கச்சத்தீவும், தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைகளும், பிரதமர் மோடியும்.

1 min read

பாக் நீரிணையில் ஏறத்தாழ 1600 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும், சுமார் 285 ஏக்கர் பரப்பளவும் கொண்ட கச்சத்தீவு இன்று இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 1974 ஆம் ஆண்டிலும், பின்னர் 1976 ஆம் ஆண்டிலும் இந்தியா-இலங்கை இடையேயான
இரு கடல் சார் ஒப்பந்தங்களின் விளைவாக இந்தியா இலங்கை இடையேயான எல்லை மீள் வரையறை செய்யப்பட்டு இன்று கச்சத்தீவு இலங்கையின் தீவுப் பகுதியாக மாறிப்போனது.ஒவ்வொரு ஆண்டும் யாழ்ப்பாண திருச்சபையின் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவின் போது இந்தியா இலங்கை இரு நாடுகளிலுமுள்ள மக்கள் ஐயாயிரத்திற்கு சற்றேறக்குறைய கூடிக் கலைகின்றனர்.

இலங்கையின் நெடுந்தீவு அல்லது டெல்ஃப்ட் தீவிலிருந்து ஏறத்தாழ 23 கிலோ மீட்டர் தொலைவிலும், இராமேஸ்வரத்திலிருந்து கிட்டத்திட்ட 24 கிலோ மீட்டர் தொலைவிலும் கச்சத்தீவு அமைந்துள்ளது. இராமநாதபுரம் சேதுபதிகளிடம் இருந்த அத்தீவின் சுற்றுப்புறங்களில் பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளிலுள்ள மீனவர்கள் மீன்பிடிக்கும் இடமாக விளங்கிவந்தது.

26.06.1974 ஆம் நாள் கொழும்பிலும் 28.06.1974 ஆம் நாள் புதுடெல்லியிலும் செய்யப்பட்ட கடல் எல்லை குறித்த எட்டு பிரிவுகளை கொண்ட அந்த ஒப்பந்தம் இருநாடுகளின் கடல் எல்லைகளை வரையறை செய்தும், எல்லைக்களுக்குள்ளான அதிகார வரம்பு குறித்தும், இந்திய மீனவர்களும், புனித பயணிகளும் அவ்வொப்பந்த நாள் வரையில் கச்சத்தீவுக்கு எவ்வாறு சென்று வந்தார்களோ அவ்வாறே தொடரலாம் என்றும், வலைகளை காய வைக்கலாம் எனவும் மேலும் அந்த ஒப்பந்தமானது அரசால் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கூறியது.

தற்போது தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றுக் கொண்ட பா.ஜ.கவின் தமிழ்நாட்டுத் தலைவர் கே.அண்ணாமலை, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கச்சத்தீவை விட்டுக்கொடுத்துவிட்டார் எனக் கூறுகிறார். பிரதமரும் அவ்வாறே கச்சத்தீவை இந்தியா இழந்து விட்டதாக முழங்குகிறார். காங்கிரஸூம் திமுகவும் துரோகமிழைத்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள் பா.ஜ.கவினர்.

தகவல் உரிமை சட்டம் 2005, பிரிவு 8(1)(அ)ன்படி எந்த தகவலாவது இன்னொரு வெளிநாட்டுடனான உறவை பாதிக்கப்படுவதாக இருந்தால் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கிறது. ஆனால் பத்து ஆண்டுகளாக ரிப் வான் விங்கிள் தூக்கத்தில் இருந்த பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் தகவல் உரிமை சட்டம் பிரிவு 8(1)(அ) வையும் மீறி பெற்ற மர்மம் தெரியவில்லை.

கச்சத்தீவை காங்கிரஸ் கட்சியும் திமுகவும் இலங்கைக்கு விட்டுக் கொடுத்தாக சித்தரிக்கும் திருவாளர்கள்.கே.அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடி இருவருமே அதே ஒப்பந்தத்தில் ஏறத்தாழ 3000 சதுர மைல்கள் பரப்பளவுள்ள வாட்ஜ் பேங் இந்தியா வசமானது குறித்து மூச்சுவிடவில்லை.

