‘அறம்’ இருக்கிறதா சாவித்திரி கண்ணன்?

“பெரிதும் வியக்கிறேன் இரு இடதுசாரி கட்சிகளின் நிலைபாட்டைப் பார்த்து” என்ற மூத்த ஜார்னலிஸ்ட் ஸாரி, மூத்த விஜய்யிஸ்ட் சாவித்திரி கண்ணன் முகநூலில் புலம்பி தள்ளியிருக்கிறார்.
அத்துடன், “மதில் மேல் பூனை போல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும், “திமுக அரசின் ஊழல்களை தவெக அரசு அம்பலப்படுத்தினால் இடதுசாரிகளுக்கு ஏன் கோபம் வருகிறது” என்றும் குதியாட்டம் போட்டிருக்கிறார்.
முதலில் சாவித்திரி கண்ணன் யார்? துக்ளக் சோவின் சிஷ்ய பிள்ளை. அவருக்கு இடதுசாரி கட்சிகள் மீது அப்படி என்ன காதல் என்ற கேள்வி இயல்பாக எழும். சோவிற்கு இடதுசாரிகள் மீது என்ன மதிப்பிருக்குமோ, அதே அளவு தான் சாவித்திரி கண்ணனுக்கும். ஆனால், நடுநிலையாளர் போல வேடம் போட்டுக் கொண்டவர். அதற்காக தன் இதழுக்கு ‘அறம்’ என்று பெயர் சூட்டிக் கொண்டவர்.
தமிழ்நாட்டில் அறுதிப்பெரும்பான்மை பெறாத தவெகவிற்கு இடதுசாரிகள் ஆதரவு தந்ததால் தான் ஆட்சி அமைந்தது. ஆளுநர் மூலம் பாஜகவின் குடியரசு தலைவர் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக விஜய்யை இடதுசாரிகள் ஆதரித்தனர். ஆனால், அப்படி ஆதரித்த காரணத்திற்காக தவெக அரசு செய்யும் அராஜகங்களை கண்மூடிக் கொண்டு கண்டிக்காமல் விட்டு விட வேண்டும் என்பது என்ன அறம் சாவித்திரி கண்ணன்?
ஒரு கட்சியை விமர்சனம் செய்வதற்கும் அரசை விமர்சனம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள தவெக செய்யும் அட்டூழியங்களை கண்டும், காணாமல் இருக்கும் சாவித்திரி கண்ணன், அதே போல இடதுசாரி கட்சிகளை இருக்கச் சொல்கிறார்.
அதில் குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிவுரைகளை அள்ளி வழங்கியுள்ளார். அந்த அளவிற்கு உங்களுக்கு அறிவு பொங்கி வழிகிறதா? திமுகவின் கோணத்தில் இருந்து இடதுசாரிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்று அபத்தமாக எழுதியுள்ள சாவித்திரி கண்ணன், விஜய் ஆட்சிக்கு கடந்த சில மாதங்களாக முட்டுக் கொடுக்கும் வேலையைச் செவ்வனே செய்வதை நாடறியும். அதற்காக அவர் விஜய்க்கு அன்றாடம் சாமரம் வீசட்டும், அவர் வீட்டு பத்துப் பாத்திரம் தேய்க்கட்டும். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை.
அன்றாடம் திமுக மீது பாய்ந்து பிடுங்குவது தான் அவருடைய வேலை. அந்த வேலையை இடதுசாரிகளும் செய்ய வேண்டும் என்று கட்டுரை எழுதுகிறார். திமுக மீது அப்படி என்ன அவருக்கு காண்டு? கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள கனியாமூர் தனியார் மெட்ரிக் பள்ளியின் பிளஸ் 2 மாணவி மரணம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பியதாக சாவித்திரி கண்ணன் மீது போலீஸார் குற்றம் சாட்டினர்.
அந்த மாணவியிடமிருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலைக்குறிப்பு போலியானது என்றும், அது உண்மையானது அல்ல என்பதை தடயவியல் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் ‘அறம் ஆன்லைன்’ தளத்தில் சாவித்திரி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சாவித்திரி கண்ணன் 11-09-2022 அன்று கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசிய ஒரு மரணத்தின் பின்னணியில் கருத்து தெரிவித்த சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதைக் கண்டித்த கட்சி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
திமுக தன்னை கைது செய்து விட்டதே என்ற ஆத்திரத்தில் அன்று முதல் சாவித்திரி கண்ணன் எழுதி குவித்து வருகிறார். அவர் எழுதுவதால் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதற்காக அவர் ஆதரிக்கும் விஜய்யை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று விழுந்து விழுந்து எழுதியவர், விமர்சனம் செய்யும் இடதுசாரிகள் மீது இப்போது பாய ஆரம்பித்துள்ளார். அது தான் பிரச்னையே.
நாட்டின் நலன் கருதி இடதுசாரிகள் எடுத்த முடிவை இரண்டும் கெட்டான் என்று விமர்சனம் செய்யும் சாவித்திரி கண்ணன், எதை பெறுவதற்காக அன்றாடம் விஜய் அரசை விழுந்து விழுந்து ஆதரித்து எழுதுகிறார்? மூன்று மாதத்தில் அப்படியென்ன தவெக அரசு சாதனை செய்துள்ளது?
உயிர்ப்புடன் இருக்கிற தலைமைச் செயலகத்தை விட்டு விட்டு சென்னையின் பாரம்பரியமான மீன் பிடி கிராமங்களான முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் மற்றும் நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதியின் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு புதிய தலைமைச் செயலகம் கட்ட விஜய் அரசாணை வெளியிட்டுள்ளார்.
‘சுறா’ படத்தில் மீனவனாக நடித்த விஜய், சென்னையில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்தப்பட்ட போட்ட ஃபிளான் தான் புதிய தலைமைச் செயலக கட்டிடம். பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய இந்த திட்டம் குறித்து சாவித்திரி கண்ணன் நவத்துவாரத்தையும் மூடிக் கொண்டு இருக்கக் காரணம் என்ன? ஃபேட்டா கட்டாயிரும் என்பதனாலா?
பிரதமர் கனவில் இருக்கும் விஜய்யை ஊமைத்துரை என விமர்சிக்கும் சாவித்திரி கண்ணன், இடதுசாரிகள் திமுகவின் கோணத்தில் இருந்து விமர்சனங்களை செய்கிறார்கள் என்று கூறுவது பெரும் நகைச்சுவை. இப்போது இவ்வளவு தீவிரமாக விஜய்யை விமர்சிக்கும் இடதுசாரிகள், திமுகவின் 5 ஆண்டு ஆட்சியின் போது எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு 2025 ஜனவரி 3 முதல் 5-ம் தேதி வரை விழுப்புரத்தில் நடைபெற்றது. அப்போது திமுக ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 46 தீர்மானங்களில் பெரும்பாலான தீர்மானங்கள் தமிழக அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான்.
அப்படி தீர்மானம் நிறைவேற்றியதோடு மார்க்சிஸ்ட் கட்சி நின்று விட்டதா? திமுக ஆட்சியின் போது மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமின்றி அதன் வெகுஜன இயக்கங்களும் 5 ஆண்டுகளில் நடத்திய போராட்டங்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். இந்த விவரம் தெரியாத சாவித்திரி கண்ணன், திமுக ஆட்சியின் போது இடதுசாரிகள் எங்கே போனார்கள் என்று கேட்கிறார். அவர்கள் எங்கேயும் போகவில்லை மக்களுடன் தான் இருக்கிறார்கள். ஆனால், சாவித்திரி கண்ணன் இப்போது இருப்பது ஆதவ் அர்ஜுனா பாக்கெட்டிலா?
தவெக ஆட்சியில் தேனாறும், பாலாறும் பெருக்கெடுத்து ஓடுகிறது போல, அதில் தான் தினமும் சாவித்திரி கண்ணன் நீராடி மகிழ்வது போல எழுதுகிறார். ‘அறம்’ என்ற பெயரை வைத்துக் கொண்டு பெரிய நியாயவாதி போல வேடம் போடுகிறார். நான் மதிக்கும் இடதுசாரிகள் என்று எழுதும் சாவித்திரி கண்ணனைப் பார்த்து கேட்கிறேன், உங்களின் கைதுக்கு காரணமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் அதாவது ஆகஸ்ட் 21-ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அறிவீர்களா?
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடமாம்பாக்கம் கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 22 வீடுகளை கட்டாமலே வீடுகள் கட்டியதாக பணத்தை சுருட்டியவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் நடத்தியதால் ஆத்திரமடைந்த 8 பேர் கொண்ட கும்பல், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் டி.எஸ்.மோகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. முதலமைச்சர் விஜய் வசமுள்ள காவல்துறை இந்த தாக்குதலை நடத்து நிறுத்தவில்லை. ஊழல் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்தை சாவித்திரி கண்ணன் கண்டித்தாரா? தவெக ஆட்சியில் நடந்த இந்த தாக்குதலின் போது வெளிநாட்டில் இருந்தீர்களா சாவித்திரி கண்ணன்?
கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களைப் பட்டியலிட்டு இதற்கு எதிராக என்ன செய்தீர்கள் என்று இடதுசாரிகளைப் பார்த்து சாவித்திரி கண்ணன் கேள்வி எழுப்புகிறார். இப்போது நீங்கள் ஆதரிக்கிற தவெக ஆட்சி தானே நடக்கிறது? லஞ்ச ஒழிப்புத்துறை உங்கள் அரசிடம் தானே உள்ளது? தவறு செய்தவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்?
‘ஆர்எஸ்எஸ்சின் கள்ளக்குழந்தை’ என திருமாவால் நாமகரணம் சூட்டப்பட்ட விஜய் கட்சிக்கு பாஜகவின் ஆதரவும் உண்டு தானே? அவர்களை வைத்து திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? இடதுசாரிகளா தடுக்கிறார்கள்?
அதிமுக ஆட்சியில் ஊழலின் மொத்த உருவகமாக இருந்த முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜய்பாஸ்கரை ‘பரிசுத்தம்’ செய்து தவெகவில் இணைத்தார்கள். அப்போது அவரை தவெகவில் இணைக்கக்கூடாது என சில்க் ஸ்மிதா போல சிணுங்கியவர் தானே நீங்கள்?
விஜய்பாஸ்கரை கட்சியில் சேர்ப்பதன் மூலம்‘தமிழக தற்கொலைக் கழகம்’ என்றாகி விடும் தவெக என்று அறிவுரை கூறினீர்களே? அந்த தற்கொலைக் கழக கட்சியின் தலைவர் விஜய் டேபிளில் இருக்கும் மூன்று ஃபைல்களைத் திறந்து நடவடிக்கை எடுங்கள் என்று தானே மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்? அதில் உங்கள் விஜய்க்கு என்ன பிரச்னை?
ஊழலுக்கு எதிராக நேர்மையான நிர்வாகத்தை நடத்த விஜய் அரசு முயற்சி செய்வதாக சாவித்திரி கண்ணன் எழுதியுள்ளார். “ஆவின் தலைவர் பதவி ரூ.50 லட்சம், அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சம்” என சமூக ஊடகங்களில் கூவிக் கூவி தவெகவினர் விற்கும் போது என்ன செய்தீர்கள் சாவித்திரி கண்ணன்?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை வாங்கிக் கொண்டு தவெக மாவட்டச் செயலாளர் ‘குஷி’ ஆனந்த் நியமித்துள்ளார் என்று உயர்நீதிமன்றத்தில் அதே கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானசௌந்தரி வழக்குத் தொடர்ந்தார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அந்த பெண்மணிக்கு ஆதரவாக சாவித்திரி கண்ணன் குரல் கொடுத்தாரா? லஞ்சம் என வாய்க்கிழிய பேசும் விஜய் என்ன செய்தார்? ஊழல் புகார் கூறிய ஞான சௌந்தரியை கட்சியை விட்டு நீக்கினார். இது தான் அந்த கட்சியின் லஞ்ச லாவண்யமற்ற நடவடிக்கை. இப்படிப்பட்ட ஊழல் புடை நாற்றமெல்லாம் மல்லிகை வாசம் போல சாவித்திரி கண்ணனுக்கு மணக்கிறது.
போலீஸ் ராஜ்யம் மூலம் நடைபெறும் காவல் நிலைய மரணங்கள், கட்டுக்கடங்காத கொலைகள், அன்றாடம் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, வழிப்பறி கொள்ளைகள், தவெகவினரின் அத்துமீறல்கள், அமைச்சர்கள் அளந்து விடும் பொய்கள் என ரீல்ஸ் ஆட்சி நடத்தும் விஜய்யை விமர்சிப்பதற்குப் பதில், இடதுசாரி கட்சிகளுக்கு சாவித்திரி கண்ணன் பல்வேறு அறிவுரை கூறுகிறார்.
ஆண்டுக்கு ஆண்டு தனக்குத்தானே மலர் மாலை போட்டு பிணம் போல காட்சித்தந்த சோவின் துக்ளக் ஆண்டு விழாவை காப்பி எடுத்து விழா நடத்தி வரும் சாவித்திரி கண்ணனிடம் நான் கேட்பது உங்கள் இதழுக்கு பெயர் மட்டும் ‘அறம்’ என்று இருந்தால் போதுமா?
விஜய் ஆட்சி சட்டத்தின்படி தான் நடக்கிறதா என்பதை அறத்துடன் நீங்கள் ஏன் எழுதத் தயங்குகிறீர்கள்? விமர்சனம் என்பது பிடி இல்லாத கத்தி. அது பிடித்திருப்பவர்களையும் காயப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.
-ப.கவிதா குமார்
Comments (...)
You must be logged in to leave a comment.
