=========================================
பிரிட்டீஷ் இந்தியாவின் பழமையான டிரேடிங் நிறுவனம் தான் BBCTL . பர்மாவை அடிப்படையாகக் கொண்டு ஸ்காட்லாந்தின் வாலஸ் உடன்பிறப்புகளால் தொடங்கப்பட்டது. பர்மாவில் இருந்து பாம்பேவிற்கு தேயிலை மற்றும் தேக்கு அனுப்பும் புகழ்பெற்ற நிறுவனமாக வளர்ந்தது.
பின்னர் தென்னிந்தியாவை அடிப்படையாகக் கொண்டு தனது காப்பி மற்றும் தேயிலை தோட்டப் பயிர்களைப் பயிரிடும் நிறுவனமாக வளர்ந்தது.
இந்நிறுவனம் 1929 இல் சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்குப் பெற்று மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தை உருவாக்கியது.
நுஸ்லி வாடியா இன நிறுவனத்தின் முதன்மையான உரிமையாளர்களில் ஒருவர். இந்நிறுவனத்திற்கு ஆனைமலைத் தொடர் , கர்நாடகாவின் கூர்க் , நீலமலை போன்ற இடங்களில் தேயிலை மற்றும் காபித் தோட்டங்கள் உண்டு.
பிரிட்டீஷ் இந்தியாவில் பண்ணையடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்த பிறகு 1900 களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பஞ்சங்களின் விளைவாகவும் மலிவான கூலிக்கு அடிமைகளாக தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டனர். ஒருபுறம் பஞ்சம் மறுபுறம் சமூக ஒடுக்குமுறை என துரத்தும் கொடுமைகளில் இருந்து தப்பிக்க ஒடுக்கப்பட்ட , பின்தங்கிய சமூக மக்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாய் வடிவெடுத்தனர்.
புதுமைப்பித்தனின் ‘ துன்பக்கேணி ‘ சி.சு. செல்லப்பாவின் ‘குற்றப்பரம்பரை ‘ ஆகிய கதைகள் காலனிய இந்தியாவில் புலம்பெயர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரத் தை எடுத்தியம்பிய இலக்கியப் பதிவுகள்.
குற்றப்பரம்பரைச் சட்டம் வந்த பிறகு அதில் இருந்து தப்பிக்கவும் அந்தச் சட்டப்படி அமைக்கப்பட்ட ( செட்டில்மெண்ட் ) குடியேற்றங்கள் எனும் வரையறைப்படி அமைந்த தோட்டப் பண்ணைகளும் தென் தமிழ்நாட்டு மக்களை பெருமளவு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக்கியது. தகரத்தால் வேயப்பட்ட செட் வீடுகள் காலனிய தொழிலாளர் துயரத்தை நமக்கு இன்றும் எடுத்துக் கூறுகின்றன.
BBTCL நிறுவனத்தோடு தமிழ்நாடு அரசு நடத்திய சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்திருக்கும் நிலப்பகுதி தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கு கட்டுப்பட்ட இடமாக உறுதிசெய்யப்பட்டது. மேலும் அப்பகுதி புலிகள் சரணாலயமாகவும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 2028 ஆம் ஆண்டோடு 99 ஆண்டுகள் குத்தகை முடிய இருக்கிறது. ஆனால் அதுவரை தமிழ்நாடு அரசு பொறுக்கத் தேவையில்லை . தேவையெனில் BBTCL ஐ வெளியேற்றிவிட்டு மாஞ்சோலைத் தோட்ட நிலங்களைக் கையகப்படுத்தும் உரிமை
தமிழ்நாடு அரசுக்கு உண்டு என்பதாக எக்ஸ்பிரஸ் செய்தி இதழின் செய்திக் குறிப்பு கூறுகிறது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் தேயிலைத் தோட்டத்தில் தங்களுடைய உழைப்பைக் கட்டிய மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு வெறும் 5 இலட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கிவிட்டு BBTCL வெளியேற இருக்கிறது. கடந்த நூறு ஆண்டில் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக தொழிலாளர் உழைப்பில் பெற்ற நிறுவனம் வெறும் 5 இலட்சத்தை இழப்பீடாக வழங்கிவிட்டு ஓட நினைப்பது முற்றிலும் ஏற்கத்தகாத நடைமுறை.
மேலும் தேயிலைத் தோட்ட வாழ்வியலையும் உழைப்பையும் நம்பியே வாழ்ந்து பழகிய மக்களை திடீரென மலையை விட்டு வெளியேறச் சொல்வதில் எந்த நியாமும் அரசுகளிடமும் இல்லை.
1962 சாஸ்திரி – மாவோ ஒப்பந்தப்படி இலங்கையில் குடியேறிய தமிழ்த் தேயிலைத் தொழிலாளர்களுக்கு இலங்கை அரசு குடியுரிமை மறுத்த பிறகு கிட்டதட்ட ஒரு மூன்று இலட்சம் பேர் இலங்கையில் இருந்து பெயர்க்கப்பட்டு தமிழ்நாட்டின் நீலமலை , வால்பாறை போன்ற தேயிலைத் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர். தமிழ்நாடு அரசு அவர்களுக்காக TANTEA தோட்டப் பண்ணைகளை உருவாக்கியது.
இன்றைக்கு அந்த உதவிகள் கூட இல்லாத நிலைக்கு மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உள்நாட்டிலே புலம்பெயர்ந்த மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய மறுவாழ்வு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். பல கோடி ரூபாய் அன்னியச் செலவாணி வரும் தேயிலைத் தோட்டத் தொழில் பண்ணையைத் தமிழ்நாடு அரசே நடத்துவதன் வழி தொழிலளர்களுக்கு பெருமளவு உதவிடவும் தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்கிடவும் முடியும்.
அதே நேரத்தில் BBTCL நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீட்டுத் தொகையை மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறோ ம்
தகவல் உதவி – வழக்குரைஞர் பினாயகசு
(மனசெல்லாம் மாஞ்சோலை நூலின் ஆசிரியர்)
+ There are no comments
Add yours