இந்துராஷ்டிரம் எப்படி இருக்கும் ? என்பதற்கு குசராத் ஒரு ஆய்வகமாக பயன்படுத்தப்பட்டது குறித்து கிறஸ்டோபர் சாபர்லட் எழுதி வெளியான அண்மை நூலின் பகுதிகளில் சிலவற்றை எடுத்து கேரவனில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.
குசராத் அரசு முழுவதும் மோடி – அமித்சா தலைமையில் எப்படி ஒரு கண்காணிப்பு அரசாகவும் , பஜ்ரங்தள் போன்ற சட்டப்புறம்பான கும்பல்களின் இணை அரசாட்சி முறையும் இணைந்து செயலாற்றியது என்பதனை அது விவரிக்கிறது.
குறிப்பாக இசுரத் சகான் போலி மோதல் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட குசராத் தீவிரவாத தடுப்புப்படையின் கண்காணிப்பாளராக இருந்த ஜி எல் சிங்காலிடம் இருந்து சிபிஐ கைப்பற்றிய 200 க்கும் மேற்பட்ட CDR எனப்படும் தொலைபேசி உரையாடல் தொகுப்பில் இருந்தும் , சிபிஐ யிடம் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் இருந்தும் கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன.
குசராத்தில் மோடி முதல்வராக பதவியேற்றதும் காவல்துறையின் உளவுத் தலைவருக்கு அவரும் அவருடைய உடன் உழைப்பாளரான அமித்சாவும் கொடுத்த உளவு பார்ப்பதற்கு கொடுக்கப்பட்ட பட்டியல் நாட்டின் சட்டங்களை வளைத்து தங்கள் நோக்கத்திற்கு அரசு இயந்திரங்களை இயக்கியது தெரிய வருகிறது.

2002 ல் குசராத் அரசு கொண்டுவந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் சட்ட வரைவு எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் யாரையும் உளவு பார்ப்பதற்கான அதிகாரத்தை மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளுக்கே வழங்குகிறது.
இந்தச் சட்ட வரைவு 2019 ல் தான் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாகியருக்கிறது. ஜிஎல் .சிங்கால் கூற்றுப்படி ஒரு பெண்ணை உளவு காவல்துறை முழுமையாக பின் தொடர்ந்து அறிந்துகொள்ள முடிகிறது. இது அப்போது பெரிய உரையாடலாக நடந்தது.
இதனுடைய நீட்சி தான் ஒன்றிய அரசின் பெகாசஸ் உளவுச் செயலியைப் பயன்படுத்தி மாந்த உரிமைச் செயற்பாட்டாளர்களை பொய்க் குற்றஞ்சாட்டி ஆண்டு கணக்கில் சிறைவைத்திருக்கும் நடவடிக்கையை புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல ஒன்றிய அரசு இன்றுவரை தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
Deeper state எனும் கொடுநெறி அரசின் மற்றொரு கூறு அது கும்பல் கையில் அதிகாரத்தையும் சட்டம் ஒழுங்கு – சிவில் நிர்வாகத்தையும் அரசுக்கு இணகயாக வழங்குவதாகும்.
குசராத்தில் மோடி முதல்வரானதும் பஜ்ரங்தள் நேரடியாக பல வன்முறை நிகழ்வுகளில் இறங்கியதையும் இந்நூலின் பகுதியில் இருந்து கேரவான் எடுத்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக குசராத் இனப்படுகொலையின் போது பஜ்ரங்தள்ளிடம் முசுலீம் வீடுகளின் டிஜிட்டல் வரைபடங்கள் கையில் இருந்ததாக இந்தியாவிக்கான பிரிட்டன் தூதர் பிபிசி ஆவணப்படத்தில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்ல பஜ்ரங்தள் அமைப்பின் வன்முறை தொடர்பாக அவர் பிரிட்டன் தலைமையகத்திற்கு அனுப்பிய தகவல்களும் அண்மையில் வெளியாயின.

குசராத் கலவரத்தை நிறுத்த இராணுவம் வந்தபோது அதன் காமாண்டராக இருந்தவர் உத்தீன். அவர் கூற்றுப்படி குசராத் வன்முறையை அரங்கேற்றியதில் பல இந்துத்துவ தீவிர வலதுசாரி அமைப்புகள் காவல்துறையோடு இணைந்து செயல்படும் ஹோம்கார்டில்
இருந்தனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பஜ்ரங்தள் அமைப்பின் பாபு பஜ்ரங்கி ஒரு பண்பாட்டு காவல் படையைப் போல இந்துப் பெண்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதாக லவ்ஜிகாத் கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறார். பின்னர் அவர் அதில் இருந்து விலகிவிட்டார் என்பது தனிக்கதை.
பொது சமூகத்தில் மத வெறிப்பைத் தூண்டி அச்சத்தையும் கலவரத்தையும் ஊட்டுவது வலதுசாரி இணை அரசாக செயல்படும் கும்பலின் பொது வேலை. இட்லர் தொடங்கி அனைத்து பாசிசவாதிகளும் இதுபோன் ற அரை ராணுவ சட்டப்புறம்பான கும்பலை வைத்திருந்தன ர். இவர்கள் தற்போதைய ஆட்சியில் பல்வேறு பெயர்களில் பசு குண்டர்களாகவும் பண்பாட்டுக் காவலர்களாகவும் வலம் வருகின்றனர்.
மேலும் பில்கிஷ் பானுவுக்கும் அவருடைய குடும்பத்தையும் கொடூரமாக வன்புணர்வு செய்து கொலைபுரிந்ததும் இதே போன்ற வன்முறை வெளியில் மத வெறுப்பும் ஊறிய கும்பலேயாகும். அவர்களை விடுவிக்க குசராத் அரசு ஒப்புதல் கொடுத்து விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை பாஜக பூங்கொத்து கொடுத்து வரவேற்றது.
அவர்களுடைய உறவினர்கள் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
இத்தகைய கொடுங்கோல் அரசினை எதிர்த்த அரசின் உள்ளார்ந்த மனிதநேயர்களான சஞ்சீவ்பட்டும் , ஆர்பி ஸ்ரீ குமாரும் , தீஸ்டாவும் கூட்டுச் சதியாளர்கள் என ஒன்றிய பாஜக அரசால் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறான அதிகாரங்கள் குவிந்த Deep State ஐ அமைப்பதற்கு IPC , CRPC சட்டங்களும் அண்மையில் திருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்நக்கது.
இந்த நாட்டின் சனநாயகத்தை காக்க விரும்பினீர்களானால் ஒன்றிய பாஜகவையும் அதன் கூட்டணிகளையும் தேர்தலில் தோற்கடித்தாக வேண்டும் என்பதை மறவாதீர்கள்!!
நம் காலத்தில் சிவில் சனநாயக உரிமைகள் பறிபோவதை எண்ணிப் பதற்றமடைந்துள்ள கிறஸ்டோபர் சாபர்லட் போன்றவர்களைப் போல கவலையுறுங்கள் ! எதிர்த்து நில்லுங்கள்!

குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply