கோவில் நுழைவு போராட்டம் ; ஆவணங்களும் கட்டுரைகளும்

நந்தன் போன பாதையை மறைத்து எழுப்பப்பட்டிருக்கும் சுவர், வடம் பிடிக்க அனுமதி மறுத்து நிறுத்திவைக்கப் பட்டிருக்கும் தேர், திருவிழாவில் பங்கெடுக்க விடாமல் கலவரத்தில் கொளுத்தப்பட்ட தேர், உடைக்கப்பட்ட புரவிகள், உள்ளே நுழைய அனுமதி மறுத்து மூடிவைக்கப்பட்டிருக்கும் கோயில், மலம் கலக்கப்பட்ட தண்ணீர்த்தொட்டி, கொளுத்தப் பட்ட குடிசைகள், கொல்லப்பட்ட மக்கள், சூரையாடப்பட்ட வீடுகள், வெட்டப்பட்ட பள்ளி மாணவன் இவையனைத்தும் எவற்றின் அடையாளங்களாக ?

விழுப்புரத்தில் மேல்பாதி கிராமம், கும்மிடிப்பூண்டியில் வடுதலம்பேடு, சேலத்தின் தீவட்டிப்பட்டி, திருவண்ணா மலையில் தென்முடியலூர் இவை எவற்றின் தொடர்ச்சியாக?

காலங்களை, நிலப்பரப்புகளை, மலைகளை, கடல்களைக் கடந்து நிற்கிறது சாதி, அதிகாரமாக நிற்கும் சாதி, ஆதிக்கம் செய்யும் சாதி, கொலை செய்யும் சாதி, மலம் தின்னவைக்கும் சாதி, சிறுநீர் குடிக்க வைக்கும் சாதி, படுகொலை செய்யும் சாதி, பலாத்காரம் செய்யும் சாதி, ஊருக்குள் நுழையவிடாத சாதி, கோவிலுக்குள் நுழையவிடாத சாதி, கூலி தர மறுக்கும் சாதி, குடிசையை எரிக்கும் சாதி, கோவிலை மூடும் சாதி, குழந்தையைக் கொல்லும் சாதி, குடிநீரில் மலம் கலக்கும் சாதி, செத்த மாட்டைச் சுமக்கச் சொல்லும் சாதி, சுடுகாட்டில் இடம் தர மறுக்கும் சாதி, கலவரம் செய்யும் சாதி, ஓட்டாக மாறும் சாதி. சாதி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. தனக்கு முன்னாலிருக்கும் அதிகாரத்தின், சமூக நிறுவனங்களின் அமைப்பை அது முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, நிலப் பிரபுத்துவம், காலனியம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இவற்றினூடாக வளர்கிறது, வாழ்கிறது, நிகழ்கிறது, செயல்படுகிறது சாதி.

மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட பலர், பல்வேறு விதங்களில் பங்கேற்று நிகழ்த்திய வரலாற்றை உள்ளடக்கியவை தான் கோயில் நுழைவுப் போராட்டங்கள். இன்றைய போராட்டக் களத்திற்காகக் கடந்தகாலத்திலிருந்து கற்றுக் கொள்ளும் ஒரு பாடமாகத்தான் இருக்கின்றன இந்தப் போராட்டங்கள்.

நூற்றாண்டு கடந்து ஒரு உரிமைக்காகத் தொடரும் போராட்டமும் அந்த உரிமையை மறுத்து அதற்கு எதிராக நிற்கும் சாதிய ஆதிக்கமும் நமக்கு முன்னால் இருக்கும் கேள்வி, நூற்றாண்டுக்கு முன்னால் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் காந்திக்கும் முன்னால் இருந்த அதே கேள்விதான்.

“சாதியாதிக்க நோய்பிடித்த இந்துக்களின் மனதை நாம் மாற்றியிருக்கிறோமா?”

கோயிலில் நுழைவது என்பது உரிமையைப் பெறுவதற் காகவே, அந்தப் பொதுவுரிமைப் போராட்டம் நம்மைச் சக மனிதனாக உணர மறுக்கும் இந்துத்துவத்தின் அதிகார மையத்தைத் தகர்த்து அதன் ஒடுக்குமுறையை அழிக்கும் அல்லது உண்மையில் பக்திகொண்ட ஒரு மனிதனைப் பிறப்பால் உயர்வு தாழ்வு சொல்லி அவனை மறுக்கும் ஒரு அமைப்பை ஒழிக்கும் ஒரு செயல்பாடுதான் இந்தப் போராட்டம். இதில் மதத்தில் இருந்துகொண்டே போராடிய காந்தி, மதத்தைவிட்டு வெளியேறிப் போராடிய அம்பேத்கர், எனது உரிமையை யாரிடம் கேட்டுப்பெறுவது நாமே வென்றெடுப்போம் என்று கிளர்ச்சி செய்த பெரியார், மக்களைத் திரட்டிப் போராடிய பொதுவுடமை இயக்கங்கள் எனப் பல போராட்ட வடிவங்கள்.

கோயில் நுழைவு, கருவறை நுழைவு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர், சம வழிபாட்டு உரிமை எனப் போராட்டங்கள் தொடர்ந்தாலும் அதற்குத் துணை செய்யும் சட்டங்கள் வந்த பின்னரும் இவற்றுக்கு எதிராக நிற்கும் கூட்டத்தினருக்கும் அவர்களது நோய் பிறரது வாழ்வுக்கும் நலத்திற்கும் தீங்காக இருக்கிறது என்பதை உணரச் செய்வதும் இன்றைய தேவையாக இருக்கிறது அதே வேளையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் சட்டமாக்கப்பட்டாலும் சாதிய மேலாதிக்கப் பார்ப்பனர்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி வெளியேறும் பார்ப்பனரல்லாத அரச்சகர்களுக்கான பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்வது அரசின் கடமை. கோயில் என்பது ஒரு வழிபாட்டு இடம் மட்டுமே; அதன்மேல் கற்பிக்கப்படும் புனிதமோ, தெய்வீகத்தன்மையோ யாரோ ஒருவரை ஒடுக்குவதற்காகவோ, யார்மீதோ அதிகாரத்தைச் செலுத்துவதற்காகவோ செய்யப்படும் ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொள்ள வைப்பதும்தான் இந்த நூலின் நோக்கம்.

“தவறிழைக்காதவர்கள் எனக்கூறிக் கொள்ளும் சமயத் தலைவர்களையும் நேருக்கு நேராக எதிர்க்கத் துணிந்து, அவர்கள் தவறிழைக்காதவர்கள் அல்ல என்று வாதிட வல்ல புரட்சியாளர்களாலேயே இந்த வையம் வாழ்கிறது. இந்தப் புரட்சியாளர்களுக்கு முற்போக்குச் சமுதாயம் கொடுக்கவல்ல மதிப்பைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் அவர்களின் நோய் பிறரின் நலத்திற்கும், வாழ்வுக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது என்பதை அவர்கள் உணரும்படிச் செய்துவிட்டால் அதுவே எனக்குப் போதும்”

  • புரட்சியாளர் அம்பேத்கர்.

கோயில் நுழைவுப் போராட்டம்: ஆவணங்களும் கட்டுரைகளும்

தொகுப்பு: பூபதிராஜ். எஸ், அமுதரசன். பா

தடாகம்‌ பதிப்பகம், மக்கள் பதிப்பு விலை : ரூ 400

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *