திராவிடம் – தமிழ் எனும் உரையாடலை முன்வைத்து ஒரு வலுவான எதிர்க்கருத்துப் பரப்புரை நடந்து வரும் வேளையில் நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி எனும் காலனிய ஆய்வாளர் , கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியை ஒரு தொடக்கப் புள்ளியாக எடுத்துக்கொண்டு 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ப்புலமை மரபு எவ்வாறு செயல்பட்டது என்பது பற்றி பேராசிரியர் ந. கோவிந்தராஜன் நிகழ்த்தியிருக்கும் உரையாடல் நிகழ்காலப் பொருத்தமுடையது.
திராவிடம் எனும் கருத்தாக்கம் குறித்தும் , திருவள்ளுவர் குறித்தும் கிண்டியார் காலனியச் சதி எனும் பெயரில் கட்டவிழ்த்துவிடும் உரையாடலுக்குப் பின்னுள்ள ஆழமான தமிழ்ப் புலமை மரபை அழிக்கும் கெடுநோக்கை விளங்கிக்கொள்ள ஒரு கையேடாக தமிழ் ஆய்வுலகத்திடம் இருக்க வேண்டிய நூல்.
18 ஆம் நூற்றாண்டின் காலனிய வரலாற்று எழுதுமுறை ஆரிய மேலாதிக்கத்தையும் மனு போன்ற பார்ப்பனிய வருணக் கோட்பாட்டுச் சட்ட நூலையும் உயர்த்திப்பிடித்த காலத்தில் தென்னகம் வந்த கீழைத்தேய ஆய்வாளர்களின் கண்ணுக்குத் தட்டுப்பட்டது தமிழ்ப்புலமை மரபு என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சைவ மடங்கள் அல்லாது அவற்றிலிருந்து விடுபட்ட அவைதீக நூல்களும் அறநூல்களுமேயாகும்.
இத்தகைய ஆய்வு மரபைக் காலனிய ஆட்சியாளர்கள் கைக்கொள்ளும் வகையில் ஒரு மக்கள் சார் புலமை மரபு ஒன்று தமிழில் இயங்கிக் கொண்டிருந்தது என்பதை இனங்காண முடிகிறது.
அயோத்திதாசப் பண்டிதரின் தாத்தா கந்தப்பனார் திருக்குறள் ஓலைச் சுவடிகளை எல்லீசுக்கு வழங்கியதும் எல்லீசுக்கு முன் ஆங்கிலத்தில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கிண்டர்ஸ்லி திருக்குறளுக்கு வழமையான உரை எழுதிய உரையாசிரியர்களிடம் இருந்து வேறுபட்டு சமண அவைதீக உரைநடை மரபைப் பின்பற்றியவர்களிடம் இருந்து தனது மொழிபெயர்ப்புக்கான ஏந்துகளைப் பெற்றதும் தற்செயலானதாகக் காண முடியவில்லை.
பண்டிதரின் திராவிட – தமிழ் வரலாற்று வரையியலுக்குப் பின்னுள்ள பழமையான தமிழ் மரபின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அண்மையில் ஒரு கவிதையைத் துணுக்கைப் படிக்க நேர்ந்தது ” திராவிடன் என்றாய் , தமிழன் என்றால் சரி என்றேன் என்பதாக அந்தக் கவிதை. அதைப் பலரும் பெரிய விமர்சன மரபை அடையாளங் கண்டதுபோல பகிர்ந்ததைக் காணும் போது தமிழ் எவ்வாறு ஒடுக்கப்பட்டோரின் மொழியாக கலகஞ்செய்வோரின் கருவி மொழியாக இயங்கியிருக்கிறது என்ற அடிப்படைப் புரிதல் அற்ற கவிதைத் துணுக்கு என்பதற்கு இந்த நூல் தக்க சான்று.
வரலாற்றில் நடந்தவற்றை தன் விருப்பங்களுக்கேற்ப கட்டுக்கதைகளாக எழுதுகிற , பாவிக்கிற வரலாற்று உணர்வற்ற தமிழ்த் தலைமுறையை இந்த நூல் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.
திராவிடம் – தமிழ் எனும் உரையாடலை பெரியாரின் எழுத்துகளை மட்டும் வைத்து விளக்கிவிட முடியாது. அவரைப் பொறுத்து சமூக மாற்றத்திற்குத் தேவையான ஓர் அடையாளச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டார். தமிழ்ப்புலமை மரபு வரலாற்றறிவு வேண்டும். ஒடுக்குமுறைக்கு எதிரான நீண்ட மரபின் தொடர்ச்சியாகத்தான் இருபதாம் நூற்றாண்டின் பெரியார் இயக்கத்தை அதன் திராவிடம் எனும் அடையாள உருவாக்கத்திற்கான அரசியலை விளங்கிக் கொள்ள முடியும் .
நிகழ்காலத்தில் நடைபெறும் திராவிடம் = தமிழ் உரையாடலுக்கு மிகப்பெரும் பங்களிப்பை பேராசிரியர் ந. கோவிந்தராஜன் ஆற்றியிருக்கிறார். அதனைத் தக்கோர் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply