தமிழ்நாடு எந்த உரிமைகளுக்காக இந்நேரம் போராட வேண்டும்?

தொடரும் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து இளைஞர்களும் மாணவர்களும் துணைக்கண்டத்தின் தலைநகரில் மோடி அமித்சா கும்பலின் ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். காந்திய வழியில் நீதி கேட்டு சோனம் வாங்க்சுவும் அவரோடு கரப்பான் பூச்சி மாணவர்களும் காந்தியைக் கொன்றவர்களிடம் நீதியைக் கேட்டுப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
நீட் தேர்வு நடைமுறைக்கு வரும்போதே அதன் மக்கள் - மாணவர் பகைப் போக்கை முன்னுணர்ந்து உரிமைக் குரல் எழுப்பியது தமிழ்நாடும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் தான். அனிதாவின் இறப்பு தமிழ்நாட்டை உலுக்கியது. அதன் பின்னர் அரசுகள் நீட் தேர்வை நீக்கும் சட்ட முன்வடிவுகளை நிலவுகிற சனநாயக அமைப்பின் வழியில் சட்டமாக இயற்றி ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பினர். அதிமுக , திமுக என இரண்டு கட்சிகளும் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுத்து ஒன்றிய பா.ஜ.க அரசு அடாவடி செய்தது.
நீட் தேர்வின் கொடுமைகளை அம்பலப்படுத்தி முந்தைய திமுக அரசு உருவாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் ஆணையம் நாட்டிற்கே வழிகாட்டும் சிறப்பான முன்மொழிவுகளை வழங்கியது. நீட் தேர்வை அரசியல் சட்டப் பகையாக அறிவித்தது. தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய 2007 சட்டப்படி மாநில அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்த ஒன்றிய அரசுக்கு் உரிமையில்லை என்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்தின் படி வரையறை செய்யப்பட்ட அதிகாரங்கள் அடிப்படையில் பதிவு 32 ன் கீழ் நீட் போன்ற தேர்வை நடத்துவதற்கு அரசியல் சட்டப்படியே உரிமையில்லை இது அரசியல் சட்ட மீறல் என ஒரு பெரிய அரசியல் சட்ட ஆராய்ச்சியை நடத்தி தீர்வுகளை முன்மொழிந்தது.
ஒவ்வொரு முறையும் நீட் முறைகேடுகள் வரும்போதெல்லாம் தமிழ்நாடு நீட் விலக்கப்பட வேண்டும் ; கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட்வேண்டும் என்ற கோரிக்கைகளை வலுவாக எழுப்பியது.
நீட் தேர்வின் கொடுமைகளை பிறர் அறிந்துகொள்வதற்கு முன்னே தமிழ்நாடு போராடியது. இன்றைக்கு தில்லி தலைநகர் போராட்டம் கூட வரம்புக்குட்பட்ட அதாவது நீட் முறைகேடுகளை மட்டும் தான் எதிர்த்துப் போராடி வருகிறது. அதில் ஞாயம் உள்ளது. இருந்தபோதிலும் இந்த அநீதியான தேர்வுமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரல் தில்லியில் போராடும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் முழக்கமாக தமிழ்நாடு வழிகாட்டியிருக்க வேண்டும்.
ஆனால் நம்முடைய பொறுப்புவாய்ந்த முதல்வரும் அவருடைய அமைச்சர்களும் இன்னும் திரைப்பட வடிவிலான திரைக்கதையில் இருந்து வெளிவரவில்லை. சனநாயக அமைப்பில் ஆட்சியின் அவலங்களைக் கண்டிப்பதில் எதிர்க்கட்சிகளின் சொற்களில் தடித்தனம் இருக்கலாம் அதனைக் கண்டும் காணாமல் இருப்பதும் அல்லது செயல்களின் மூலம் எதிர்க்கட்சிகளின் வசைச் சொற்களை மக்கள் மன்றத்தில் செல்லாமல் செய்ய முடியும். ஆனால் நம்முடைய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது ? எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பதவி விலக வைத்துத் தன் கட்சியில் இணைத்துக் கொள்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சியையும் முதல்வரையும் தரந்தாழ்ந்து விமர்சிக்கிறார்கள் என்று அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்து வருகிறது.
திரைப்படத்தில் இருந்து வந்திருந்தாலும் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்வர் திரகப்பட வசனங்களைப் போல கிண்டலும் கேலியுமாக முன்னாள் முதல்வரைச் சட்டமன்றத்தில் பொறுப்பற்ற முறையில் விமர்சிக்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டும் பொறுப்புணர்வுடன் விமர்சிக்க வேண்டும் எனக்கோருவதில் ஏதேனும் ஞாயம் இருக்கிறதா?
துணைக்கண்டத்தின் இளைஞர்கள் மாணவர்கள் எதிர்காலத்தைச் சூறையாட வரும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து தமிழ்நாடு அரசு இந்நேரம் பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ததா? என்றால் கிடையாது.
சட்டமன்றத்தைக் கூட்டி நீட் தேர்வை நீக்கக் கோரி தீர்மானம் இயற்றியிருக்காலம். மீண்டும் ஒருமுறைகூட நீட் விலக்குச் சட்டத்தைக் கொண்டு வந்து ஒன்றிய அரசுக்கு இவ்வேளையில் நெருக்கடி கொடுக்காலாம். போராடும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் ( தமிழ்நாடு அரசால் இந்தி உள்ளிட்ட பிறமொழிகளில் ) அறிக்கையைப் போராடும் இளைஞர்களுக்கு வழங்கியிருக்கலாம். அரசின் மக்கள் பிரதிநிதிகள் யாராவது மாணவர்களைச் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்திருக்காலாம்.
நாட்டின் அரசியல் சமூகப்பொருளியல் சிக்கல்கள் குறித்து கருத்துகள் எதையும் கூறாமல் அமைதியாக இருந்து சனநாயகனாக வலம் வருவேன். அதைச் செய்வேன்; இதைச் செய்வேன் என்று வாதம் புரிவது சொற்போருக்கு உதவலாம். தமிழ்நாட்டுக்கு உதவாது.
வரலாற்று நெடுக நாம் பெற்றிருக்கிற வளர்ச்சிகள் உரிமை போராட்டத்தின் ஊடாகப் பெற்றது. இன்றைக்கு முன்னெப்போதையும்விட பறிபோகும் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் : வெல்ல வேண்டும்.
உண்மையில் இன்று என்ன நடக்கிறது? எனப்பாருங்கள். நாம் விட்ட இடம் புரியும்.
Comments (...)
You must be logged in to leave a comment.