குருமூர்த்தி: ஆர்எஸ்எஸ்ஸின் நிழல் அதிகாரம் – சுஜாதா சிவஞானம்

1 min read

[ தமிழில் – பேராசிரியர் கோச்சடை ]

நூல் மதிப்புரை :

ஆர்.எஸ்.எஸ் தொடங்கி தனது நூற்றாண்டை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த நூற்றாண்டுக்குள் சட்டப்பூர்வ வழியில் இந்துராஷ்டிரம் எனும் பார்ப்பன மேலாதிக்க ராஷ்டிரத்தை அமைத்துவிட வேண்டும் என்பது அதன் இலக்கு.

சமூகத்தை வருண அடிப்படையில் மேல் – கீழ் என பிரித்து அதன் தலைமை பீடத்தை பார்ப்பன – உயர்சாதி மேலாண்மையை தக்க வைப்பது என்பது அதன் இலக்கு.
அதற்கு நவீன அரசியல் காலத்தில் பனியா முதலாளிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இன்றைக்கு இந்தியத் துணைக்கண்டத்தின் சனநாயக அரசியலுக்கு சித்தாந்த அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை விளங்கிக்கொள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளாக இயங்கும் சங்பரிவாரங்கள அமைப்புகள் பற்றிய மதிப்பீடு நமக்கு வேண்டும்.

அந்த மதிப்பீட்டை பெற இன்றைக்கு பாஜக எனும் தேர்தல் கட்சியாக இரு முறை அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கும் அதன் வரலாற்றை பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

காந்தியார் படுகொலையில் இருந்தும்;
இந்திராவின் நெருக்கடி நிலை ஆட்சியை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு ஜெயப்பிராகஷ் நாராயணன் இயக்கத்தோடு இணைந்து ஆர்எஸ்எஸ் பெற்ற வலிமையில் இருந்தும்;
இராசீவ் காந்திக்கு எதிராக தேசிய முன்னணியை பின்னணியில் இருந்து அமைத்ததும் அதன் தலைமை அமைச்சராக ஆட்சியில் அமர்ந்த விபிசிங் ஆட்சியினை மண்டல் அரசியலுக்காக கலைத்ததும்;

மண்டல் அரசியலை மடைமாற்ற இராமர் கோயில் பரப்புரையை தேர்தல் பரப்புரையாக மாற்றியதும்;
பாபர் பள்ளியை இடித்து நாட்டை இந்துத்துவ பாசிச அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வந்ததும்;

புதிய தாராளமயக் கொள்கையால் உருவான முதலாளித்திவ வளர்ச்சியினால் சாதிய சமூக இறுக்கத்தில் ஏற்பட்ட நெகிழ்வை தெங்கடியின் சுதேசி பொருளியல் எனும் பெயரில் , சுதேசி ஜக்ரான் மன்ஞ்ச் அமைப்பின் மூலம் வருணாசிரம்ப் பொருளியல் கருத்தியலைப் பரப்பி சுதேசிக் காவலனாக வேடம் போட்டதும்;

2000 களில் மீண்டும் ஆட்சிக் கட்டிலுக்கு வந்த பிறகு பெரு முதலாளிய வகுப்புகளோடும் அதன் தாராளமயக் கொள்கைகளோடு கைகோர்த்ததும்;

குசராத் இனப்படுகொலையின் தண்டனையில் இருந்து மோடி – அமித்ஷா கூட்டம் தப்பியதும்;

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை மாபெரும் ஊழல் அரசாக சித்தரித்து மோடியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த நாட்டின் உயர் பதவிகளை வகித்த ஆர்எஸ்எஸ் அதிகார வகுப்பினைக் கொண்டு பொய்ப் பரப்புரையை நடத்தியதும்;

சாதிய மூலதனம் எனும் பெயரில் சாதிகளை நிறுவனப்படுத்துவதும் , பிரித்தாளுவதும் , சாதியப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்தலும் என்பதாக தனது பார்ப்பன மேலாதிக்க வஞ்சக நலன்களுக்கு சூத்திரப் படையைத் திரட்டியதும்;

நாட்டின் பொருளியலை அழிக்கும் ஜிஎஸ்டி , பணமதிப்பு நீக்கம்; மாநிலங்களின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் திட்டக்குழுவை கலைத்து நிதி ஆயோக் கை
அமைத்ததும்; பார்ப்பன வருணப் பொருளியலையும் , குலத்தொழிலையும் பாதுகாக்கும் நோக்கில் ஆத்மநிர்பார் திட்டத்தை அறிவித்ததும்

என இந்தியத் துணைக்கண்டத்தின் மாபெரும்

அரசியல் நிகழ்ச்சிகளில் ஆர்எஸ்எஸ் திரைமறைவில் பின்னிருந்து ஓர் வலைப் பின்னலைப் போல வேலை செய்திருக்கிறது. இந்த திரைமறைவு வலைப்பின்னலின் சூத்திரதாரியாக
ஓர் அரை நூற்றாண்டு காலம் குருமூர்த்தி பின்னிருந்து வேலை செய்திருக்கிறார்.

அதோடு கோயெங்கா எனும் பனியா முதலாளியத் தொடர்பை வைத்துக் கொண்டு நாட்டின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் கருவிகளாக இந்த பார்ப்பன – பனியா கூட்டு அமைந்த வரலாற்றையும் தனது கடின உழைப்பின் மூலம் ஊடகவியலாளர் சுஜாதா சிவஞானம் தி கேரவன் ஆங்கில இதழில்
S Gurumurthy: The Sanghs Fixer எனும் கட்டுரையில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையின் தமிழ் வடிவத்தை நமது தமிழ்ப் படிப்பாளிகளுக்காக தமிழ்ப்புலம் நூலாக மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது.

இது தேர்தல் காலம் சனநாயகத்திற்குப் பகையாக நாட்டில் நடைபெறும் இந்துப் பார்ப்பனிய கும்பலாட்சியைப் புரிந்துகொள்ள இந்த நூல் பல வகையிலும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

:

குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].

You May Also Like

+ There are no comments

Add yours