இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில்
கோயில்கள் வருண அமைப்பைப் பாதுகாக்கும் சமய நிறுவனங்களாகவே இருந்து வருகின்றன. அதனைப் பார்ப்பனிய சாஸ்திரங்கள் , நடைமுறை பழக்க வழக்கங்கள் பாதுகாத்தும் வருகின்றன. இந்த அநீதியான சநாதனக் கோட்டைக்கு எதிராக 19 ஆம் நூற்றாண்டில் உருவாகிய சமத்துவம் ( Equality ) எனும் குடியாட்சிக் கோட்பாடு சம்மட்டியாய் இறங்கியது.
கோயில்களின் வழிபாட்டு முறையில் பின்பற்றப்படும் தீண்டாமைக்கு எதிராக கோயில் நுழைவுப் போராட்டங்கள் சூத்திர , பஞ்சம சாதி மக்களால் முன்னெடுக்கப்பட்டன.
தெற்கில் கமுதி கோயிலில் தமிழர்கள் (நாடார்) நடத்திய மாபெரும் பண்பாட்டு உரிமைப் போராட்டம் சாஸ்திர , சநாதன பிடிமானங்களின் மீது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கமுதிக் கோயிலில் சமத்துவ உரிமை கோரி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளையும் (நாடார்) தமிழ்ச் சமூக மக்கள் ஏறினர்.
இலண்டன் பிரைவி கவுன்சில் வரை சென்ற இவ்வழக்கு தமிழர்களின் சமத்துவ உரிமைக்கான கோரிக்கைக்கு பெரும் தடைக்கல்லைப் போட்டது.
சாஸ்திர , பழக்க வழக்கங்கள் மீற முடியாதவை என இலண்டன் பிரிவு கவுன்சில் தீர்ப்பு வழங்கியது.
மகத் குள நீரெடுப்புப் போராட்ட வெற்றிக்குப் பிறகு
மீற முடியாத சநாதனச் சட்டத்தை எதிர்த்து அண்ணல் அம்பேத்கரின் கவனம் மராட்டிய கோவில்களில் பின்பற்றப்படும் தீண்டாமைக்கு எதிராகத் திரும்பியது.
மராட்டியத்தின் பூலேசுவரர் கோயில் , காலாராம் கோயில் போன்றவற்றில் சமத்துவ உரிமைக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.
ஏறக்குறைய ஒன்றிய வரலாற்றில் நீண்டகாலம் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டமாக அது நடந்தது.

சநாதனத்தின் கொடுமைக்கு சட்டப்பூர்வ வழியில் தீர்வுகாண எண்ணிய அம்பேத்கர் 1929 ல் கோயில் தீண்டாமைக்கு எதிராகத் தனிச் சட்ட வரைவைக் கொண்டு வந்தார். அம்பேத்கர் தொகுதி நூல்களில் கூட இந்த சட்ட வரைவுக்கான முன்னெடுப்பு வரலாறாக பதிவுசெய்யப்படவில்லை என
ஆய்வாளர் மனோஜ் மிட்டா குறிப்பிடுகிறார்.
அம்பேத்கரின் அந்தச் சட்ட வரைவை அப்போதிருந்த ஒன்றிய சட்ட அவையில் கொண்டுவர ஜெயகர் முயன்று அது முடியாமல் போனது. ஜெயகருக்குப் பின் மத்திய சட்ட அவையின் உறுப்பினராக இருந்த நீதிக்கட்சியின் ஆர்.கே சண்முகம் (செட்டியார்) அம்பேத்கரின் சட்டவரைவை 1932 ல் ஒன்றிய சட்ட அவையில் கோண்டு வந்தார். அண்ணலின் சட்ட வரைவுக்கு அப்போதைய சூழலில் ஒப்புதல் பெற முடியவில்லை என்றாலும் 1925 லேயே நீதிக்கட்சி கோயில் டிரஸ்டிகளிடம் இருந்த சநாதன உரிமையைப் பறித்து மாகாண அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.
அண்ணலின் சட்ட வரைவுக்கு எதிராக தடைக்கல்லாக இருந்த கோயில் டிரஸ்டிகளிடம் இருந்து சென்னை மாகாணம் கொண்டு வந்த அறநிலையத்துறைச் சட்டம் கோயில் தீண்டாமையை பாதுகாக்கும் டிரஸ்டிகளின் அதிகாரத்தைப் பறித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணலின் சட்ட வரைவை சமத்துவ நோக்கில் ஒன்றிய சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியும் அதன் குறைகளையும் களைந்து சட்டமாக்க பெருமுயற்சி எடுத்தவர் நீதிக்கட்சியின் ஆர் கே சண்முகம் (செட்டியார்) என்பது வரலாறு.
நீதிக்கட்சிக்கும் அண்ணலின் இயக்கத்திற்கும் அப்போதிருந்தே அறுபடாத சனநாயகத் தொடர்பு கொள்கைக் கூட்டாக உருவாகியிருந்து என்பதே வரலாறு.
வரலாற்றில் நடந்தவைகளை சிலவற்றை மறப்பதும் மறைப்பதும் அறிவார்ந்த செயலாகாது என்பதை உணர்த்த வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply