பாலினச்சமத்துவம், பகுத்தறிவு, சமூகநீதி, சாதியொழிப்பு, அறிவியல் மனப்பாங்கு சார்ந்த பாடல்களைக் கொண்டு இசைநிகழ்ச்சிகளை நடத்திவருகிறது நீலம் பண்பாட்டு மையத்தின் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழு. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்குள்ள வழிபாட்டுரிமையை அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் 2018 அக்டோபரில் வழங்கியத் தீர்ப்பை எதிர்த்து சங்பரிவார கும்பல் ரகளை செய்துவந்த நிலையில், அத்தீர்ப்புக்கு வலுசேர்க்கும் விதமாக இக்குழுவின் அப்போதைய நிகழ்வொன்றில் “ஐயாம் ஸாரி ஐயப்பா” என்கிற பாடலை இசைவாணி பாடினார்.
பழங்குடிகளின் தொல்தெய்வம்தான் பின்னாளில் ஐயப்பனாக மாற்றப்பட்டு இந்துமதக் கடவுளெனத் திரிக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, ஐயப்பனை பல்சமயத்தவரும் நல்லிணக்கத்துடன் வழிபடுகின்றனர். 1960கள் வரை கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு வயதுவரம்பின்றி எல்லாப் பெண்களும் பெற்றிருந்த உரிமை மறுக்கப்பட்ட நிலையிலேயே உரிமைமீட்புக்கான கோரிக்கையும் போராட்டமும் எழுந்தன. அதன் தொடர்ச்சியில் வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கேரள அரசின் உறுதிப்பாடு, லட்சக்கணக்கான பெண்கள் நடத்திய மனிதச்சுவர் போராட்டம் ஆகியவற்றால் உத்வேகம் பெற்றும் அதன் நியாயத்தை வலியுறுத்தியும் தொடங்கும் இப்பாடலில் ஐயப்பனோ வேறெந்த தெய்வமோ அவமதிக்கப்படவில்லை.
பெரியாரின் பேத்தியாக உருவகித்துக்கொள்ளும் ஒரு பெண் வழிபாட்டுரிமை உள்ளிட்ட பாலினச்சமத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ள இந்தப்பாடல் கடந்த ஆறாண்டுகளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில் திடீரென இப்போது தங்களது மனதைப் புண்படுத்திவிட்டதாக சங்பரிவாரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இசைவாணியை அலைபேசியில் அழைத்து மிரட்டியும் ஆபாசமாக பேசியும் வருகின்றனர். அவரை அழைத்துத் திட்டுவதற்கும் மிரட்டுவதற்கும் மற்றவர்களைத் தூண்டிவிடும் கெடுநோக்கில் அவரது அலைபேசி எண்ணை சமூக ஊடகங்களில் பரப்பிவருகின்றனர். அவரது உருவப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து அவருக்கு அனுப்பி சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக மிரட்டி வருகின்றனர். இந்த வக்கிரக் கும்பல் குறித்த விவரங்களுடன் இசைவாணி காவல்துறையில் புகார் கொடுத்தும் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
ஐயாம் ஸாரி ஐயப்பா பாடலின் உட்பொருள் எழுப்பும் இந்த நியாயத்தை எதிர்கொள்ள திராணியற்ற சங்பரிவாரத்தினர், இசைவாணி வேறு மதத்தவர் என்கிற பொய்யைச் சொல்லி, அந்த மதத்தைச் சேர்ந்த இவர் இந்துமதக் கடவுளை இழிவுபடுத்திவிட்டார் என்று மதரீதியான மோதலைத் தூண்டும் இழிசெயலிலும் இறங்கியுள்ளனர். இந்தப் பொய்களையே முன்னிறுத்தி இசைவாணி மீதும் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களையும் கொடுத்து வருகின்றனர். பெண்களைத் தெய்வமாகப் போற்றுவதாக பீற்றிக்கொண்டே ஒரு பெண் கலைஞரை இவ்வாறு வக்கிரமாக சித்தரித்து அச்சுறுத்தியும் அவதூறு செய்தும் வருகின்றனர் இணையப் பொறுக்கிகள். ஆளுநர் என்ற அரசியல் சாசனப் பொறுப்பை வகித்த தமிழிசையும் இதேரீதியில் பேசுவது வெட்கக்கேடானதும், அரசியல் சாசனத்தை அவமதிப்பதுமாகும்.
பெண்கள் வழிபாட்டுரிமையைக் கோரினாலே இந்துக்களின் மனம் புண்பட்டுவிடும் என்றால் இவ்வளவு காலமும் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ள பெண்கள் இந்துக்கள் இல்லையா, அவர்களது மனம் புண்படாதா என்கிற கேள்விகள் எழுகின்றன. இந்தப்போக்கை அனுமதித்தோமானால், சமூகத்தின் எல்லா நிலைகளிலும் நிலவும் ஏற்றத்தாழ்வை விமர்சிப்பதையும் சமத்துவத்தைக் கோருவதையுமேகூட தங்களது மனதைப் புண்படுத்தும் செயல் என்று பழமைவாதிகள் கொக்கரிக்கக்கூடும். எதற்கெடுத்தாலும் மனம் புண்பட்டதாகக் கூறிக்கொண்டு பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கி சமூகத்தை அமைதியின்மையில் மூழ்கடித்து கவனக்குவிப்பு பெறும் மலிவான முயற்சியில் ஈடுபடுகின்ற சங்பரிவார கும்பல் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திரமான கலைச்செயல்பாட்டிற்கு அச்சுறுத்தலை உருவாக்குவதன் மூலம் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் சுயதணிக்கைக்குள் முடக்கி மழுங்கடிக்கப் பார்க்கும் சங்பரிவாரத்தின் இழிமுயற்சிகளை முறியடித்தாக வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதக்களமாக இருக்கவேண்டிய பொதுவெளியை இப்படி மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அவதூறுகளாலும் ஆபாசங்களாலும் தனிமனித தாக்குதல்களாலும் நிறைக்கும் சங்பரிவாரத்தின் போக்குக்கு எதிராக ஜனநாயகத்திலும் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்திலும் நம்பிக்கையுள்ளவர்கள் குரலெழுப்ப வேண்டும்.
+ There are no comments
Add yours