முதலில் இசைஞானி இளையராஜாவை விமர்சிக்கும் அனைவரும் அவரின் இசையின் மேன்மையை குறை சொல்லவே இல்லை. நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு அவரை பாராட்டுகிறேன் பேர்வழி என்ற பெயரில் அவர் எழுந்து தேங்கிய 70 _ 90 காலகட்டத்தின் வரலாற்றை வசதியாக நறுக்கி நறுக்கி பேசுகிறீர்கள்.
சோவியத் புரட்சி மற்றும் சீனப் புரட்சியைத் தொடர்ந்து 70 களிலும் எண்பதுகளிலும் நடந்த வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்காசிய தேசங்களின் விடுதலைகள் கியூபா விடுதலை இவற்றின் பின்னணியில் இந்தியாவில் எழுந்த இடதுசாரி அரசியல் எழுச்சியின் பின்னணியில் இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழகத்தில் தென்கிழக்குச் சீமையின் ஒரு சிற்றூரில் இருந்து கிளம்பிய ஒரு இடதுசாரி இசைக் குழுவில் இருந்து வந்தவர் தான் இளையராஜா.
சோசலிச எதார்த்தவாதம் என்கிற கோட்பாடு கலை இலக்கிய உலகில் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை உண்டாக்கியது. ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்கிற குரல் உலகெங்கும் ஒலித்தது. இதன் பொதுச்சாரம் மேட்டுக்குடி கலை இலக்கிய பண்பாட்டு எதிர்ப்பு தான்.
இந்தப் பின்னணியில் உலகெங்கும் திரைப்படங்கள் நாடகங்கள் கலை இலக்கியங்கள் எழுத்துக்கள் இசை நடனம் என அனைத்தும் புரட்சிகர தாக்கம் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றுக்கும் ஒரு பொது ஒற்றுமை இருந்தது. அது மேட்டுக்குடிகளின் கலை இலக்கியத்தை தூக்கி எறிவது என்பதுதான்.

அதன் விளைவு தான் பாரதிராஜா அதன் விளைவுதான் இளையராஜா அதன் விளைவு தான் வைரமுத்து. தனி நபர்களின் சாதனைகளை வரலாறு இப்படித்தான் பிரசவிக்கிறது.
நீங்கள் படுத்துக்கொண்டு வியந்து பார்க்கும் போது இளையராஜா திரைப்படங்களுக்கு இசையமைக்கும் முன்பே திரைப்படங்களை கிராமங்களை நோக்கி கொண்டு சென்றவர்களை மண்வாசனை நோக்கி சினிமா எடுத்தவர்களை எல்லாம் வசதியாக நறுக்கி வீசிவிடுகிறீர்கள். இளையராஜாவை மட்டும் வியந்து வியந்து புரண்டு படுக்கிறீர்கள். கடைசியாக இளையராஜா இளையராஜா என்ற ஒரு பெயரை மட்டும் சொல்லிக் கொண்டு எழுந்து வருகிறீர்கள். உங்கள் வியப்பின் உள்ளே நுழையாத அந்த அணில் வால் இந்த வரலாற்றை குற்றுயிரும் குலையிருமாக நறுக்குவதில் தான் தெரிகிறது..

அன்னக்கிளி படத்தில் இயக்குனர்கள் தேவராஜ் + மோகன், கிராமத்திற்கு புதிதாக வரும் வாத்தியாரை காதலிக்கும் கதையை தேர்ந்தெடுத்த பின்னணியில் தான் இளையராஜாவை இசையமைப்பாளராக அமர்த்துகிறார்கள். இந்தக் கதைகள் மக்களின் சொந்த வாழ்க்கைக்கு நெருக்கமான கதைகளாக முதலில் அறிமுகமாகமாகின. இந்தி சினிமாக்கள் தோற்றப்புள்ளி இங்கிருந்துதான் தொடங்குகிறது. திரைப்படம் என்கிற கலை இலக்கிய இயக்கத்தின் திசை மக்களின் சமுதாயத் தேவையில் இருந்து தீர்மானம் ஆகிறது. அந்த தேவையில் இசையின் மாற்றத்தை இளையராஜா என்கிற தனி நபர் தீர்மானிக்கவில்லை. உலகின் அரசியல் நிலைமையும் பொருளாதார நிலைமையும் மக்களின் சமுதாயத் தேவையும் தீர்மானித்தது. அப்படி தொடங்கிய வரலாற்றுத் திருப்பத்தில் வந்த திரைப்பட இயக்கத்தின் ஒரு பகுதி தான் இசை. அதில் இளையராஜா சந்தேகமில்லாத இசைஞானிதான். ஆனால் கிராமத்தை நோக்கி திரைப்படத்தைக் கொண்டு சென்றவர்கள் தான் இளையராஜாவையும் அவர் குண்டான இசைக்களத்தை உருவாக்கித் தந்தார்கள் என்றும் பார்க்க வேண்டும். எனவே திரைப்படம் இசைப்பாடல் என்பது வைரமுத்து சொந்தம் சொன்னது போல் ஒரு கூட்டுப் படைப்பு.
அடுத்து இந்தி எதிர்ப்பு அரசியல் இயக்கத்தின் கலை இலக்கிய தொடர்ச்சி தான் தமிழ் சினிமாக்களிலும் கலை இலக்கியத்திலும் வந்த மாற்றங்கள். அரசியல் மாற்றங்கள் முந்தி செல்லும் போது கலை இலக்கிய பண்பாட்டு மாற்றங்கள் அதை பின்பற்றி தொடரும் என்கிற ஒரு இயங்கியல் போக்கு உண்டு. இதற்கு காலவரிசை உண்டு. இந்தப் போக்கை நறுக்கி ஏதோ ஒரு தெருவில் நமது பதிவர் நின்று கொண்டு பார்த்தபோது இந்தி எதிர்ப்பு அரசியல் அந்தப் பக்கமா போகும் போது இந்தி இசை இந்தப் பக்கமா போனதைப் பார்த்ததாக சொல்றார். நல்ல நகைச்சுவை போங்கள். இங்கு திராவிட அரசியல் எதிர்ப்பு பூநாகம் போல் படமெடுப்பதை காண முடியும்.