23.03.1976 அன்று முந்தைய இந்திய இலங்கை கடல் சார் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதோடு இன்னொரு முக்கியமான ஒப்பந்தமும் எட்டப்பட்டது. அதன்படி மீன்வளம் கொண்ட கடல் கேக் துண்டு ஒன்று மீன் வங்கியாக அல்லது வாட்ஜ்பேங் என்ற பெயரில் குமரி முனைக்கு தெற்கில் ஏறத்தாழ 3000 சதுர மைல்கள் பரப்பளவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வழங்கப்பட்டது.

வாட்ஜ்பேங் கடற்பகுதி இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கும் மட்டுமே சொந்தமான தனி பொருளாதார மண்டலமாக விளங்கும். அந்த ஒப்பந்தம் ஏழு பிரிவுகளை கொண்டது. அதன்படி இந்தியாவின் அனுமதியுடன் இலங்கை 23.03.1976ஆம் நாள் தொடங்கி முதல் மூன்று வருடங்கள் மட்டும் வருடம் ஒன்றுக்கு 2000 டன் எடை கொண்ட மீன்கள் மட்டும் பிடித்து கொள்ள முடியும். வாட்ஜ்பேங்கில் பெட்ரோலியம் மற்றும் பிற தாதுப் பொருட்களை இந்தியா எடுத்து கொள்ள முடியும் முன்னதாக இலங்கைக்கு அது குறித்து தெரிவித்தால் போதுமானது. மேற்சொன்ன பகுதிகளில் இந்திய மீனவர்களும் மீன்பிடிக்க இந்தியாவின் அனுமதி பெறுவது அவசியம்.

தி பிரிண்ட் ஊடகத்தின் செய்தி ஒன்று சில மாதங்களுக்கு முன்னால் இந்தியா வாட்ஜ்பேங்கில் பெட்ரோலியம் உள்ளதா என்ற முதல் கட்ட ஆய்விற்கு சர்வதேச நிறுவனங்களிடம் ஒப்பந்தம் புள்ளி கோரியதை தெரிவிக்கிறது. ஒருவேளை கச்சத்தீவை பிரதமர் மோடியும் திரு அண்ணாமலையும் மீட்டு திரும்ப இந்தியா பெறும் பட்சத்தில் வாட்ஜ் பேங் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுமா எனத் தெரியவில்லை.
வாட்ஜ்பேங் மிகப்பெரும் மீன்வள வங்கியாகவும், எண்ணெய் மற்றும் தாது பொருட்கள் அடங்கிய சுரங்கமாக உள்ளதால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒன்றிய அரசு கச்சத்தீவை மீண்டும் பெறுவதற்கு பதிலாக வாட்ஜ்பேங் பகுதியை கைவசம் வைத்திருப்பதையே விரும்பும் என்பது வெள்ளிடைமலை.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற திருவள்ளூர் தொகுதி வேட்பாளரான சசிகாந் செந்தில் சொன்ன கருத்திற்கு அண்ணாமலை, பிரதமர் மோடியோ தெளிவான பதிலை இன்னும் தரவில்லை.

சொல்லப்போனால் 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு வாட்ஜ்பேங் தரப்பட்டதை பற்றியே அதில் பெட்ரோலியம் தேட நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரியதையேர பிரதமரும், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரும் வழக்கம் போல மறந்து விட்டார்கள் என்றே கருதமுடியும் . உத்தரத்தில் இருப்பதும் வேண்டும் கக்கத்தில் இருப்பதும் போகக்கூடாது என்ற மலையாளப் பழமொழியை அவர்கள் நினைவூட்டுகிறார்கள்.

இலங்கையில் மலையக எழுத்தாளர் என்.சரவணன் தனது கள்ளத்தோணி நூலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1974 ஆம் ஆண்டில் நடந்த இரு முக்கிய உடன்படிக்கைகள் பற்றி கூறுகிறார். முதலாவது இந்திரா-சிரிமாவோ ஒப்பந்தம் அதில் சாஸ்திரி- சிரிமாவோ ஒப்பந்த தொடர்ச்சியாக ஒன்றரை இலட்சம் மலையகத் தமிழர்களை இந்தியாவும் இலங்கையும் ஆளுக்கு பாதியாக பிரித்து குடியுரிமை வழங்குவது என்றும், இரண்டாவதாக கடல் எல்லை குறித்த ஒப்பந்தம் என்கிறார் சரவணன்.

அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அரசு 1974ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பொக்காரன் என்ற இடத்தில் ராஜா ராமண்ணா தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் குழுவின் துணையுடன் அணுகுண்டு சோதனை நடத்தியது உலகின் பெரும்பாலான நாடுகளின் கண்டனங்களை பெற்று தந்தது. இதனால் இந்தியாவிற்கு எதிரான சர்வதேச சூழலால் இந்தியா மீது பொருளாதார தடைகள் தொடங்கினர். இதை பயன்படுத்தி இந்தியாவை தனிமைப்படுத்த நினைத்த பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான கண்டனங்களை ஐக்கிய நாட்டு சபையின் கொண்டு வர முயன்றது. அப்போது ஐக்கிய நாட்டு சபையின் தற்காலிக உறுப்பு நாடுகளின் தலைமை பொறுப்பில் இருந்த இலங்கை இந்தியாவுக்கு அனுசரணையாக நடந்து அவ்வாறான சூழல் உருவாகாமல் தடுத்தது.அதைத் தொடர்ந்தே மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமையும் கடல் ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது என்றார் சரவணன். இதே கருத்தை கச்சத்தீவு நூலாசிரியர் முத்துக்குமாரும் கூறுகிறார் .

1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி அப்பகுதி இந்திய மீனவர்கள் பாஸ்போர்ட் விசா இல்லாமல் நுழைய அனுமதியுள்ள இடம் என கூறப்பட்டாலும் 30 ஆண்டுகள் நடந்த இலங்கையின் உள்நாட்டு போரின் விளைவாக பாக் நீரிணையிலும் மன்னார் கடல் பகுதியிலும் பல முறை இந்திய மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ்நாட்டில் கச்சத்தீவு என்ற நூலை எழுதிய ஆர்.முத்துகுமார் கச்சத்தீவு பகுதி மிக மிக மீன்வளம் மிக்க பகுதி என்று குறிப்பிட்டு தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் போது தாக்கப்படுகின்றார் என எழுதியிருந்தார்.

ஆனால் இலங்கை கடற்படையின் குறுக்கீடுகள் உள்நாட்டுப்போர் முடிந்த பின்னர் தமிழ்பேசும் மீனவர்களுக்காகத்தான் என்ற விஷயத்தை முத்துக்குமார் கருத்தில் கொள்ளவில்லை.

இலங்கையில் 1979-2009 வரை 30 வருட உள்நாட்டு போர் முடிந்த சூழலில் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ்பேசும் மீனவர்கள் தடை செய்யப்பட்ட மடி வலைகளை பயன்படுத்துவது இல்லை. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் இருப்பது போன்ற மீன்பிடி கப்பல்கள், விசைப்படகுகள், தடை செய்யப்பட்ட இழுவை மடிகள் ஆகியன இலங்கையிலுள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி தமிழ் பேசும் மீனவர்களால் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக இன்னும் பெரும்பாலும் வள்ளங்களும், கட்டுமரங்கள் பயன்படுகின்றன. இலங்கையுள்ள மீன்பிடி தொழில் குறிப்பாக வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் பேசும் மீனவர்களால் வளம் குன்றா வளர்ச்சி என்ற பாரம்பரிய மீன்பிடி குறிக்கோளின் அடிப்படையில் ஓரளவு நடக்கின்றன.
இந்த காரணத்தால்தான் அங்குள்ள மீனவர்கள் சேது சமுத்திரம் திட்டத்தை எதிர்த்தனர். விடுதலைப்புலிகள் ஆதரவாளரான என்.மாலதி தனது ‘எனது நாட்டில் ஒரு துளி நேரம்’ நூலில் கிளி பாதர் பற்றி கூறும் போது இது பற்றி குறிப்பிடுகிறார் .

