்பட்டது வரலாறு.
காசுமீருக்கு தொழிற்சாலைகள் வேண்டுமென அம்மக்கள் வைத்த கோரிக்கைகளை நிராகரித்து ஆர்.எஸ்.எஸ் அதிகமுள்ள ஜம்முவில் மட்டுமே கம்பெனிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அங்கே காசுமீரிகளின் போராட்டமே, வளர்ச்சியை வரவிடாமல் செய்வதாக பேசுகிறீர்கள். இது யாருடைய குரல்?
ரஜபுத் ரைபில்ஸ் உள்ளிட்ட படைபிரிவின் மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் ஐ.நா மன்றம் வரை ஆவணப்படுத்தப்பட்டது மறைக்கப்பட்டு, அவர்களது war-cry மட்டும் முன்னிலைப்படுத்தப்படுகிறது. War-cry சரியானதாக இருப்பதாக வாதிடும் நீங்கள், அந்த ரெஜிமெண்ட்டின் மீதான காசுமீரிகளின் எதிர்ப்பையும், அவர்கள் செய்த படுகொலைகளையும் பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் கடந்து செல்கிறீர்கள்.
இந்த ரெஜிமெண்ட் 1991ல் இந்துத்துவ மனநிலை கொண்ட, பிஜேபியில் பாராளுமன்ற உறுப்பினராக மாறிய ஜக்மோகன் காலத்தில் உருவாக்கப்பட்டது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலத்தில் ‘இந்துத்துவ முழக்கத்தை’ ஒரு ரெஜிமெண்ட்டிற்கு ஏன் வைக்கப்பட்டது என உங்களிடம் எழுப்பிய கேள்வியை, தற்போது இராணுவ அதிகாரிகள்- பாஜக நோக்கி இப்போது எழுப்ப வேண்டியுள்ளது. காசுமீர் ஆளுனர் ஜக்மோகன் நிகழ்த்திய பச்சைப்படுகொலைகளின் விளைவுகளே காசுமீரிகளை ஆயுத போராட்டத்திற்கு தள்ளியது. அவரே 1983 தேர்தலில் வெற்றிபெற்ற முதல்வரை நீக்கிவிட்டு பொம்மை அரசை கொண்டுவந்தவர். பொம்மை முதல்வரை எதிர்த்து 1987ல் தேர்தலில் போட்டியிட்டவர்களின் வெற்றியை நிராகரித்து சிறையில் தள்ளினார்கள். அதாவது 1947 முதல் 1987 வரை அமைதியாகவே அடக்குமுறைகளை எதிர்கொள்பவர்கள், தொடர்ந்து எதிர்கொள்ள இயலாமல் ஆயுதபோராட்டத்தை நோக்கி இளைஞர்கள் செல்வதற்கான காரணம், தேர்தல் முடிவுகளை டில்லி அரசு 40 ஆண்டுகளாக ரத்து செய்வது, என்பதை வரலாறு சொல்கிறது. 1991 ஜன-மே மாத கால இடவெளியில் பலநூறு காசுமீர் மக்களை ஜக்மோகன் படுகொலை செய்தார். இதை அமெரிக்க அதிபரே கண்டித்ததால் அவர் பதவி விலகவேண்டி வந்தது. இவரை ஆளுனராக்கியது பாஜக. பதவி விலகிய பின் இவரை எம்.பியாக பாஜக அறிவித்தது. இவரின் காலத்தில் உருவான ராஷ்ட்ரிய ரைபில்ஸ் மீதான கேள்விகள் பல உண்டு. அதன் ஆதாரங்களை இதற்கு முந்தய எனது பதிவில் ‘கேரவன்’ பத்திரிக்கை அம்பலப்படுத்திய கட்டுரையின் இணைப்பை பதிவுசெய்துள்ளேன். அதை வாசியுங்கள். அதிகாரிகள்-இராணுவம்-நீதிமன்றம்-அரசியல்வாதிகள் குரலை சொல்ல ஊடகங்கள், அதிகாரபலம் உண்டு. ஆனால் மக்களின் குரலை சொல்ல எவருமில்லை. தமிழ்த்திரையுலகம் எளிய மக்களின் வாழ்வியலை உலக தரத்தில் திரைப்படமாக்கி கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நீங்களும் எளியோரின் குரலை பிரதிபலிக்க வேண்டுமென்பதே எம் விருப்பம்.
தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
நவம்பர் 11, 2024
+ There are no comments
Add yours