தவிர நல்ல நகைச்சுவையை மிக காத்திரமாக மிக நீளமாக முயற்சித்து இருக்கிறீர்கள். இசைஞானி இளையராஜாவின் தனிநபர் குறைகளை விட்டு விட்டு அவரின் சாதனைகளை வியக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கடைசிப் பகுதியில் அவருடைய அற்பத்தனங்களுக்கு எல்லாம் அரசியல் பிற்போக்கு தனங்களுக்கு எல்லாம் விடாமல் கொடி பிடிக்கிறீர்கள். அவரின் வீட்டு ஜன்னல் வழி எட்டிப் பார்க்கக் கூடாது என்று சொல்லிவிட்டு அவர் வீட்டில் உள்புற ஜன்னல் வழி நின்று கொண்டு விளக்கம் கொடுக்கிறீர்கள். சாதனையாளர்களின் ஜன்னலை எட்டிப் பார்க்காதீர்கள் என்று சொல்லிவிட்டு ஜன்னலுக்குள்ளிருந்து புதிது புதிதாக ஜல்லி அடிக்கிறீர்கள். இது ஒரு அபத்தமுரண்.
இளையராஜா என்பது இசைக்கடல்., இசைப்பிரபஞ்சம் இசை சூரியகுடும்பம் இசை பால்வெளி மண்டலம் IBM ITC IG DIG என்றெல்லாம் நீங்கள் புகழ்ந்து தள்ளுவதை கண்டு தமிழ்நாட்டில் உள்ள இளையராஜாவின் ரசிக கோடிகளில் உங்களையும் ஒருவராக சேர்த்து வாழ்த்து தெரிவிக்கிறோம். எங்களையும் பாராட்ட சொன்னீர்கள் ஆனால் நாங்களும் இப்படித்தான் புகழ்வோம்.
ஆனால் மொக்கை ரசிக கோழியாக இருந்து கொண்டு இளையராஜாவின் அரசியல் அங்கீகார பிச்சை, பிற்போக்குத்தனங்கள் பண்பாடற்ற நடத்தைகள் அம்பேத்கரை இழிவுபடுத்தல் சங்கிகளுக்கு துந்தனா வாசிப்பது எல்லாவற்றுக்கும் வக்காலத்து வாங்கும் உங்கள் ரசிக கோழியை கொஞ்சம் அடக்கி கூவ வையுங்கள்.. ரொம்ப கூவுது.
உங்களின் சாதனையை “வியக்கும்” ஆராய்ச்சி முறை கவிஞர் வைரமுத்துவை அணுகும் போது ஏனோ கடுங்காப்பி குடிக்கிறது. ஏனென்று தெரியவில்லை. அவர் கலை இலக்கிய திராவிட அணி என்பதாலா? விட்டுத் தள்ளுவோம்.
“வியந்து பார்த்தால்” தான் எந்தவொரு சாதனையாளரையும் தெரிந்து கொள்ள முடியும் என்றெல்லாம் உளறல்களை வரையறையாக்குவதை ரசிக கோழிகள் தவிர்க்க வேண்டும்.. இதற்கு நியூட்டன், ஐன்ஸ்டைனை வம்புக்கு இழுப்பது எல்லாம் மாண்டவர் வரலாற்றின் மனித உரிமைக்கு எதிரானது. அனைத்தையும் ஆராய்ச்சிபூர்வமாக விருப்பு வெறுப்பற்று பார்க்க வேண்டும் அதுவே சிறந்த ஆராய்ச்சி முறை.
சமூக செயற்பாட்டாளர்:

தங்கபாண்டியன்.
Leave a Reply