தமிழ்நாட்டு மீன்பிடிப்பு முறை தீவிர மீன்பிடிப்பு முறையாக உள்ளது. அது மீன் வளத்தை ஓரளவு பாதிக்கவே செய்கின்றது. தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை ஓரம் குறிப்பாக தூத்துக்குடி பகுதியில், தூத்துக்குடி தெர்மல் பவர், என்.எல்.ஜி.தமிழ்நாடு தெர்மல் பவர், வேதாந்தா தெர்மல் பவர், இந்து பாரத் தெர்மல் பவர் என ஏராளமான மின் உற்பத்தி நிலையங்களும், தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன.இலங்கையின் கடற்பகுதிகள் ஓரளவுக்கு சுத்தமாகவும் தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் அபாயம் இல்லாமலும் இன்று உள்ளன.

மேற்சொன்ன கிழக்கு கடற்கரை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ஆலை கழிவுகள், பிளைஆஷ் என்ற சுழற்சி செய்ய முடியாத சாம்பல் ஆகியன கடல் படுகைகளில் படிந்து கடல் வளத்தை முற்றிலும் பாழாக்கி மீன்வளத்தை குன்ற செய்துள்ளன.
புகழ்பெற்ற 1870ஆம் ஆண்டின் கடலுக்கடியில் 20 ஆயிரம் மைல்கள் நாவலில் ஜூல்ஸ் வெர்ன் வர்ணிக்கும் கடலுக்கு அடியிலுள்ள கடற்காடுகள், பவளப்பாறைகள், மிகப்பெரிய முத்துக்கள் ஆகியன கொண்ட மன்னார் வளைகுடாவின் தமிழ்நாட்டு பகுதி கிட்டத்தட்ட இன்று இறந்துபோனது. தூத்துக்குடி கடலை ஒட்டி சங்கு குளிப்பவர்கள் இறந்த சங்குகளை மட்டுமே தற்போது கண்டெடுக்க முடிகிறது.

மக்கள் தொகை பெருக்கத்தாலும் விசைபடகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், டீசல் விலையாலும் வேறு வழியில்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவு மட்டுமல்லாமல் வடக்கிலும் கிழக்கிலும் பகுதியிலும், கடற்கரையை ஒட்டியும் முல்லைத்தீவு காரைநகர் பகுதியிலும் இலங்கை எல்லையை மீறி மீன்பிடிக்கவும் அதனால் இலங்கை கடற்படையால் கைது நடவடிக்கைக்கும் உள்ளாகின்றனர்.

கடந்த 02.04.2024ஆம் நாள் தி இந்து ஆங்கில நாளிதழில் நிருபர் மீரா சீனிவாசன் எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கை மீனவர் கூட்டமைப்பின் வடக்கு ஒருங்கிணைப்பாளரான அன்னலிங்கம் அன்னராசா தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை எல்லையை மீறியும் காரைநகர் எல்லையை தாண்டியும் மீன் பிடிப்பதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

உண்மையில் நார்வே, சுவீடன், டென்மார்க், ஆகிய நாடுகள் செய்து கொண்டது போல ஒரு மீன்பிடி ஒப்பந்தத்தை இலங்கையுடன் இந்தியா செய்து கொள்ள முடியும். “ஸ்காஜெர்ராக் ஒப்பந்தப்படி நார்வே, சுவீடன், டென்மார்க், ஆகிய மூன்று நாடுகளும் வடக்கு மற்றும் பால்டிக் கடல்பகுதியில் பொதுவாக மீன்பிடித்து கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் 1966ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. அதுபோன்ற சர்வதேச ஒப்பந்தம் மூலமே இந்திய மீனவர்கள் சட்டப்படி எவ்வித பயமுமின்றி இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க இயலும். இலங்கை மீனவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அங்குள்ள மீனவ கூட்டுறவுச் சங்கங்களுக்கு வருடத்திற்கு சில நூறு கோடிகள் இழப்பீடு வழங்க வழிவகை செய்யலாம் அல்லது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையில் மீன் பிடிப்பதில் எடை வரையறை செய்யலாம்.

இந்தியா மீன் ஏற்றுமதியில் வருடம் ஒன்றிற்கு ஈட்டும் 7.76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மீன் மற்றும் மீன் பொருள் ஏற்றுமதியில் ஒரு பங்கை இலங்கை மீனவர்களுக்கு வழங்கும் வழிவகையை அவ்வொப்பந்தத்தில் செய்ய முடியும்.
அவ்வாறான மீன்பிடி ஒப்பந்தத்தையோ இந்திய-இலங்கை மீனவர்கள் மத்தியில் பகைமை வளர்க்காத ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு மாறாக இந்தியப் பிரதமரின் வீண் வாய்ச்சொல் வீச்சு இரு நாடுகளுக்கிடையில் தேவையற்ற பகைமையை வளர்க்கும்.

வெறுப்பு அரசியலின் தமிழ்நாட்டு குழந்தையான தமிழக பாஜக பகைமை அரசியலை வளர்ப்பதில் ஆச்சரியமில்லை.

1991 ஆம் ஆண்டில் கச்சத்தீவை மீட்போம் என்ற சூளுரைத்த செல்வி ஜெயலலிதா அவர்கள் 1994ஆம் ஆண்டு செப்டம்பர் இந்திய-வங்காள தேசத்திற்கு குத்தகை வழங்கிய தீன் பிகா பகுதியைப் போன்று கச்சதீவை குத்தகைக்கு எடுக்க வேண்டும் எனக் கூறினர். அதே போன்ற ஒரு கருத்தைப் பின்னர் தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களும் முன் வைத்தார்.

ஆனால் ஆக்கப்பூர்வமாக எந்த முயற்சிகளையும் 10 வருடங்களாக எடுக்காத பா.ஜ.க அரசு தங்களது ஆட்சியின் அதிகாரத்தின் கடைசி சொட்டையும் அருந்தி முடித்த பிறகு இதுபோன்ற வாய் சொல் போரில் ஈடுபடுவது இந்திய-இலங்கை மீனவர்களுக்குமிடையே பகைமையை வளர்க்க மட்டுமே உதவும்.

05.10.2021ஆம் நாளில் இந்தியாவும் இலங்கையும் மித்திர சக்தி என்ற பெயரில் கூட்டு இராணுவ பயிற்சி செய்தனர். மார்ச் மாதம் 7ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை 2022 நாள் இந்திய-இலங்கை கப்பல் படைகள் சினிநெக்ஸ் என்ற கூட்டுக் கப்பற்படை பயிற்சியில் ஈடுபட்டனர் முதற்கட்டமாக விசாகபட்டினத்திலும், இரண்டாவது கட்டமாக வங்காள விரிகுடாவிலும் இந்திய-இலங்கை கூட்டுப் பயிற்சிகள் செய்தனர். அப்போதெல்லாம் திருவாளர் கே.அண்ணாமலை தகவல் ஏதும் பெறவில்லை.

இலங்கை கப்பல்படையினர் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மீனவர்களுக்காகவே தமிழ்நாட்டு மீனவர்களை தடுக்கவோ கைது செய்யவோ முயல்கிறார்கள். கிழக்கு கடற்கரையில் தமிழ்பேசும் மீனவர்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் போச்சிங் என்ற மீன் வேட்டை ஆடுவதாகவே கருதி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.

தமிழ்நாட்டின் மீனவர்களின் நலனும் இலங்கை மீனவர்களின் நலனும் ஒன்றல்ல.

ஒன்றிய அரசோ திரு.அண்ணாமலையோ தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு உருப்படியாக எதாவது செய்ய வேண்டும் என்றால் அது மீன்பிடி ஒப்பந்தம் ஒன்று இலங்கையுடன் செய்வதாகத்தான் இருக்குமே ஒழிய 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை குறை கூறுவது நேர்மையான அரசியலுக்கு முரணானது.

மீன் பிடி ஒப்பந்தம் ஒன்றும் ஒன்றிய அரசுக்கு எட்டாக்கனியில்லை 12.06.2022ஆம் நாளிட்ட இந்து ஆங்கில நாளிதழ் மன்னார் மாவட்ட மின்சக்தி திட்டம் ஒன்று அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதைப்பற்றி கூறுகிறது.

சிலோன் மின்வாரிய தலைவரான எம்.எம்.சி.பெர்டினாண்டோ பாராளுமன்ற குழு முன்பாக ஆஜராகி மின் திட்டம் ஒன்றை அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு காரணம் இலங்கைப் பிரதமர் கோத்தபய ராஜபக்சவுக்கு இந்திய பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்து அதன்படியே அதானி குழுமத்திற்கு மேற்சொன்ன ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக இலங்கை மின்வாரிய தலைவர் குறிப்பிட்டார்.

முன்னதாக ஒப்பந்தப்புள்ளி முறை இல்லாமலேயே ஒப்பந்தம் வழங்குவதற்கு ஏதுவாக இலங்கை மின்சார சட்டம் திருத்தப்பட்டது. இதுபோன்றே மார்ச் மாதம் 2022ஆம் ஆண்டிலும் மின்சக்தி திட்டங்கள் வடக்கு மன்னாரிலும், பூன்ராயனிலும் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதாக எஸ்.ஜே.பி. என்ற ஒருங்கிணைந்த மக்கள் சக்தி கட்சியின் இலங்கையின் முக்கிய எதிர்கட்சித் தலைவர், திருவாளர் மோடியின் தீய நண்பர்களை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சா, செல்லம் கொஞ்சி கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

ஒப்பந்தப் புள்ளி கோராமலேயே சட்டத்தை திருத்தி அதானி குழுமத்திற்கு 500 மெகாவாட் திட்டம் வழங்கச் செய்யும் வல்லமை படைக்கும் பிரதமர் மோடி அவர்கள், தான் நேசிப்பதாகக் கூறும் தமிழ் மீனவர்களுக்காக மீன்பிடி ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய பத்து வருடங்களாக முன்வராதது மட்டுமின்றி தேர்தல் நேரத்தில் கதறுவது ஏன் என்று சாமானியர்களுக்கு புரியவில்லை. எது எப்படியோ! பாராளுமன்ற குழுவில் ஆஜராகிய பெர்டினான்டோ பின்னர் இந்தியப் பிரதமர் மோடியின் மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெற்று கொண்டாலும் நேர்மையான பெர்டினாண்டோ தனது இலங்கை மின்வாரிய தலைவர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீன்பிடி ஒப்பந்தம் செய்ய வலியுறுத்த முடியாவிட்டால் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி வாக்களித்தப்படி தற்போதைய டீசல் விலையை மன்மோகன் சிங் கால டீசல் விலையான 55 ரூபாயாகவாவது ஆக்கினால் மீனவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் பலனளிக்கும்.

கச்சத்தீவு தொடர்பாக இரு முக்கிய ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளன. முதலாவது மனு ஏ.கே.செல்வராஜ் எதிர் யூனியன் ஆப் இந்தியா என்ற மனு எண். 561/2008 என்ற வழக்குஅகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கட்சியால் 28.11.2008 நாளன்று தாக்கல் செய்யப்பட்டது. எம்.கருணாநிதி எதிர் யூனியன் ஆப் இந்தியா என்ற
இரண்டாவது வழக்கு ரிட் மனு எண். 430/2013 என்ற எண்ணில் திராவிட முன்னேற்ற கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. இரு வழக்குகளுமே பத்து ஆண்டுகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

உச்சநீதிமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் தாக்கல் செய்து நிலுவையிலுள்ள ரிட் மனுக்கள் 10.04.2024 அன்று விசாரணைக்கு வர உள்ளது அதற்கு வெகுநாட்கள் இல்லை. அந்த ரிட் மனுக்களில் மத்திய அரசு சார்பில் கச்சத்தீவு விவகாரத்தில் ஒப்பந்தத்தை திரும்ப பெற முயற்சிப்போம் என சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்வார்களா என்று அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 02.04.2024 கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் கேட்டபடி செய்வரா என்பது 10.04.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் தெரியும்.
அதற்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் இந்திய பிரதமரிடம் கேட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்கு சொன்னால் நன்றாக இருக்கும் .

அன்றைய முதல்வர்கள் கருணாநியும் ,ஜெயலலிதாவும் குறிப்பிட்ட தீன் பிகா நிலக் குத்தகை தொடர்பாக புரிந்து கொள்ள பேருபாரி வழக்கு குறித்து கூறுவது அவசியம்.
இன் ரி பேருபாரி’ வழக்கில் உச்சநீதிமன்றம் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை இன்னொரு நாட்டிற்கு கொடுக்க பாராளுமன்ற ஒப்புதலும், அரசியலமைப்பு சட்டத் திருத்தமும் அவசியம் என கூறியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிந்த போது இன்றைய வங்காள தேசம் அல்லது அன்றைய கிழக்கு பாகிஸ்தான் எல்லைக்குள் ஏராளமான இந்திய கிராமங்கள் அமைந்திருந்தன. இன்றும் வங்களா தேசத்திற்குள் 71 இந்திய கிராமங்கள் அமைந்துள்ளன. அதுபோன்று இந்தியாவுக்குள் 102 வங்காள கிராமங்கள் அமைந்துள்ளன.வங்காள தேச மக்கள் தங்கள் கிராமங்களுக்குள் நுழைய ஏதுவாக இந்தியாவின் தீன் பிகா பகுதி வங்காள தேசத்திற்கு வெறுப்பு அரசியல் இல்லாத காலத்தில் குத்தகைக்கு வழங்கப்பட்டது.

இது போன்றே அங்கர் போட்டா மற்றும் தகா கிராம பகுதிகளில் இந்தியாவிற்குள் அமைந்த வங்காள தேச பகுதியாகும். அவை முற்றிலும் இந்தியாவால் சூழப்பட்டு உள்வளாகங்களாக இருந்தன. எனவே பேருபாரி என்ற 40,000 பேர் வசிக்க கூடிய கிராமம் நீளவாக்கில் இரண்டாக பிரிக்கப்பட்டு இந்தியாவுக்கும், வங்காள தேசத்திற்கும் பங்கு வைக்கப்பட்டன. அந்த பேருபாரி வழக்கில் தான் உச்சநீதிமன்றம் மேற்சொன்ன கருத்தை தெரிவித்து இருந்தது. அதன் விளைவாக 119ஆம் அரசியல் சட்டத்திருத்தத்தில் இந்தியா தன் எல்லை பகுதியிலுள்ள இடங்களை அரசியல் சட்டத்திருத்தம் மூலம் வங்காள தேசத்திற்கு வழங்கியது.

நேபாளம், பாகிஸ்தான், வங்காள தேசம், மாலத்தீவு உள்ளிட்ட அனைத்து நாடுகளிடமும் நட்பு இல்லாத சூழலை இந்திய ஒன்றியத்தை இன்று ஆளும் பாஜக அரசு உருவாக்கி வருகிறது. மாலத்தீவுகளும் இந்தியாவின் நட்பு வட்டாரத்தை விட்டு வெளியேறி சொல்லிவிட்டது இந்நிலையில் இலங்கையிடமும் பகைமை சூழலை ஏற்படுத்துவதை தவிர இந்த வாய்சொல் வீரம் வேறு எந்த பயனையும் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் கொண்டுவரப் போவது இல்லை மாறாக சர்வதேச இழிவையே பெற்றுத்தரும் .

எழுத்தாளர் :

மூத்த வழக்கறிஞர் தி.லஜபதி ராய்
கே கே நகர்.

You May Also Like

+ There are no comments

Add yours