ஆர்எஸ்எஸ் – பாஜக முட்டலும் பிளவும் ஏன்?

1 min read

மோடியின் மூன்றாவது முறை பதவியேற்பைத் தொடர்ந்து பாஜகவை வழிநடத்தும் பாசிச சித்தாந்த அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத் மோடியின் தேர்தல் பரப்புரையின் மீது கடுப்புற்றிருப்பதாக அவருடைய உரை குறிப்பிடுகின்றது.

குறிப்பாக அளவுக்கு மீறிய பொய்ப் பரப்புரையையும் , முசுலீம் வெறுப்பும் இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மீது போர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் மோடி அரசு மணிப்பூரின் மீது கவனமின்மையுடன் செயல்பட்டதாகவும் பகவத் குறிப்பிட்டிருக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களைக் குறிவைத்து ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் கடும் உழைப்பே பாஜகவுக்கு தேர்தல் வெற்றிகளை வழங்கியிருக்கிறது என பெயர்போன சங்கியும் பாஜகவின் தலைவருமான ராம் மாதவ் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

அவர்களுடைய கடும் உழைப்பு என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புப் பரப்புரையின் மூலம் பழங்குடி மக்களை ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்த வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதுமேயாகும். அரம்பை தெங்கோல் போன்ற மெய்டே அமைப்புகள் ஆர்எஸ்எஸ்ஸால் சித்தாந்த ஊக்கம் பெற்றவை என்பதை மறுக்க முடியாது.

அடுத்து மோடியின் முசுலீம் வெறுப்புப் பரப்புரையை மறைமுகமாகச் சாடுவதாக வெளிவந்திருக்கும் பகவத்தின் கூற்றும் கோல்வால்கார் , சவார்க்கர் போன்ற முசுலீம் வெறுப்பாளர்களிடம் இருந்து மோடி கடன் பெற்றவையேயாகும்.

மோடியின் வெகு மக்களிய இந்துத்துவ அடையாளத்தால் ஆர்எஸ்எஸ்ஸும் ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தம் , அமைப்பு வலிமையால் பாஜகவும் பயன்பெற்றிருந்த போதும் தற்போது உருவாகியிருக்கிற மோதலின் பின்னணியை ஆராய்வோமெனில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு மேலானவர்களாக குஜராத் ஆட்டக்காரர்களின் செல்வாக்கு பாஜகவில் உச்சம் தொடுவதும் தங்களுடைய சித்தாந்த அமைப்புக்கு மேலானவர்களாக தனிநபர்கள் உருவாவதும் ஆர்எஸ்எஸ்ஸால் விரும்பப்படாதவை.

இன்னும் தெளிவாகச் சொன்னால் பாஜக எப்பொழுதெல்லாம் மதச்சார்பின்மை , மென்மையான இந்துத்துவ சித்தாந்தம் போன்ற வேடங்களை தேர்தலில் வெற்றி பெறவும் வெகு மக்களின்
வாக்குகளைப் பெற தீவிர இந்துத்துவத்தில் இருந்து தணிந்த போதெல்லாம் ஆர்எஸ்எஸ் பாஜகவை கண்டித்து வந்தது.

அத்வானி பாகிஸ்தான் சென்றிருந்த போது ஜின்னாவை புகழ்ந்து பேசினார் , பாபர் மசூதி இடிப்பு ஒரு துயர நிகழ்வு என்று பேசிய ஒரே காரணத்திற்காக பாஜகாவால் ஆர்எஸ்எஸ்ஸால் தூக்கியெறியப்பட்வர்.
அப்போதிருந்தே பாஜகவின் புதிய தலைமைக்கான அடித்தளத்தை குஜராத் தலைவரான மோடியை வைத்து நிரப்ப முடிவெடித்தது. குசராத் படுகொலைகள் மாதிரியை ஆர்எஸ்எஸ் விரும்பியது என்பதே பாஜக தலைமைக்கும் பிரதமர் பதவிக்கும் மோடியை தேர்ந்தெடுத்ததில் இருந்தே விளங்கிக் கொள்ளலாம்.

ஆர்எஸ்எஸ் – பாஜக மோதல் என்பது ஒரு மாற்று சித்தாந்த்திற்கான மோதல் அல்ல. பாஜக எனும் வெகு மக்கள் திரள் அமைப்பை கடிவாளம் போட்டு தனது கைப்பிடியில் வைப்பதற்கான மோதல். அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதைப் போக போக பார்க்கலாம்.
பெரும்பாலும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு பாஜக அடிபணிந்த்து என்பதே வரலாறு.

எழுத்தாளர் :

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].

You May Also Like

+ There are no comments

Add yours