காசா : மரணத்தின் பெரும் ஓலம்

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரும் போரை கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக இடைவிடாது தொடுத்து வருகிறது, இது ஏதோ அக்டோபர் 7,2023 அன்று தொடங்கிய போர் போல் காட்சியளித்தாலும் அப்படி எல்லாம் இல்லை இது 1948 முதல் இடைவிடாது நடைபெற்று வரும் போர் என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் மட்டும் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 35000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 75000 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். 24 லட்சம் பேர் நிராதரவாய் வெட்ட வெயிலில் நிற்கிறார்கள், எங்கு திரும்பினாலும் பசியின் ஓலம், மரணத்தின் ஓலம்.

உயிரை காக்கும் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள், கை கால் என உடல் உறுப்புகளை இழந்தவர்கள், புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை பல்வேறு நோய்களால் அவதிப்படுகிறவர்கள், புதிதாய் பிறந்த சிசுக்களுடன் தாய்மார்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் பசியின் அகோரப்பிடியில் சிக்கித்தவிக்கிறார்கள். ஒட்டு மொத்த உலகில் அதிகப்பட்சமாக பசித்து துடிப்பவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றால் வேறு பதிலே இல்லை அவர்கள் பாலஸ்தீனத்தின் காசாவில் தான் இருக்கிறார்கள்.

இந்த 24 லட்சம் பேருமே உள்நாட்டில் அகதிகளாக, தங்களின் வீடுகள், உடமைகளை இழந்து, நிற்கதியாய் உதவிகள் வேண்டி நிற்கிறார்கள். கத்தார், எகிப்து, அமெரிக்கா தொடர்ச்சியாக மத்தியஸ்தப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தாலும் இஸ்ரேல்-ஹமாஸ் தலைமையிடையே இன்னும் உடன்பாடுகள் எதுவும் எட்டப்பட வில்லை.

காசா என்பது நிவாரணங்களை நம்பியே உள்ள நிலம், பொதுவாக நாள் ஒன்றுக்கு 600 கண்டெயினர்கள் பொருட்கள் காசாவுக்குள் செல்லும், இதனை நம்பியே அங்கே வாழ்வு நகரும், ஆனால் அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின்னர் ஒட்டு மொத்தமாக அங்கே நிவாரணமே செல்லவில்லை. மெல்ல மெல்ல ஐநாவின் தலையீட்டால் இன்றைக்கு 150 கண்டெயினர்கள் உணவு சென்றது ஆனால் இது யானை பசிக்கு சோளப்பொறியாகவே அங்குள்ள பசியை போக்கவில்லை.

தரைவழியாக கண்டெயினர் லாரிகளை அதிகப்படுத்த இஸ்ரேல் அனுமதியளிக்காத சூழலில் பிரான்ஸ், ஜோர்தன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வான்வழியே பெரிய உணவுப்போழைகளை விமானங்களில் இருந்து காசாவின் மீது வீசினார்கள், விமானத்தில் இருந்து வெளியே வந்த சில நொடிகளில் ஒரு பாராசூட் பிரிந்து வானில் மிதந்து அந்த பேழைகள் மக்களை வந்து அடைந்தன, இது ஒரு சாகச முயற்சி என்றாலும் இதனால் பெரும் பயண ஒன்றும் ஏற்படவில்லை. ஒரு நாள் இந்த பேழை விமானத்தில் இருந்து வெளியே வர அந்த பாராசூட் விரியவில்லை அந்த பெரும் பேழை ஒரு குடும்பத்தின் மீது விழுந்து அவர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டார்கள்.

லாரிகள் மூலம் உணவு விநியோகம் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு இடத்தின் மீது இஸ்ரேல் வான்வழியே தாக்குதல் நடத்தியதில் உணவுக்காக காத்திருந்த 132 பேர் நிமிடங்களில் பிணமானார்கள். பசியில் துடித்து உணவுக்காக வரிசையில் காத்திருப்பவர்களை கொல்வது எத்தகைய நியாயம். ஐநாவின் 100க்கு மேற்பட்ட பணியாளர்களை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது.

உலக நாடுகள் பல இஸ்ரேலை கண்டித்தாலும் பயன் ஏதும் நிகழவில்லை. அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை தனது விட்டோ அதிகாரத்தை பாவித்து முறியடித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் கொஞ்சம் கணத்த வார்த்தை பிரயோகம் நோக்கி நகர்ந்துள்ளன, ஒரு வரலாற்று தருணத்தில் இஸ்லாமிய நாடுகள் ஒட்டுமொத்தமாக தோல்வியை தழுவி தலைகுனிந்து நிற்கின்றன. இந்தியா இரட்டை நாக்குடன் பேசியும் செயல்பட்டும் வருகிறது.

காசாவில் இருந்து எழும் பசியின் ஓலம், உலகின் செவிட்டு காதுகளை எட்டுமா! உலகம் முழுவதும் உள்ள ரம்ஜான் சஹர்களை எட்டுமா!!

எழுத்தாளர்

அ.முத்துகிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *