மோடி எனும் சர்வாதிகாரி வீழட்டும்!

ஆர்எஸ்எஸ் எனும் பாசிச கொள்கையால் வழி நடத்தப்படும் பாஜக , இதுவரை தன்னை ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தன்னைக் கீழ்படுத்திக் கொண்டதாகவே இருந்து வருகிறது.

ஆர்எஸ்எஸ் எனும் பாசிச அமைப்பின் செயல் வீரர்கள் பாஜக கட்சியில் திணிக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. சில நேரங்களில் ஆர்எஸ்எஸ் இடமிருந்து தன்னை விலக்கிக் காண்பிக்க முயற்சித்த பாஜகவும் அதன் தலைவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அஞ்சியே நடந்து வந்தனர். அப்படி அதன் கட்டளையை மீறியவர்கள் அரசியலில் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அத்வானி ஒரு முறை பாகிஸ்தான் சென்றிருந்த போது பாபர் மசூதி இடிப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த போது அது ஒரு துயர நினைவு என்றார். அதற்காக ஆர்எஸ்எஸ் அவருக்கு மிரட்டல் விடுத்து பாஜகவின் பொறுப்புகளில் இருந்து விலகச் சொல்லி அழுத்தம் கொடுத்தது. வேறுவழியின்றி அத்வானி ஆர்எஸ்எஸ் க்குப் பணிந்தார்.

பாபர் மசூதி இடிப்பை நடத்துவதற்கு அத்வானி முன்னெடுத்த ரத யாத்திரை அடுத்தடுத்த தேர்தல்களில் மாபெரும் வெற்றியை பாஜகவுக்கு ஈட்டித் தந்த போதும் அத்வானி பின்னாளில் தூக்கியெறியப்பட்டார்.

நீண்டகாலமாக சங் பரப்புரையாளராக இருந்த மோடி குசராத்திற்கு பொறுப்பு மாற்றப்பட்டு 2001 ல் முதல்வராகவும் அமர்த்தப்பட்டார். அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே சபர்மதி விரைவுத் தொடர் வண்டி தீக்கிரையாக்கப்பட்டதும் அதில் சாதுக்கள் கொல்லப்பட்டதும் அதன் தொடர்ச்சியாக குசராத்தில் முசுலீம்களுக்கு எதிரான மாபெரும் இனப்படுகொலையை சங்பரிவார அமைப்புகள் கட்டவிழ்த்துவிட்டன.

அப்போது உளவுத்துறைத் தலைவராக இருந்த ஸ்ரீகுமார் குசராத் படுகொலை வழக்கை விசாரித்த நானாவதி ஆணையம் முன்பு அரசுப் பொறியமைவுகள் முசுலீம் வெறுப்போடு நடந்து கொண்டன என சாட்சியமளித்தார்.

மற்றொரு உயர் காவல் அதிகாரியான சஞ்சீவ்பட் இந்துக்கள் தங்கள் சீற்றத்தைத் தீர்க்க அனுமதியுங்கள் என மோடி உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்ததாக அதே ஆணையத்தில் உறுதிமொழி பத்திரம் கொடுத்தார்.

அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த பாஜகவின் தலைமை அமைச்சர் வாஜ்பாயியே இராஜ நீதியைப் பின்பற்றும் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு அத்வானி வெளியேற்றத்தால் உருவான வெற்றிடத்தை மோடியைக் கொண்டு நிரப்ப ஆர்எஸ்எஸ் முடிவு செய்தது. உடனடியாக பாஜகவின் தேசியக் குழுவில் முதன்மைப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார்.

மோடி – அமித்சா ஆகியோரின் குசராத் கும்பலாட்சி அரசாட்சி முறையும் தனக்கு எதிரான போட்டியாளர்களை ஓரங்கட்டி தனது செல்வாக்கை நிலைநிறுத்தியதும் ; இந்துத்துவ அரசியலை பெருமுதலாளிய சுரண்டலோடு இணைத்து குசராத் மாடல் வளர்ச்சி என விளம்பரம் செய்ததும் 2014 நாடாளுமன்றத்திற்கான பிரதம வேட்பாளராக ஆர்எஸ்எஸ் மோடியைத் தேர்வு செய்தது.

10 ஆண்டுகள் ஐ.மு.கூ அரசின் செயல்பாடுகளையும் அதன் தலைமை அமைச்சரான மன்மோகன்சிங்கையும் வலுவில்லாத பிரதமர் என வசைபாடியது.

பெருமுதலாளிகளின் சுரண்டல் பசிக்கு பத்தாண்டு கால ஐ.மு.கூ அரசில் உறுப்பு வகித்த இடதுசாரிகள் , மாநிலக் கட்சிகள் தடையாக இருந்தது. அதனை உற்றுநோக்கிய ஆர்எஸ்எஸ் ஒன்றியத்தில் வலுவான தனிப்பெரும்பான்மை பெற்ற அரசு என்ற பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டது. இந்தப் பரப்புரை ஏற்கனவே குசராத் மாடல் கார்ப்பரேட் சுரண்டல் என்பதால் பெருமுதலாளிகளின் உள்ளத்தைக் கவர்ந்தது. கோடிக்கணக்கான ரூபாய் செலவும் , ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர பரப்புரையும் மோடியை தலைமை அமைச்சர் பதவிக்கு உயர்த்தியது.

பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்தே அவர் நடத்தும் மான்கீபாத் நிகழ்ச்சி அவர் மட்டுமே பேசும் ஒரு வழி பரப்புரையாக இருந்தது. பத்தாண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்க மறுத்த ஒரே பிரதமராக மோடி மட்டுமே இருந்திருப்பார். இவை எல்லாம் தன்னுடைய தனிநபர் சர்வாதிகார பிம்பம் குலைந்துவிடக் கூடாது என்பதற்காக மோடி செய்து கொண்ட முன் ஏற்பாடுகள்.
அதேபோல வகைவகையான உடுப்பும், தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் கேமிரா விளம்பரமும் இவை ஒரு சர்வாதிகாரியாக தன்னை நலைநிறுத்திக் கொள்ள அவர் செய்த ஒப்பனைகள்.

தன் பெயரை ஒரு விளையாட்டுத் திடலுக்குச் சூட்டியது; தன்னை சவுகிதார் என அழைத்துக் கொண்டது; தன்னுடைய கட்சியின் தலைவர்களையே பெகாசஸ் உளவுச் செயலி வழி உளவு பார்த்தது என அவரின் தோற்றம் , செயல் அனைத்தும் சர்வாதிகார பிம்பத்தை கட்டியமைப்பதற்கான அவருடைய கடும் முயற்சியைக் காட்டுகிறது.

அரசின் முடிவுகள் அமைச்சரவையைத் தாண்டி தனது சிறு கும்பல் எல்லைக்குள் வைத்துக் கொண்டது அது பண மதிப்பு நீக்க அறிவிப்பாக இருக்கட்டும் , முப்பைடயின் தலைவரை தேர்ந்தெடுத்ததாகட்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை உச்ச பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக் கொண்டதாகட்டும் அரசு நிர்வாக அமைப்புகளை குசராத் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பியதாகட்டும் அரசு நிர்வாகம் அனைத்தையும் தனது நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவர்களைக் கொண்டு அமைத்துக் கொண்டார்.

நாடாளுமன்றத்தை முத்தமிட்டு தனது பிரதமர் அலுவல்களைத் தொடங்கிய மோடி நாடாளுமன்றத்தில் மன்னராட்சி சர்வாதிகாரத்தின் குறியீடான செங்கோலை துறவிகள் புடைசூழ ஏந்தி வந்து புதிய நாடாளுமன்றத்தின் மையக் கட்டிடத்தில் வைத்துக் கொண்டார். தன்னை இந்துராஷ்டிரம் எனும் பார்ப்பன ராஷ்டிரத்தின் சத்திரியனாக அடையாளப்படுத்திக் கொண்டார்.

