பேராசிரியர் சாய்பாபா இன்று உயிரோடு இல்லை.

பேராசிரியர் சாய்பாபா இன்று உயிரோடு இல்லை. உள்ளத்தை உருக்கக்கூடிய அவருடைய நேர்காணல் வயர் இணையதளத்தில் இருக்கிறது.
சமூகத்தில் சுரண்டப்பட்ட அடக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்டார் என்பதே இந்த அரசுகளுக்கு அவர் மீது எழுந்திருக்கிற சீற்றத்திற்கான அடிப்படை.

பிறருடைய துயரைத் தன்னுடைய துயரைப் போலத் தாங்கி வாழ்ந்த ஒரு உன்னத உயிர் இந்தப் பூவுலகை விட்டுப் பிரிந்திருக்கிறது.

இந்த நாட்டில் மனித உரிமைக்காக வாழ்கிற ,போராடுகிற செயல்பாட்டாளர்களின் உடலும் உயிரும் எந்த அளவுக்கு நீதி கெட்ட அரசுப் பொறியமைவால் தண்டனைக்கு ஆளாக்கப்படுகிறது என்பதற்கு பேராசிரியர் சாய்பாபவிற்கு நேர்ந்த சிறைக் கொடுமைகள் ஓர் எடுத்துக்காட்டு.

நீதியை நிலைநாட்ட வேண்டிய அமைப்புகள் காலங்கடந்து வழங்குகிற விடுதலைத் தீர்ப்புகள் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அறம் சார்ந்த அரசியல் வகுப்பு இன்னும் கூடுதலாகப் போராடியிருக்கலாம்.

அருளாளர் ஸ்டேன்சாமியைத் தொடர்ந்து அரசின் மக்கள் பகைக் கொள்கையைக் கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக சாய்பாபா கொல்லப்பட்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

மண்டல் குழு அறிக்கையின் நீதிக்காகப் போராடத் தொடங்கிய அவருடைய வாழ்க்கை இறக்கும் வரை சமூகத்தில் அடக்குண்ட மக்களின் சமத்துவத்திற்காக ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

எத்தனை அடக்குமுறை வந்தாலும் அவருடைய கட்டுக் குலையாத உறுதி நமக்குப் பல பாடங்களைச் சொல்லித் தந்து போயிருக்கிறது.

மனிதத் துயர் நீங்க வேண்டும் என்று போராடிய உன்னத உயிர் நம்மைவிட்டு பிரிந்திருக்கிறது.

சாய்பாபாவைப் போன்றே மனித உரிமைப் பணியைத் தலைமேல் தூக்கிச் சுமந்து வாழும் பல உயிர்களும் பீமா கொரேகான் வழக்கு , குடியுரிமைச் சட்டத் திருத்த வழக்கு போன்ற பல ஊபா பொய் வழக்கின் காரணாமாக விசாரணைக் காலத்திலே சிறைப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பேராசிரியர் சாய்பாபாவின் இறப்பு ஏனைய குடியாட்சி செயற்பாட்டாளர்களின் விடுதலையை உந்தித் தள்ளட்டும்.
அரசியல் சிறைவாசிகள் விடுதலையை நோக்கி எழட்டும்!

செவ்வணக்கம் தோழரே!!!

குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *