எகிப்தை கடந்தும் தடம் பதித்த தமிழ்

பண்டைய தமிழகத்திற்கும் எகிப்திற்கும் இடையிலான கடல்வழி வணிகத் தொடர்புகளை நிரூபிக்கும் ஒரு மிகச்சிறந்த வரலாற்றுச் சான்றாக எகிப்தின் செங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள குசீர் அல்-காதீம் (Quseir al-Qadim) மற்றும் பெரெனிகே (Berenike) போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்ட தமிழி கல்வெட்டுகள் நமக்கு கிடைத்துள்ளன.

சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில் ‘சிகை கொற்றன்’, ‘சாதன்’, ‘கீரன்‘ மற்றும் ‘பணைகொற்றன்’ போன்ற தூய தமிழ்ப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது; இது மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) உள்ளிட்ட முக்கிய வர்த்தகப் பாதைகளில் தமிழர்களின் நடமாட்டத்தை உறுதிப்படுத்துகிறது.

ரோமானியப் பேரரசுடன் மிளகு, வாசனைப் பொருட்கள் மற்றும் ஆபரணக் கற்களை வணிகம் செய்யச் சென்ற தமிழ் வணிகர்கள், செங்கடல் வழித்தடத்தைப் பயன்படுத்தி எகிப்தியத் துறைமுகங்களில் தங்கிச் சென்றதை இவை பறைசாற்றுகின்றன உறுதிப்படுத்தியுள்ளன.

எகிப்தியப் பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த எழுத்துச் சான்றுகள், ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற சொற்றொடருக்கு ஏற்ப, சங்க காலத் தமிழர்கள் ஆழ்கடல் பயணங்களில் திறம்ப்பெற்று விளங்கியதையும், உலகளாவிய வணிக வரைபடத்தில் தமிழர்கள் ஒரு தவிர்க்க முடியாத மையப்புள்ளியாக இருந்ததையும் வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளன.

எகிப்தின் குசீர் அல்-காதீம் மற்றும் பெரெனிகே பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துக்கள் கி.பி. 1-ம் நூற்றாண்டு முதல் 2-ம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்தவை (சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையவை). இது தமிழகத்தில் சங்க இலக்கியங்கள் செழித்தோங்கிய காலத்தோடு மிகச்சரியாகப் பொருந்துகிறது. குறிப்பாக, இந்தப் பானை ஓடுகளில் உள்ள எழுத்து வடிவம், தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் அல்லது கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எழுத்து அமைப்போடு நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளது.

தமிழக வணிகர்கள் அரபிக்கடல் மற்றும் செங்கடல் வழியாக மேற்கொண்ட பயணம் ‘மழைக்காலக் காற்று’ அல்லது பருவக்காற்று (Monsoon Winds) நுட்பத்தைச் சார்ந்திருந்தது. தமிழகத்தின் மேற்கு கடற்கரைத் துறைமுகங்களான முசிறி (சேர நாடு) மற்றும் தொண்டி , மற்றும் கிழக்கு கடற்கரையின் புகார் (சோழ நாடு). வணிகர்கள் பருவக்காற்றின் உதவியுடன் அரபிக்கடலைக் கடந்து, ஏடன் வளைகுடா வழியாகச் சென்று செங்கடலின் எகிப்தியக் கரையை அடைந்தனர்.

பெரெனிகே (Berenike) துறைமுகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் மிளகு மூட்டைகளுடன் கூடிய பானைகளும், தமிழ்-பிராமி எழுத்துக்களும் கிடைத்தன. குசீர் அல்-காதீம் (Quseir al-Kadim / Myos Hormos) உரோமானிய காலத்தில் இது மிக முக்கியமான வணிக மையமாக திகழ்ந்துள்ளது.

இத்துறைமுகங்களில் இறக்கப்படும் பொருட்கள், ஒட்டகங்கள் மூலம் பாலைவனத்தைக் கடந்து நைல் நதி கரையில் உள்ள ‘கோப்டோஸ்’ (Coptos) நகருக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து படகுகள் மூலம் அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தை அடைந்து, இறுதியாக உரோமானியப் பேரரசுக்கு (இன்றைய இத்தாலி) சென்றடைந்தன.

தமிழகத்திலிருந்து மிளகு (யவனர்கள் இதை ‘கருப்புத் தங்கம்’ என அழைத்தனர்), முத்துக்கள், வைரம், சந்தனம், யானைத் தந்தம் மற்றும் பருத்தி ஆடைகள் ஏற்றுமதியாக சென்றுள்ளன அதே நேரம் தங்கம், WINE மற்றும் செம்பு தமிழநாட்டிற்கு வந்துள்ளன.

வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள ‘முசிறி பாப்பிரஸ்’ (Muziri Papyrus) என்ற ஆவணம், ஒரு தமிழ் வணிகருக்கும் எகிப்திய வணிகருக்கும் இடையே நடந்த பிரம்மாண்டமான மிளகு வணிக ஒப்பந்தத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது.

சங்க இலக்கியப் பாடல்களில் ‘யவனர்கள்’ (கிரேக்க-உரோமானியர்கள்) பற்றி வரும் குறிப்புகளுக்கு இந்த எகிப்தியக் கண்டுபிடிப்புகள் ஒரு நேரடித் தொல்பொருள் சான்றாக அமைந்துள்ளன.

தமிழர்களின் தமிழ் மொழியிம் உலக வரலாற்றில் இன்னும் ஒரு வலுவான இடம் நோக்கி சென்றுள்ளது பெரு மகிழ்ச்சி. புவி எங்கும் ‘தமிழின்’ புகழு பரவட்டும்!!

அ.முத்துக்கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *