தலைவர்கள் மேடையில் பேசுவதை கண்டு புல்லரித்துப் போகாதீர்கள்!அவர்கள் கொள்கை திட்டம் என்னவென்று பாருங்கள்!

1 min read

உதடுகள் தமிழர் உரிமை பேசுகின்றன!
ஆனால், திட்டங்கள் இந்துராஷ்டிர உருவாக்கத்திற்கானவை!

ஆர். எஸ். எஸ். இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து செயல்பட்டு வருகிறது. இந்திக்காரர்கள், இந்து மதத்தவர்கள் (பார்ப்பனர்கள்) கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் வரவேண்டும் என்பதுதான் இந்துத்துவவாதிகளின் ஆசை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நேரடியாக பாஜக கட்சியையும், மறைமுகமாக பல்வேறு கட்சிகளையும் இயக்கி வருகிறது. ஆர். எஸ். எஸ். – இன் நேரடியான அரசியல் பிரிவான பா.ஜ.க. மற்றும் அது வளர்த்து வரும் மறைமுக இந்துத்துவக் கட்சிகள் முன்வைத்துவரும் “குடியரசுத் தலைவர் முறை ” மிக ஆபத்தானது!

பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர். எஸ். எஸ். ஒரு இந்துராஷ்டிரத் திட்டத்தை வைத்திருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் இந்து ராஷ்டிரம் அமைக்கப்படும் என்று ஆர். எஸ்.எஸ். – இன் தலைவர் மோகன் பகவத் அறிவித்திருக்கிறார். இந்திராஷ்டிர அரசியல் சட்டம் 32 பக்க அளவிற்கு 14.08.2023 அன்று வரைவு செய்து சாமியார்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டம் நீக்கப்பட்டு இந்து ராஷ்டிர அரசியல் சட்டம் கொண்டுவரப்படும்; முஸ்லிம், கிறிஸ்தவர் இங்கு வாழ முடியாது; வாழ்வதாக இருந்தால் இந்து மதத்திற்குத் திரும்பி சூத்திரர்களாக பஞ்சமர்களாக இருக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என அறிவிக்கிறார்கள்.
அரசு இயந்திரமும் காவல்துறையும் இராணுவமும் இந்துத்துவமயமாக்கப்பட்டிருக்கிறது. இராணுவ பயிற்சி பள்ளிகளான சாய்னிக் (SAINIK) பள்ளிகளில் 63 விழுக்காடு இந்து மதவெறி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாய்னிக் பள்ளிகள் ராணுவ அதிகாரிகளாக இருக்கும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து இந்து மத வெறியர்களாகத் தயாரிக்கின்றன. பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற சாத்வி ரிதம்பரா பொறுப்பேற்று இரண்டு சாய்னிக் பள்ளிகளை நடத்துகிறார். எதிர்காலத்தில் இந்திய ராணுவம் யாருக்காக எப்படி செயல்படும் என்பதை நினைத்தால் நெஞ்சு பதறுகிறது.

இந்துத்துவ பா.ஜ.க. அதிகாரத்தில் தொடர்ந்தால்
இதே அரசியலமைப்புச் சட்டம் தொடரும் என்று கூற முடியாது. தமிழ்நாடு என்ற மாநிலம் இருக்குமா? என்பது சந்தேகம்தான். காஷ்மீருக்கு என்ன நடந்ததோ, மணிப்பூருக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அது தமிழ்நாட்டுக்கு நடக்காது என்று எவரும் கூற முடியாது.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னுடைய மறைமுக கட்சிகள் மூலமாகவும், சுவீகார புத்திர அமைப்புகள் மூலமாகவும், இந்தியாவின் அரசியலமைப்பை மாற்றிவிட்டு “ஒரே நாடு, ஒரே தலைமை, ஒற்றை ஆட்சி” என்பதை நிலை நிறுத்தும் வகையில்,இந்திக்காரர்கள் தலைமையையும் இந்துத்துவத்தின் தலைமையையும் நிரந்தரப்படுத்தும் வகையில், “குடியரசுத் தலைவர் முறை”யை ஆதரித்து கருத்து பரவலை மேற்கொண்டு வருகிறது. குடியரசுத் தலைவர் முறையை ஆதரிக்கும் வகையில் மக்களை தயார்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. மேடையில் அவர்கள் தேனொழுகப் பேசுவது, தமிழர் உரிமை பற்றி உணர்ச்சிகரமாக பேசுவது, பழைய மனோகரா திரைப்பட வசனம் போல உணர்ச்சிகளைக் கொட்டி பேசுவது, வீரபாண்டிய கட்டப்பொம்மன் வசனம் போல வீரவசனங்களை ஆக்ரோஷமாகப் பேசுவது – என்பதெல்லாம் மேடைகளில் நடந்தது. அதிகம் விபரம் அறியாத இளைஞர்களுக்கு இவையெல்லாம் வாயைப் பிளக்க வைக்கின்றன. ஆனால் மேடைகளில் பேசுவது வேறு; அவர்களின் வேலைத்திட்டம் வேறு. உண்மையில் அவர்களின் வேலை திட்டம் என்ன? என்பது ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க கூடிய இளைஞர்களுக்குத் தெரியாது.

ஒரு நிகழ்ச்சியைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நாடறிந்த தமிழறிஞர் ஒருவர் தினமணி இதழில் நடுப்பக்கக் கட்டுரை எழுதி இருந்தார். அதன் கரு இந்தியாவுக்கு “குடியரசு தலைவர் முறை ” கொண்டுவரப்பட வேண்டும் என்பது. இதை படித்து விட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். குடியரசுத் தலைவர் முறை என்றால் என்ன என்று அறிந்தவர்களுக்குதான் அது அதிர்ச்சியாக இருந்தது. (இப்போது இந்தியாவில் இருப்பது பாராளுமன்ற ஜனநாயக முறை. மொழி வேற்றுமைகள் இல்லாத, பல்வேறு மத வேறுபாடுகள் இல்லாத, கலாச்சார பன்மைத்துவம் இல்லாத நாடுகளில் குடியரசு தலைவர் முறை இருப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் இந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் முறை என்பது பல்வேறு தேசிய இனங்களையும், மொழியின அடையாளத்தையும், பல்வேறு மதத்தவர்களையும், மாறுபட்ட பண்பாடுகளையும், ஒடுக்குவதற்கான மோசமான உத்தி.இதைத்தான் ஆர்எஸ்எஸ் காரர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். )
சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய மாணவர் எனக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அந்த மாணவர் “இந்த ஆள் என்ன கிறுக்கனா? குடியரசுத் தலைவர் முறை என்றால் என்னவென்று அவருக்குத் தெரியுமா? அவருக்கு அறிவே கிடையாதா?” என்றெல்லாம் ஆத்திரத்துடன் புலம்பினார். ஏனென்றால், அம்மாணவருக்கு அரசியல் அறிவியல் தெரியும்.

அரசுமுறைகளில் (1) பாராளுமன்ற ஜனநாயகம் (Parliamenrary Democracy) (2) குடியரசுத் தலைவர் ஜனநாயக முறை (Presidential Democracy) என்று இரண்டு உண்டு. பாராளுமன்ற ஜனநாயக முறை இங்கிலாந்தில் இருந்து நமக்கு கிடைத்தது. பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் மொழி பிரச்சனையில்லாத, பல மதங்கள் முரண்படும் பிரச்சனை இல்லாத, தேசிய இனங்களின் பன்மைத்துவம் இல்லாத, பல்வேறு பண்பாட்டு கூறுகளில் முரண்பாடு இல்லாத நாடுகளில் குடியரசுத் தலைவர் முறை என்பது இருக்கலாம். அதில் சிக்கல் வருவதில்லை. ஆனால் இந்தியா போன்ற மொழிப் பன்மைத்துவம், பண்பாட்டுப் பன்மைத்துவம், பல்வேறு தேசிய இனங்களின் இருப்பு கொண்ட ஒரு நாட்டிற்கு குடியரசுத் தலைவர் முறை ஏற்புடையது அல்ல என்பதால் தான் பாராளுமன்ற ஜனநாயக முறையைத் தெரிவு செய்தார்கள்.

பாராளுமன்ற ஜனநாயக முறையில் பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்கிறார்கள். இத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் யாரை அல்லது எந்த கட்சியை அதிக உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்களோ அவர் அமைச்சரவையை (Cabinet ) அமைக்கிறார். பல்வேறு கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் அமைச்சரவை தற்போது அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியினமும், மதத்தவரும் தங்கள் குரலை எழுப்பவும், தங்களுடைய தேசியஇன மக்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஒரு வாய்ப்பை அளிக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயக முறையில் கேபினட் என்று சொல்லக்கூடிய “அரசு” நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது (answerable to the House). பிரதமருக்கு எவ்வளவு காலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதோ அதுவரைதான் பிரதமரும் அவருடைய அமைச்சரவையும் பதவியில் இருக்க முடியும்.

ஆனால் குடியரசுத் தலைவர் முறை என்பது அப்படி அல்ல. நாட்டில் உள்ள மக்கள் நேரடியாக அல்லது வாக்காளர் குழுவால் (Electoral College) தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த நிர்வாக அதிகாரங்களையும் கைக்கொண்டு ஆளுகிறார். நாடாளுமன்றத்திற்கும் அவருக்கும் தொடர்பில்லை. நாடாளுமன்றத்திற்கு அவர் பதில் சொல்ல கடமைப்பட்டவர் இல்லை. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருக்கும் நான்கு/ஐந்து ஆண்டுகளுக்கு எந்த முடிமன்னரை விடவும் அதிகாரம் மிக்கவராக இருப்பார். பாராளுமன்ற ஜனநாயக முறையில், எத்தனையோ மோசமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தடுக்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் என்பவர் நாடாளுமன்றத்தின் தயவில்தான் பதவி வகிக்கிறார்.

இந்த வாய்ப்புகள் குடியரசுத் தலைவர் முறையில் இருக்காது. நன்கு விவாதித்து, இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்படும் மசோதாக்களை குடியரசுத் தலைவர் என்பவர் வீட்டோ (மறுபாணை ) அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்த்துக் கட்டுவார்; அல்லது திருப்பி அனுப்பி விடுவார். இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் (2/3) ஆதரவு இருந்தால்தான் அதை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு என்பது இருப்பதே இல்லை. பெரும்பாலும் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினால் அந்த மசோதா இறந்து போனதாகவே பொருள்.

நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்டவர்கள் இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துக் கட்டிவிட்டு குடியரசுத் தலைவர் முறையைக் கொண்டு வர வேண்டும் என்று கூறி வந்திருக்கின்றனர்.

இந்தியாவில் 2011 -ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில், இந்தி பேசுகிறவர்கள் 57% , பெங்காலி பேசுகிறவர்கள் 8.9% , மராத்தி பேசுகிறவர்கள் 8.2 % ,தமிழ் பேசுகிறவர்கள் 6.3.

அதுபோன்றே இந்தியாவில் இந்துக்கள் 79.80%, இஸ்லாமியர் 14.23% , கிறித்தவர்கள் 2.3%, சீக்கியர் . 1.72%.

இச்சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் முறையை ஏற்றுக் கொண்டால், இந்தியாவுக்கு ஓர் இந்திக்காரர் தான் குடியரசுத் தலைவராக (நிரந்தரமாகவே) வர முடியும்; ஓர் இந்து மதத்தவர்தான் நிரந்தரமாக குடியரசுத் தலைவராக வர முடியும். இதையெல்லாம் ஆலோசித்துத்தான் பாராளுமன்ற ஜனநாயக முறையை அரசியல் சான்றோர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
குடியரசுத் தலைவர் முறை என்பதில், மக்கள் நேரடியாக வாக்களித்து ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து விட்டு, ஐந்து ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும். ஆர் எஸ் எஸ் -இன் எதிர்பார்ப்பு இதுதான் : குடியரசுத் தலைவரின் ஆணைகள் மூலம் கச்சிதமாக இந்துத்துவத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி விட முடியும். அதை தடுத்து நிறுத்தி விட முடியாது. குடியரசுத் தலைவர் மீது குற்றவிசாரணை செய்வது என்பது எப்போதாவது நிகழ்வது உண்டு. அது எளிதானதல்ல.

அதிபர் ஆட்சி முறை என்பதும் குடியரசுத் தலைவர் ஆட்சி முறை என்பதும் ஒன்றுதான். சமீப காலமாக குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. பலருக்கு நாடாளுமன்ற முறைக்கும் குடியரசுத் தலைவர் முறைக்கும் இடையிலான வேறுபாடு என்பது தெரியாததால், பலருக்கு ஜனநாயக விரோதிகளை அடையாளம் காண முடியவில்லை.

தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் ஏற்காத ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டமான குடியரசுத் தலைவர் அதிபர் முறையை நாம் தமிழர் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் ஏற்றுப் பேசியிருக்கிறது:

” இந்திய ஒன்றியம் என்பது ஒரு குடியரசு நாடு. ஆனால் இந்நாட்டின் முதல் குடிமகனை குடியரசு தலைவரையே குடிமக்களால் நேரடியாகத் தேர்வு செய்ய முடியாத நம் அமைப்பு முறை குடியரசுக் கோட்பாட்டிற்கு நேர் எதிரானதாகும். அனைத்து சட்டங்களும் குடியரசுத் தலைவரின் கையொப்பத்தினாலேயே செயலாக்கம் பெறுகின்றன. மக்களால் தேர்வு செய்யப்படக்கூடிய ஒருவர்மீண்டும் மக்களைச் சந்தித்துத் தான் வெற்றி பெற வேண்டும் என்ற தேவை இருக்கின்ற வரையில்தான் அம்மக்களின் நலனுக்காக செயலாற்றுவார். எனவே தலைவர் மக்களால் நேரடியாக தேர்தலின் வழியே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவாகும்.”

குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், இந்தியாவில் இந்தி பேசுகிற ஒருவர்தான் குடியரசுத் தலைவராக வர முடியும்; இந்து மதத்தை சேர்ந்தவர் தான் குடியரசுத் தலைவராக வர முடியும். அவர்களுக்கு வேறு மதத்தவரின், வேறு மொழியினத்தவரின் ஆதரவு தேவையில்லை; இந்திக்காரர்களும் இந்து மதத்தவரும் மட்டுமே போதும்.

இது ஆர்.எஸ்.எஸ். இன் வேலைத்திட்டங்களில் மிக முக்கியமானது. தமிழ்நாட்டில், இந்த சூழ்ச்சிகரத் திட்டத்தை தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தங்களுடைய கொள்கை முடிவாக அறிவித்திருக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இந்த அபாயத்தை உணராதவர்கள்தான் கைத்தட்டுகிறார்கள்; ஆர்ப்பரிக்கிறார்கள்; குதூகலம் அடைகிறார்கள்; தமிழ்நாட்டை, தமிழினத்தை, தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்று நினைக்கும் எவரும் குடியரசுத் தலைவர் முறை என்ற திட்டத்தை எவர் கைக் கொண்டாலும் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

ஆர் எஸ் எஸ் அமைப்பு தலைவர்கள் அறிவாளிகள்தான். பேச்சிலும், எழுத்திலும் வல்லவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தங்கள் நாசகார திட்டங்களை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த முயன்று வருகிறார்கள். இம்முயற்சியை அடையாளம் காட்டுவதும், முறியடிப்பதும் நம் கடமை.

-பேராசிரியர் த.செயராமன்
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்.

You May Also Like

+ There are no comments

Add yours