மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்திற்குத் திடீரென ஜம்புத் தீவு பிரகடனம் மேல் அக்கறை வந்திருக்கிறது.
இந்தப் பல்கலைக் கழகத்தின் மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் இராசய்யன் ‘south Indian first rebellion ‘ என்ற ஆவணப்பூர்வமான நூலொன்றை ஆக்கி வெளியிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜம்புத்தீவு பிரகடனத்திற்கு உயிர் கொடுத்தவரும் , சாதி , சமய எல்லைகளைக் கடந்து பிரிட்டானிய பேரரசுக்கு எதிராக நாவலந்தீவின் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற சின்ன மருதுவின் அறிக்கையை பிரட்டானிய படை ஆவணங்களில் இருந்து தேடி பதிப்பத்தவரும் இராசய்யன் அவர்களே ஆவார்.
இந்த வரலாற்று அறிவோ , சமூக அறிவு ஏதும் இல்லாமல் சாதி சங்கங்களை ஜம்புத் தீவு பிரகடனம் எனும் பெயரில் பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதிப்பது கல்விச்சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத நடவடிக்கை.
அண்மையில் ஆளுநர் ரவி திடீரென மருதுபாண்டியர் வரலாற்றைத் தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் மறைத்துவிட்டதாக கதை அடித்துவிட்டார்.
அவர் பிரதிநித்துவப்படுத்தும் சநாதன சித்தாந்தத்திற்கு 1857 இல் நடந்த கிளர்ச்சியும் மங்கள் பாண்டேவும் தான் நாயகர்கள். அவருக்கு திடீரென சின்ன மருதுவின் ஜம்புத்தீவு அறிக்கை மீது அக்கறை வந்திருப்பது ஏனென்று சொல்லாமலே விளங்கும்.
அந்தக் கூட்டத்தினுடைய நீட்சியாக இந்தக் கூட்டம் மதுரைக் காமரசர் பல்கலைக்கழகத்தில் சாதி அடிப்படையிலான சமூகப் பொறியமைவை நிகழ்த்துவதற்கான பின்னணியில் நடைபெறுகிறதோ என அய்யம் எழுகிறது.
குருசாமி மயில்வாகனன் போன்ற முன்னாள் இடதுசாரிகள் இப்போது சாதி சங்கங்களோடும் சங்பரிவாரக் கூட்டத்தோடும் சேர்ந்த து கும்மியடித்து வருவதும் அதற்கு உரமூட்டுவதும் வருத்தமான செய்தி.
கல்விப் புலத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாத சாதி அமைப்புகளை கருத்தரங்கம் எனும் பெயரில் பல்கலைக்கழக வளாகங்களில் அனுமதிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக பேராசிரியர்கள் சிலர் சங்பரிவார நச்சுக்களோடு தொடர்பு வைத்துக் கொண்டு இத்தகைய கூட்டங்களை ஒழுங்கு செய்வதை மிக உன்னிப்பாக கவனித்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
கல்வியாளர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் இத்தகைய கருத்தரங்க கூட்டங்களுக்கு எதிராகத் தங்களுடைய கண்டனங்களை வெளிப்படையாக தெரிவிக்க முன்வர வேண்டும்.
எழுத்தாளர் :
குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours