தோழர் தியாகுவின் ‘கம்பிக்குள் வெளிச்சங்கள்’ , மதுரை விசிக பொறுப்பாளர் த.மாலின் அவர்களின் காணொளிகள் , மதுரை சிறைக்காவலர் மதுரை நம்பியின் நெடுங்கதை போன்றவை சிறையாளிகளின் வாழ்க்கையை இலக்கிய , அரசியல் ,சமூக தளங்களில் உரையாடல்களாக மாற்றும் ஆவணங்களாக வெளிவந்திருக்கின்றன.
அந்த வரிசையில் இந்திய , தமிழ்நாட்டுச் சூழலில் சிறைச் சட்டங்கள் , விதிகள் எவ்வாறு சாதிய மனுச் சட்டங்களைத் தாங்கி நெடுங்காலமாக இயங்கி வருகின்றன என்பதை The Wire இணைய ஊடகத்தில் ஊடகவியலாளர் சுகன்யா சாந்தா பதிவு செய்துள்ளார்.
சாதியச் செல்வாக்கும் , பண , அரசியல் செல்வாக்கும் சிறையில் எவ்வாறு ஆளுகை செலுத்தி வருகின்றன என்பதனை அந்தக் கட்டுரை முழுமையாகத் தோலுரித்துள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியான பாஜகவின் பிரக்யா தாகூர் சிறைக்குள்ளேயே தனது சாதிய மனுவாத ஆட்சியியத்தை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
சூரத்திலிருந்து மாரட்டியத்தில் உள்ள சிறைக்கு 280 கி்மீ பயணம் செய து அவருக்காக வீட்டு உணவு மூன்று வேளையும் சிறைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் சிறைச் சட்டங்கள் சிறையாளிகளை அவர்கள் சாதி பார்த்து அவர்களுக்கு சிறையில் பணிகளை ஒதுக்கியுள்ளது என்பதும் தடைசெய்யப்பட்ட மலக்குழிக்குள் இறங்கும் நடைமுறை , மலத்தைக் கையாளும் மனித நடைமுறைகள் ஒடுக்கப்பட்டோர் மீது ஏவப்பட்டதை நேர்காணல் வழி அம்பலப்படுத்தியுள்ளார்.
அதேபோல தமிழ்நாட்டுச் சிறைகளில் சாதியை அடிப்படையாக வைத்து இயங்கும் சிறையறைகளும் பாகுபாடும் பற்றி மதுரை வழக்குரைஞர் அழகுமணி வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள் சிறையில் சாதியப் பாகுபாடுகள் கலையப்பட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
காலனிய நீக்கம் குறித்து சிந்திக்கும் பலரும் காலனிய சட்டங்களின் நீட்சியாய் சாதியை குற்றங்களின் பிறப்பிடமாய்க் கொண்ட காலனிய நடைமுறை சிறைத்துறையில் நீடிப்பது குறித்து செயலாற்றுவது குறைவாக உள்ளது.
ஒரு சனநாயக சமூகம் குற்றவியல் நீதிமுறைமையை எவ்வாறு கையாள்கிறது என்பதை வைத்து அதன் சனநாயக வளர்ச்சியை அளவிட முடியும்.
முப்பெரும் குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் சிறையில் நடைமுறைப்படுத்தப்படும் கொடிய விதிகள் அகற்றப்பட வேண்டும் என்ற குரலும் வலுவாக எழும்ப வேண்டும்.

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply