மூலதனப் பற்றாக்குறை

1 min read

விரல்கள் பத்தும்
மூலதனம்

யார்ரா இத எழுதுனது?
எரிச்சல் மேலிடக் கேட்கிறான் சகா

பதிலுக்குக் காத்திராமல்
பழுதுள்ள வரிகள்
பழுதுள்ள வரிகள்
என்று
முணுமுணுக்கிறான்

ஏன்டா என்னடா ஆச்சு

கொல்லைப்புறத்தில்
வீட்டையொட்டி
அந்த முருங்கை மரத்தை
நான் வைத்திருக்கக் கூடாது

படரும் அதன் நிழலில்
கொடியைக் கட்டியிருக்கக் கூடாது

அந்தக் கொடியில்
கொண்டு போய்
உள்ளாடைகளைக்
காயப் போட்டிருக்கக் கூடாது

மசங்கும் நேரத்தில் போயதை
எடுத்திருக்கக் கூடாது

மடித்து வைக்கச் சோம்பி
அலமாரித் துணிக்குவியலில்
திணித்திருக்கக் கூடாது

அதெல்லாம் கூடப் பரவாயில்லை

அத்தனை அவசரமாய்
உதறிப் பார்க்காமல்
உள்ளே நுழைந்திருக்கக் கூடாது

ப்யூர் காட்டன்தான்
கம்பளி கலந்திருப்பதைக்
கவனித்தேனில்லை

கண நேரந்தான்
கச்சேரி துவங்கியது

உள்ளாடைப் பிரதேசமெங்கும்
ஒரே
உருமி மேளம்

நின்றபாடில்லை

விரல்கள் பத்தும்
மூலதனமாம்

எத்தனை
போதாமை மிக்க வரிகளிவை.

லிபி ஆரண்யா.

You May Also Like

+ There are no comments

Add yours