தமிழ்நாட்டின் வளங்களையும், வரலாற்றையும் ஒரு சேர அழிக்கும் முயற்சி.
ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம். அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர்மலைக்கருகே 2015.51 எக்டரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 2015.51 எக்டர் பகுதியில்தான் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக(Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி அமைந்துள்ளது. தமிழ் நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலை இச்சுரங்கத்தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. பெருங்கற்காலத்தைச் (megalithic) சேர்ந்த அமைவுகள், 2200 ஆண்டுகளுக்கு முந்தய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக்கோயில்கள் என தமிழ்நாட்டு வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களை தாங்கி நிற்கும் இடம் .

குளங்கள், நீர்சுனைகள், ஊற்றுகள், தடுப்பணைகள், பறவைகள், விலங்குகள் என தொல்தமிழர் வரலாற்று மற்றும் உயிர்ப்பன்மையமிக்க பகுதியாக அரிட்டாபட்டி விளங்குகிறது. அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமானது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ளது. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன.

இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டிலியலிட்டு அதை ஏலப்பட்டியலில் சேர்த்ததே தவறு. கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது . தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை அழித்தொழிக்கும் வகையில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015.15 எக்டர் பரப்பிலான பகுதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஏல நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாதென வலியுறுத்துகிறேன். Kishan Reddy Gangapuram Chief Minister of Tamil Nadu Thangam Thenarasu – தங்கம் தென்னரசு.

Leave a Reply