தோட்டத்திலமர்ந்து
நானும் குட்டிமகளும் வீட்டை
வரைவதென்று தீர்மானித்தோம்
ஓடிப்போய் கிரையான்ஸ்களையும்
இரண்டு பென்சில்களையும்
வெற்றுத்தாள்களையும் எடுத்துவந்தாள்
மும்முரமாய்
வரையத் தொடங்கினோம்
அரைமணி நேரத்தில்
வரைந்துமுடித்தேன் நான்
அந்திவரை
வரைந்துகொண்டேயிருந்தாள் அவள்
நூறு முறைக்கு மேல்
வீட்டை பார்த்து பார்த்து
ஒருவழியாய் வரைந்து முடித்தாள்
கடைசியாய் வரைந்ததை
கையில் திணித்துவிட்டு
ஒரு பட்டாம்பூச்சி பின்னே
ஓடி மறைந்தாள்
நேரம்போகாத நான்
இரண்டு ஓவியங்களையும்
ஒப்பீடு செய்யத்தொடங்கினேன்
நான் மாடி வரைந்திருந்தேன்
அவள் மாடியில்
பூந்தொட்டிகள் இருந்தன
நான் சன்னல் வரைந்திருந்தேன்
அவள் சன்னல் திறந்திருந்தது
நான் தாழ்வாரம் வரைந்திருந்தேன்
அவள் தாழ்வாரத்தில்
ஒரு புறா நின்றிருந்தது
நான் வெளியில் தொங்கும்
கிளிக்கூண்டை வரைந்திருந்தேன்
அவள் கூண்டிலிருந்து கிளி பறந்திருந்தது
நான் வாசல் வரைந்திருந்தேன்
அவள் வாசலில்
கோழி இரைக் கொத்தியிருந்தது
நான் வரவேற்பறையில்
புத்தர் சிலையை வரைந்திருந்தேன்
அவள் புத்தர் தலை மேலே
மரமொன்று இருந்தது
நான் கொட்டகையில்
பசு வரைந்திருந்தேன்
அவள் கொட்டகையில்
கன்று பால் குடித்திருந்தது
நான் வாசல் மலரொன்றை
வரைந்திருந்தேன்
அவள் மலரில்
பட்டாம்பூச்சி தேனெடுத்திருந்தது
நான் தோட்டம் வரைந்திருந்தேன்
அவள் தோட்டத்தில்
வெள்ளாட்டுக்குட்டி துள்ளியிருந்தது
நான் துளசி மாடம் வரைந்திருந்தேன்
அவள் துளசி மாடத்தையென்
மனைவி சுற்றிக்கொண்டிருந்தாள்
நான் முற்றத்தை வரைத்திருந்தேன்
அவள் பரணில் கிடக்கும்
அப்பாவின் சாய்வுநாற்காலியை
அங்கே நகர்த்தியிருந்தாள்
நான் திண்ணை வரைந்திருந்தேன்
அவள் திண்ணையில் ஓரமாய்
அப்பா முடங்கிக்கிடந்தார்
நான் சன்னலில் தொங்கும்
அப்பாவின் கைத்தடியை
வரைந்திருந்தேன்
அவள் கைத்தடிக்கு பக்கத்தில்
அப்பாவின் மூத்திரப்பையையும்
ஒரு காலித்தட்டையும் கவிழ்த்திருந்தாள்
நான் கவனித்ததையெல்லாம்
வரைந்திருந்தேன்
அவள் யாரும் கவனிக்காத
அப்பாவின் தனிமையை
வலிக்குழைத்து பூசியிருந்தாள்
இப்போது அவள் வரைந்திருக்கும்
ஓவியத்தில் என்னை ஏக்கமாய்
பார்க்கிறார் அப்பா
அருகிலிருக்கும் மூத்திரப்பைக்குள்
சொட்டுகின்றன
என் கண்ணீர்த் துளிகள்….
துளசி வேந்தன் கவிதைகள்

Leave a Reply