இராமர் கோயில் திறப்பு விழாவில் பழைய இந்து வேத புராணிக மரபின் படியாக சத்திரியனே பூசைக்கு தலைமை ஏற்கும் தலைம்ப் பூசாரியாக நிறுவிக் கொண்டார். இது பார்ப்பன சநாதன தர்மிகளைக் கூட வியப்பிலும் வருத்தத்திலும் ஆழ்த்தியது.

நாடாளுமன்றத்தை குறுக்கு வழியில் முடமாக்கியதோடு எந்த வாதங்களும் முறையாக நடத்தாமலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் மற்றும் பதவி பறித்தும் தனது சர்வாதிகாரத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டார்.

இந்த ஆட்சியில் எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. எல்லாம் ஆணைகளும் அடிபணிதல் மட்டுமே. தனது விசுவாசமான அடிமைகளைக் கொண்டு கோவிட் நோய்த் தொற்றின் போது நாட்டு மக்களை மந்தைக் கூட்டம் போல மணியடிக்க வைத்ததும் விளக்கு எந்த வைத்ததும் அவர் ஆணைக்கு அடிபணிந்த மக்கள் கூட்டமாக நகைப்புக்கு உரிய வகையில் நாட்டை மாற்றினார்.

திடீர் அறிவிப்புகள் மூலம் ஆயிரம், ஐநூறு பணத்தாள்களை மதிப்பிழக்கச் செய்தார். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென நாடுதழுவிய பொது முடக்கத்தை அறிவித்தார் இவை எல்லாம் சர்வாதிகார அறிவிப்பின்றி வேறு என்னவாக இருக்க முடியும்.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் இந்த அரசிடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கோவிட் இறப்புகளை பல மடங்கு மறைத்தது. வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரங்களை வெளயிட்ட அரசு அதிகாரிகளை அடையாளம் தெரியாமல் செய்தது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது.

பெகாசஸ் உளவுச் செயலியைக் கொள்முதல் செய்த தகவல்களை நாடாளுமன்றத்திற்கே மறைத்தது. மக்களின் உரிமைகளுக்காக மோடியை விமர்சித்த அறிவாளிப் பிரிவினரை ஆண்டுக் கணக்கில் கொடுஞ்சட்டத்தில் சிறையில் தள்ளியது. கேள்விகளை எழுப்பிய ஊடகங்களை வழக்குகளைப் பதிவு செய்து அச்சுறுத்தியது. களத்தில் தீரமுடன் போராடிய மாணவர்களை ஒடுக்க குண்டர்களை பல்கலைக்கழகங்களுக்குள் ஏவியது. கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமையை எந்தக் காரணமுமின்றி கேள்விக்குறியாக்கியது. உண்பதும் உடுப்பதும் , காதலிப்பதுமான அனைத்தும் பண்பாட்டுக் குண்டர்களின் கண்காணிப்புக்குள் வந்தது.

தனது அரசின் வெற்றிகளாக தாராளாமாகப் பொய்ச் செய்திகளை மின்னல் போல் டிஜிட்டல் வானரங்களை வைத்து பரப்பியது. இவ்வாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தாண்டிய சர்வாதிகாரியாக மோடி பிம்பம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது இந்த நாட்டின் சனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது.

மோடி தலைமையிலான பாஜக மறுபடியும் தேர்தலில் வெற்றி பெறுமானால் எந்தப் பாராளுமன்றத்தை முத்தமிட்டு ஆட்சியைத் தொடங்கினாரோ அந்தப் பாராளுமன்ற முறைக்கே முடிவுரை எழுதுவார் என்பது உறுதி.

நாட்டின் சனநாயக , சமத்துவ விழுமியங்களைக் காக்க பாஜக தேர்தலில் தோல்வியடைய வேண்டியது இன்றைக்கு அனைத்து மக்களின் உடனடித் தேவை.
பாஜகவை தேர்தலில் தோற்கடிக்கும் வல்லமை திமுக ,காங்கிரசு , இடதுசாரிகள் , சனநாயக கட்சிகள் உள்ளிட்ட பலரடங்கிய இந்தியா INDIA கூட்டணிக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்து அதனைத் தேர்தலில் வெற்றியடைய வாக்குகளைத் தவறாமல் செலுத்துவோம்!

எழுத்தாளர் :

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *