பாஜகவின் கியாரண்டி கார்டு : வேலை வாய்ப்பு

1 min read

2014ல் பாஜக தேர்தலை சந்தித்த போது வருடம் தோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்பதுவே அவர்களின் முக்கிய முழக்கங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அந்த திசையில் அவர்கள் என்ன செய்தார்கள்??

இன்றைய தேதியில் மத்திய அரசின் 30 லட்சம் வேலையிடங்கள் காலியாக உள்ளது, பொதுத் துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுடன் சமூக நீதியான வேலைவாய்ப்புகள் எல்லாம் என்னவாயின, டஜன் கணக்கில் பொதுத் துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தன்னுடைய நண்பர்களுக்கு விற்பனை செய்தார் மோடி, பதிலுக்கு தேர்தல் பத்திரங்களின் வழியே கொழுத்து நின்றன கட்சியின் வங்கிக் கணக்குகள்.

விவசாயம் சார் வேலைவாய்ப்புகளிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகளில் உற்பத்திப் பொருட்களுக்கு அடிப்படை விலை கூட கிடைக்காததால் தான் அவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். அப்படி அவர்கள் போராடுகையில் விலை கிடைத்தால் தானே நாங்கள் நல்ல கூலியை எங்கள் வயல்வெளிகளில் உழைப்பவர்களுக்கு கொடுக்க இயலும் என்று பேசியது எல்லாம் நினைவுக்கு வருகிறது. இன்றைக்கும் விவசாய வேலை செய்யும் ஒருவருக்கு குஜராத்தில் நாள் ஒன்றுக்கு கூலி என்பது ரூ.241 அதாவது தேசிய சராசரியில் இருந்து 100 ரூபாய் குறைவாகவே குஜராத்தின் கூலி வேலை செய்பவர் பெறுகிறார். மத்திய பிரதேசத்தில் இது இன்னும் குறைவு, அங்கே ஒருவர் ரூ.221 மட்டுமே பெறுகிறார். தமிழகத்தில் ஒருவர் சாராசரியாக ரூ.460 பெறுகிறார், கேரளாவில் 764 பெறுகிறார். இப்பொழுது உங்களுக்கு குஜராத் மாடல் என்றால் என்னவென்றும் ஏன் வட இந்தியாவில் இருந்து கூலி வேலைக்கு ஆட்கள் தமிழ்நாடு-கேரளா நோக்கி வருகிறார்கள் என்றும் புரியும்.
2014 க்கு முன்பு வரை மோடி 100 நாள் வேலைத் திட்டத்தை எதிர்த்து அதனை கேவலப்படுத்தி மேடை தோறும் பேசிவந்தார், ஆனால் அதே நேரம் உலகின் பெரும் பொருளாதார /வறுமை ஒழிப்பு சார் அறிஞர்கள் பலர் இந்த திட்டம் மிக முக்கியமானது என்று கூறி வந்தார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் இதனை எதிர்ப்பது முட்டாள்தனம் என்பதை உணர்ந்தார், இருப்பினும் மெல்ல மெல்ல அதன் நாட்களை குறைத்துக் கொண்டே வருகிறார், கடந்த ஆண்டுகளில் இது 50 நாட்கள் என்கிற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு என்கிற அறிவிப்பால் சிறு குறு தொழிகள் நசிந்தன, நாட்டில் 50 லட்சம் வேலைகள் ஒரே நொடியில் காணாமல் போயின, இதன் பிறகு வந்த ஜி.எஸ்.டி இன்னும் மிச்சமிருந்த உதிரி வேலைவாய்ப்புகளை பதம் பார்த்தது.

மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு நிமிடமும் 3 வேலையிழப்புகளும், அதாவது ஒரு மணி நேரத்தில் 180 பேர் வேலையிழந்து கொண்டேயிருக்கிறார்கள், இதனைத் தான் JOBLESS GROWTH என்கிறோம்.
ரயில்வே துறையில் விபத்துகள் நாள்தோறும் நடப்பது சகஜமாகிவிட்டது, கோடிக்கணக்கான பயணிகள் தினசரி தங்களின் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது, ஆனால் அங்கே இருக்கும் காலி வேலையிடங்களுக்கான அறிவிப்புகளைக் கூட வெளியிட மனமில்லாமல் இருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேசன்களில் மோடியின் உருவம் பொறித்த செல்ஃபி பூத்துகள் வைக்க மட்டும் 625 கோடி செலவிட்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த இயலவில்லை ஆனால் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருந்து காண்டிராக்ட் கூலிகளாக மக்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வருகிறார்கள். 60,000 பேர் அடிமாட்டு கூலிக்கு இஸ்ரேலுக்குச் செல்கிறார்கள், உலகின் எல்லா நாடுகளுமே ஒரு போர் சூழலில் இருக்கும் நாடுகளில் இருந்து தங்கள் மக்களை வெளியேற்றுகிற நேரம் மோடி இந்தியர்களை இஸ்ரேலுக்கு கூலி வேலைக்கு அனுப்புகிறார்.

ஏற்கனவே வேலைகளின்று உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு உழவாரப் பணி செய்ய ஒரு பெரும் கூட்டம் சென்றுள்ளது. போர்ச் சூழல் நோக்கி நாட்டு மக்களை அனுப்பியது, அனுப்பிக் கொண்டிருப்பதுமே மோடி ஆட்சியின் பெரும் சாதனை.

வேலைவாய்ப்புகள் ஒன்றும் வாயில் சுடும் வடையில்லை அதற்கு கடுமையான அக்கறை வேண்டும், ஒரு தேசத்தின் மீதும் அதன் மக்களின் மீது காதல் வேண்டும்.

வேலைவாய்ப்புகளுடன் கூடிய வளர்ச்சி இல்லை எனில் தேசம் இன்னும் இருளுக்குள் செல்லும் என்பதுவே உலகின் அனுபவம்….

எழுத்தாளர் :

அ . முத்துகிருஷ்ணன்

You May Also Like

+ There are no comments

Add yours