அதிகாரமும் தமிழ்ப்புலமையும் ந. கோவிந்தராஜன் 2

சமக்கிருத , வேதச் சார்பு கொண்ட ஆசியவியல் கழகத்தின் சிந்தனை முறைக்கு எதிராக எல்லீசால் நோற்றுவிக்கப்பட்ட சென்னைக் கல்விக் கழகமும் அதனையொட்டி அறியப்பட்ட தமிழ்ப்புலமை மரபும் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய சமூக வரலாற்றின்தொடர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

சமக்கிருத கற்பித்தலை விட தமிழ்க் கற்பித்தல் எந்தத் தடையும் புறக்கணிப்பும் இல்லாத ஒன்றாக இருந்த்து என்பதே சென்னைக் கல்விக் கழகத்தில் கல்வி பயின்ற ஆங்கிலேய அதிகாரிகளின் படிப்பினை.

புனிதமென கருதப்பட்டு பார்ப்பனிய ஆதிக்கத்தையும் கொண்ட சமக்கிருத மொழியை மிலேச்சர்கள் கற்றுகொள்ள இயல்பானதாக இல்லை . தமிழ் புனிதம் எதையும் கருதாத எளிதாகக் கற்பிக்கப்பட்டாலும் தமிழில் உருவாகிய புலமை மரபு பழமைவாதத்தையும் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினர் கல்வி கற்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

சென்னைக் கல்விக் கழகத்தில் கல்வி பயில விண்ணப்பித்த பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 1830 களில் சாதித் தடையின் காரணமாக கல்வி கற்க இசைவு வழங்கப்படவில்லை.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல தமிழ்நூல்களைப் பதிப்பித்த உவேசா வின் தமிழாசிரியர் வித்துவான் மீனாட்சி சுந்தம் பிள்ளை நந்தன் வரலாறு நூலுக்கு மதிப்புரை எழுதித் தர மறுத்தார்.
பார்ப்பன – சைவ – வேளாள – முதலியார் – அகமுடையார் சாதிகள் தங்களைத் தமிழ்ப் பலமை மரபோடு அடையாளம் கண்டு கொண்டாலும் அவை சாதி ஏற்றதாழ்வு தடித்தனத்தைக் கொண்டே இயங்கி வந்தது.

இத்தகைய தமிழ்ப் புலமை மரபு எனும் உயர்குடி ஆதிக்க மரபுக்கு எதிரான ஒரு எதிர்ப் புலமை மரபும் தமிழில் நீண்ட காலம் மக்கள் மரபாக இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்திதாசப் பண்டிதர் , அத்திபாக்கம் வெங்கடாசலானார் என அதற்கோரு வலுவான அடித்தளமும் இருந்துள்ளது.

இத்தகைய எதிர்ப் புலமை மரபின் தொடர்ச்சியாகவே தான் தமிழில் குடியரசு இதழ் பெரியாரால் தொடங்கப்பட்டது. சாதி பேதமும் , தமிழ்ப் புலமைச் செறுக்கும் மிகுந்த சூழலில் பெரியார் தமிழ் வெகு மக்களின் உரிமைக் குரலாக குடியரசை நடத்தினார். முறையான கல்வித் தகுதி என்று சொல்லக் கூடிய எந்தத் தகுதியும் கொண்டிருக்காத போதிலும் 20 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பன – வேளாள கூட்டிற்கு எதிரான தமிழ் வெகு மக்கள் புலமை மரபொன்றை மக்கள் மரபாக வளர்த்தெடுத்தார்.

கண்டறியப்படாத அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் போன்றோரின் நூல்களைக் கண்டறிந்து தரும்படி குடியரசு இதழில் விளம்பர அறிவிப்பை வெளியிட்டார். திருக்குறளுக்கு மாநாடு கூட்டினார். இந்தி ஆநிக்கத்தினை எதிர்த்து மயிலையாரை வைத்து கலகக் குரல் எழுப்பினார்.

20 ஆம் நூற்றாண்டில் இயங்கிய திராவிடம் ° தமிழ் இயங்கியலைப் புரிந்துகொள்ள அதனுடைய சமூக வகிபாகித்தை அறிந்துகொள்வது முதன்மையானது.
இது ஏதோ சொற்ப் புரட்டு விளையாட்டு தொடர்புடையது கிடையாது. இப்பொழுது திராவிடம் என்ற சொல்லாட்சி தமிழ் இலக்கியங்களில் எங்கே இருக்கிறது என்ற கேள்வியை எந்தக் கூச்சமும் இல்லாமல் எழிப்புகின்றனர். குடியாட்சி சனநாயகம் என்ற கருத்தாக்கம் கூட எந்தத் தமிழ் இலக்கியங்களிலும் இல்லை அதற்காக அதன் புத்துலக அரசியல் கோட்பாடட்டை ஏற்காமல் விட்டுவிடுவோமா?

தமிழ்ப் புலமை மரபையும் 19 ஆம் நூற்றாண்டில் அது இயங்கிய முறையையும் விளங்கிக் கொள்ளாமல் மட்டையடி ஆய்வுப் புலவர்களால் திராவிடம் = தமிழ்க் கோட்பாட்டு பின்னணியைப் புரிந்துகொள்ள முடியாது.

திராவிட கருத்தாக்க வெறுப்பாளர்கள் சிலருக்கு எல்லீசு மீது காதல் மலரத் தொடங்கியிருக்கிறது. உண்மையில் கால்டுவெல்லுக்கு முன் திராவிட மொழிகள் எனும் கருத்தாக்கத்தை முன் மொழிந்தது எல்லீசு தான் என்ற உண்மையையும் அவர்கள் பொய்யாக மறைத்து வருகிறார்கள். எல்லீசு திராவிட மொழிகள் என்ற கருத்தாக்கத்திற்கு அடித்தளம் இட்டவர் என்ற போதிலும் எல்லீசு கட்டியமைக்க விரும்பியது அதிகாரமும் தமிழ்ச் செறுக்கும் கொண்ட ஒரு ஆதிக்க தமிழ் மரபேயாகும் என்பதே வரலாறு.

குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *